தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருஆக்கூர் |
இறைவன் பெயர் | தான்தோன்றியப்பர், சுயம்புநாதர் |
இறைவி பெயர் | வாள்நெடுங்கண்ணி |
பதிகம் | திருநாவுக்கரசர் - 1 திருஞானசம்பந்தர் - 1 |
எப்படிப் போவது | மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து கிழக்கே 17 கி.மீ. தொலைவில் இருக்கிறது. ஆக்கூர் பேருந்து நிலையத்தின் வடபாகத்தில் இத்திருக்கோயில் அமையப்பெற்றுள்ளது. திருதலைச்சங்காடு என்ற பாடல் பெற்ற ஸ்தலம் இங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. |
ஆலய முகவரி |
அருள்மிகு தான்தோன்றியப்பர் திருக்கோவில் ஆக்கூர் அஞ்சல் மயிலாடுதுறை வட்டம் மயிலாடுதுறை மாவட்டம் PIN - 609301 இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
மயிலாடுதுறையில் இருந்து ஆக்கூர் தான்தோன்றியப்பர் ஆலயம் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps
கோச்செங்கட் சோழன் தனது முன்பிறவியில் யானையினால் ஏற்பட்ட இடர் காரனமாக, யானை ஏற முடியாத மாடக் கோவில்கள் 70 கட்டினான் என்று வரலாறு கூறுகிறது. ஆக்கூர் தான்தோன்றியப்பர் கோவிலும் அவ்வகையில் ஒரு மாடக்கோவிலாகும்
மாடம் என்னும் பெயர் கொண்ட திருக்கோயில்கள் இரண்டு தேவாரத்தில் காணப்படுகின்றன. ஒன்று நடுநாட்டுத் தலமான பெண்ணாகடத்தில் உள்ள தூங்கானை மாடம். மற்றொன்று காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றான ஆக்கூர் தான்தோன்றி மாடமாகும். யானை ஏறமுடியாத படிக்கட்டுகளை உடைய உயரமான தளத்தில் இறைவன் கருவறை அமையப்பெற்ற கோவில்கள் மாடக்கோயில் என்று பெயர் பெற்றன. ஊரின் பெயர் ஆக்கூர் ஆயினும் அங்குள்ள கோயிலுக்குத் தான்தோன்றிமாடம் என்று பெயர். அதாவது தான்தோன்றியப்பர் (சுயம்புமூர்த்தியாகிய இறைவர்) எழுந்தருளியிருக்கும் மாடக் கோயில் என்று பொருள்படும்.
கோவில் அமைப்பு: இவ்வாலயத்திறகு கிழக்கில் 3 நிலை இராஜ கோபுரமும் தெற்கில் ஒரு நுழைவாயிலும் உள்ளன. கோபுர வாயிலில் விநாயகர் காட்சி தருகிறார். கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்து நேரே சென்றால் நாம் இருப்பது கிழக்கு வெளிப் பிரகாரத்தில். நேரே கிழக்கு நோக்கி உயரமான மாடத்தில் இறைவன் கருவறை உள்ளது. படிகள் ஏறிச் சென்றால் பலிபீடத்தையும், நந்தியையும் நாம் தரிசிக்கலாம். இங்கு குடிகொண்டுள்ள தான்தோன்றியப்பர் ஒரு சுயம்பு லிங்கம் ஆவார். அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய தலங்களில் இத்தலமும் ஒன்றானதால் இறைவி வாள்நெடுங்கண்ணியின் சந்நிதி மூலவர் சந்நிதிக்கு வலதுபுறம் அமைந்திருக்கிறது. உள் சுற்றில் விநாயகர், முருகர், விஸ்வநாதர், விசாலாட்சி ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. சம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் திருஉருவச் சிலைகள் தனி சந்நிதியிலும், சுந்தரர் அவரது இரு மனைவியர் சங்கிலி நாச்சியார் மற்றும் பரவை நாச்சியார் திருஉருவச் சிலைகள் தனி சந்நிதியிலும் காணப்படுகின்றன. அடுத்து காலபைரவர், பைரவர், சூரியன் ஆகியோரின் திருஉருவச் சிலைகள் உள்ளன. 63 நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார் அவதரித்த தலம் ஆக்கூர். கருவறை அர்த்த மண்டபத்தில் இடதுபுறம் சிறப்புலி நாயனார் சந்நிதியும் அவருக்கு நேர் எதிரே வலதுபுறம் ஆயிரத்தில் ஒருவர் சந்நிதியும் அமைந்துள்ளன. இத்தலத்திறகுரிய சிறப்பு மூர்த்தி இந்த ஆயிரத்தில் ஒருவர்.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நானகு திருக்கரங்களுடனும் மயில் மீது கிழக்கு நோக்கிய சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். அருகே தேவியர் இருவரும் எழுந்தருளியுள்ளனர்.
ஆயிரத்தில் ஒருவர்: மன்னன் ஒருவன் இறைவன் கட்டளைப்படி தினமும் 1000 ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்ய முற்பட்டான். 48 நாட்கள் இந்த அன்னதானம் செய்ய வேண்டியிருந்தது. தினந்தோறும் 1000 இலை போட்டு உணவு பரிமாறினாலும் 999 பேர் மட்டுமே உணவருந்தினர். 47 நாட்கள் இவ்வாறு தினமும் ஒருவர் குறைவதைக் கண்ட மன்னன் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டான். 48-வது நாள் அந்தணர் உருவில் ஆயிரத்தில் ஒருவராக தானும் வந்து உணவருந்தி அமன்னனுக்கு அருள் புரிந்தார். பந்தியில் தானும் ஒருவராக அமர்ந்து இறைவன் உணவருந்திய பெருமையை உடையது இத்தலம்.
இத்தலத்து வேளாளர்களைத் திருஞான சம்பந்தப்பெருந்தகையார் இவ்வூர்ப் பதிகத்தில் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
வாளார்கண் செந்துவர்வாய் மாமலையான் றன்மடந்தை தோளாகம் பாகமாப் புல்கினான் தொல்கோயில் வேளாளன் என்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்கும் தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. பொழிப்புரை : ஒளி பொருந்திய கண்களையும், சிவந்தபவளம் போன்ற வாயினையும் உடையவனாய் இமவான் மகளாகிய பார்வதியைத் தன் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு அவள் தோளைத் தழுவிய சிவபெருமானது பழமையான கோயில், வள்ளன்மை உடைய, பிறர்க்கு உபகாரியாக விளங்கும் ஊக்கமுடைய வேளாளர்கள் மிகுந்து வாழும் ஆக்கூரில் விளங்கும் தான்தோன்றி மாடம் ஆகும்.
மேலும் தனது பதிகத்தில் ஆக்கூரைப் பற்றி குறிப்பிடும் போது - பல பிரிவுகளுடன் கூடிய நான்மறைகளையும், ஆறு அங்கங்களையும், பலகலைகளையும் கற்றுணர்ந்த, ஐவகை வேள்விகளையும் புரியும் அந்தணர்கள் வாழும் ஆக்கூர் என்றும், சிவபிரானின் பொன்போன்ற திருவடிகளுக்கு நாள்தோறும் பூவும் நீரும் சுமக்கும் சிவனடியார்கள் பலர் வாழும் ஆக்கூர் என்றும், இன்மையால் வந்து இரந்தவர்கட்கு இல்லையென்று கூறாது ஈந்து மகிழும் தன்மையார் வாழும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் என்றும் இத்தலத்தை சிறப்பித்துப் பாடியுள்ளார்.
Top