Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருக்கடையூர் மயானம்
இறைவன் பெயர்பிரம்மபுரீஸ்வரர், பெரிய பெருமானடிகள்
இறைவி பெயர்நிமலகுசாம்பிகை, அமலக்குய மின்னம்மை
பதிகம்திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 1
சுந்தரர் - 1
எப்படிப் போவது மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மி. தொலைவில் உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தின் கிழக்கு கோபுர வாயிலில் இருந்து 2 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.
ஆலய முகவரிஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
திருமெய்ஞ்ஞானம்
திருக்கடையூர் அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 609311

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

சைவ சமயத்தில் ஜந்து தலங்கள் மயானம் என்று அழைக்கப்படுகின்றன. அவை காசி மயானம், கச்சி மயானம் (காஞ்சீபுரம்), காழி மயானம் (சீர்காழி), நாலூர் மயானம் மற்றும் கடவூர் மயானம் ஆகும். மயானம் எனபது சிவபெருமான் பிரம்மதேவரை எரித்து நீராக்கிவிட்ட இடமாகும். ஒரு பிரம்ம கர்ப்பத்தின் பலயுக முடிவில் சிவபெருமான் பிரம்மாவை எரித்து நீராக்கிவிட்டார். அவ்வாறு பிரம்மா சிவபெருமானால் எரிக்கப்பட்ட இடமே திருக்கடவூர் மயானம். தேவர்கள் யாவரும் ஒன்று கூடி திருக்கடவூர் மயானம் வந்து பிரம்ம தேவருக்கு மீண்டும் உயீர் வழங்க வேண்டி தவம் செய்தனர். இறைவன் அதற்கிணங்கி இத்தலத்தில் பிரம்மாவை உயிர்ப்பித்து அவருக்கு சிவஞானத்தை போதித்து படைக்கும் ஆற்றலை மீண்டும் வழங்கினார். பிரம்மா சிவஞானம் உணர்ந்த இடம் திருக்கடவூர் மயானம். ஆகவே இத்தலம் திருமெய்ஞானம் என்றும் அழைக்கப்படுகிறது.

அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பாடப் பெற்ற தலங்களில் திருக்கடையூர் மயானம் தலமும் ஒன்றாகும். மேற்குப் பார்த்த சிவஸ்தலங்களில் இத்தலமும் ஒன்று. ஆலயத்தின் நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்றவுடன் ஒரு பெரிய வெளிப் பிரகாரம் காணலாம்.நேர் எதிரே உள்ள 3 நிலை கோபுரத்தின் முன் நந்தி மண்டபம், பலிபீடம் உள்ளன. கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் தனி கருவறையில் சுற்றுப் பிரகாரத்துடன் மேற்கு நோக்கி அருள் புரிகிறார். சிவன் சந்நிதியில் வடபுறம் முருகர் சிங்காரவேலர் என்ற திருநாமத்துடன் தென்திசை நோக்கி அருள் புரிகிறார். சிங்காரவேலர் கையில் வில்லும், அம்பும் கொண்டு பாதக் குறடு அணிந்தும் காட்சியளிப்பது இவ்வாலயத்தின் தனிச்சிறப்பாகும்.

ஆலயத்தின் மேற்குப் பிரகாத்தில் தென்புறத்தில் சங்கு சக்கரத்துடன் நின்ற கோலத்தில் கிழக்கு முகமாக ஸ்ரீபிள்ளைபெருமாள் காட்சி தருகிறார். வெளிப் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் கிழக்குப் பார்த்த தனி கோவிலில் தனி சந்நிதியில் இறைவி நிமலகுசாம்பிகை கிழக்கு நோக்கி அருள் புரிகிறாள்.ஆலயத்தின் வெளியே தென்புறம் பிரம்ம தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்திற்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து எடுக்கப்படும் நீரைக் கொண்டு தான் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. என்றும் 16 வயதுடன் வாழ இறைவன் அருள் பெற்ற மார்க்கண்டேயர் சிவபூஜை செய்வதற்காக இக்கிணற்றில் கங்கையை சிவபெருமான் வரவழைத்துக் கொடுத்தார் என்பது தல வரலாறு. காசியில் இருந்து கங்கா தீர்த்தம் எடுத்து வந்தாலும் அபிஷேகம் கிடையாது. இந்த புனித நீரைக் கொண்டு மற்ற தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்தால் என்ன என்று கூறி பாகுலேயன் என்ற மன்னன் பிரம்மபுரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்த போது சிவலிங்கத்தின் உச்சியில் வெடிப்பு ஏற்பட்டது. அதற்கான தழும்பு இத்தல இறைவனின் திருமுடியில் காணப்படுகிறது. இத்தல பிரம்ம தீர்த்தத்தில் கங்கை வந்த நாள் பங்குனி மாதம் அஸ்வினி நட்சத்திரம் ஆகும். வருடந்தோறும் வரும் இந்த புண்ணிய நாளில் மட்டும் தான் பக்தர்கள் அனைவரும் புனித நீராடுவர்.

இவ்வாலயத்தின் தல விருட்சமாக கொன்றை மரம் விளங்குகிறது.

Top
பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
பிரம்மபுரீஸ்வரர் சந்நிதி நுழைவு கோபுரம்
சுவாமி சந்நிதி கோபுரம் முன் நந்தி மண்டபம், பலிபீடம்
பிரம்மபுரீஸ்வரர் சந்நிதி நுழைவு வாயில்
சிங்கார வேலர்
அம்பாள் சந்நிதி நுழைவு கோபுரம்
பிரம்ம தீர்த்தம்
பிரம்மபுரீஸ்வரர் சந்நிதி வெளிப் பிரகாரம்
அம்பாள் சந்நிதி உள்ள தனி கோவில்