Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருகோட்டாறு (தற்போது திருக்கொட்டாரம் என்று அழைக்கப்படுகிறது)
இறைவன் பெயர்ஐராவதேஸ்வரர்
இறைவி பெயர்வண்டார் பூங்குழலி அம்மை, சுகந்த குந்தளாமிபிகை
பதிகம்திருஞானசம்பந்தர் - 2
எப்படிப் போவது 1. காரைக்காலில் இருந்து 12 கி.மீ. தொலைவில் திருகோட்டாறு தலம் இருக்கிறது. காரைக்காலில் இருந்து திருநள்ளாறு, நெடுங்காடு வழியாக கும்பகோணம் செல்லும் சாலையில் நெடுங்காடு தாண்டிய பிறகு திருக்கொட்டாரம் கூட்டு சாலை என்ற பிரிவு வரும். அங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

2. கும்பகோணம் - காரைக்கால் பிரதான சாலையில் கொல்லுமாங்குடி, பேரளம் தாண்டியவுடன் அம்பகரத்தூர் என்ற ஊர் வரும். அவ்வூரிலுள்ள காளி கோவிலில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் இத்தலத்தின் ஐராவதேஸ்வரர் ஆலயம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து வருபவர்கள் இவ்வழியே வந்து ஆலயத்தை அடையலாம்.
ஆலய முகவரிஅருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில்
திருக்கொட்டாரம்
திருக்கொட்டாரம் அஞ்சல்
நெடுங்காடு வழி
திருவாரூர் மாவட்டம்
PIN - 609603

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 11-30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
Tirukottaram route map

அம்பகரத்தூர் காளி கோவிலில் இருந்து செல்லும் வழி
Map by: Google

தல வரலாறு: தேவேந்திரனின் வாகனமான ஐராவதம் ஒரு முறை துர்வாசரை அவமரியாதை செய்தது. ஒரு முறை துர்வாச முனிவர் காசியில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டு இறைவனுக்கு சாத்திய தாமரை மலர் ஒன்றை யானை மீது அமர்ந்து பவனி வரும் இந்திரன் கையில் கொடுத்தார். செல்வச் செருக்கால் இந்திரன் அம்மலரை ஒரு கையால் வாங்கி யானை மீது வைத்தான். யானை அம்மலரை தன் துதிக்கையால் கீழே தள்ளி காலால் தேய்த்தது. துர்வாசர் இந்திரனையும் யானையையும் சபித்தார். துர்வாச முனிவரின் சாபப்படி ஐராவதம் காட்டானையாகி நூறு ஆண்டுகள் பல தலங்களுக்கு சென்று இறைவனை வழிபட்டு மதுரையில் இறைவன் அருளால் பழைய வடிவம் பெற்றது என்பது திருவிளையாடல் புராண வரலாறு. அவ்வாறு வெள்ளை யானை (ஐராவதம்) சென்று வழிபட்ட பல தலங்களுள் திருகோட்டாறு தலமும் ஒன்று என்பர். வெள்ளை யானை தன் கோட்டினால் மேகத்தை இடித்து மழையை ஆறுபோலச் பெய்யச் செய்து வழிபட்டதால் இத்தலம் கோட்டாறு எனப் பெயர் பெற்றதென்பர்.

கோவில் அமைப்பு: மூன்று நிலைகள் கொண்ட கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் நம்மை வரவேற்கின்றது. உள்ளே சென்றதும் நேரே சுவாமி சந்நிதி தெரிகிறது. வலமாக வரும்போது விநாயகர் சந்நிதியுள்ளது. விசாலமான வெளிச் சுற்று. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும், பிரம்மா, விஷ்ணு உருவங்களும் உள்ளன. பிராகாரத்தில் சுந்தரர், பரவையார், சுபமகரிஷி மூலத்திருமேனிகள் காணப்படுகின்றன. உள் பிரகாரத்தில் பால விநாயகர், கைலாசநாதர், சமயாசாரியர், சடைமுடியோடு கூடிய சுப முனிவர், முருகன், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், சண்டேஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன், நடராஜர் முதலிய சன்னதிகள் உள்ளன. சுபமகரிஷியின் சிலையும், குமார புவனேஸ்வரரின் உருவச்சிலையும் வெளிச்சுற்றில் பின்புறத்தில் வைக்கப்பட்டுள்ளன. மூலவர் மிகச் சிறிய உருவில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

மூலவர் கருவறையில் தேன்கூடு உள்ளது. இந்த தேன்கூடு பல்லாண்டுக் காலமாக இருந்து வருகின்றது என்று சொல்கின்றனர். இத்தேன் கூட்டைப் பற்றிச் சொல்லப்படும் செவி வழிச் செய்தி பின்வருமாறு. சுபமகரிஷி என்பவர் தினந்தோறும் வந்து இப்பெருமானைத் தரிசித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் அவர் வருவதற்கு நேரமானதால் கோயில் கதவு மூடப்பட்டு விட்டது. அதைக் கண்ட சுபமகரிஷி தேனீ வடிவம் கொண்டு உள்ளே சென்று பெருமானை வழிபட்டார். அதுமுதல் அங்கேயே தங்கி விட்டார். அக்காலம் முதல் தொடங்கி மூலவர் சந்நிதியில் தேன்கூடு இருந்து வருகிறது. தரிசிக்கச் செல்வோர் அக்கூட்டைத் தொடாது எட்டி நின்று பார்த்துவிட்டு வரவேண்டும். ஆண்டுக்கொரு முறை இக்கூட்டிலிருந்து தேனையெடுத்துச் சுவாமிக்குச் அபிஷேகம் செய்கிறார்கள். மீண்டும் தேன்கூடு கட்டப்படுகின்றதாம். இந்த சுபமகரிஷியின் உருவமே வெளிச் சுற்றில் பின்புறத்தில் உள்ளது.

இத்தலத்திற்கான திருஞானசம்பந்தரின் பதிகங்கள் 2-ம் திருமுறையிலும், 3-ம் திருமுறையிலும் உள்ளன. கருந்தடங்கணின் மாதரார் இசை செய்யக் கார் அதிர்கின்ற பூம்பொழில் என்று தொடங்கும் பதிகம் 2-ம் திருமுறையிலும், வேதியன் விண்ணவர் ஏத்த நின்றான் விளங்கும் மறை என்று தொடங்கும் பதிகம் 3-ம் திருமுறையிலும் இடம் பெற்றுள்ளன.

Top
ஐராவதேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
3 நிலை இராஜகோபுரம்
கோபுர வாயில் கடந்து தோற்றம்
ஐராவதேஸ்வரர் சந்நிதி நுழைவாயில்
இறைவன் கருவறை விமானம்
இறைவன் கருவறை விமானம் மற்றொரு தோற்றம்
அம்பாள் கருவறை விமானம்
வெளிப் பிராகாரம்
வள்ளி தெய்வானையுடன் முருகர்
வெளிப் பிராகாரம்