Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருநனிபள்ளி (தற்போது இத்தலம் புஞ்சை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது)
இறைவன் பெயர்நற்றுணையப்பர்
இறைவி பெயர்மலையாள் மடந்தை, பர்வதராஜ புத்திரி
பதிகம்திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 1
சுந்தரர் - 1
எப்படிப் போவது மயிலாடுதுறை - திருக்கடவூர் சாலை மார்க்கத்தில் உள்ள திருசெம்பொன்பள்ளி சிவஸ்தலத்தில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் இத்தலம் உள்ளது.
ஆலய முகவரிஅருள்மிகு நற்றுறணையப்பர் திருக்கோயில்
புஞ்சை (திருநனிபள்ளி)
கிடாரங்கொண்டான் அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
மயிலாடுதுறை மாவட்டம்
PIN - 609304

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
Nanipalli route map

செம்பொன்பள்ளியில் இருந்து திருநனிபள்ளி சிவாலயம் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

தல வரலாறு: திருஞானசம்பந்தரின் தாயார் பகவதியம்மையார் பிறந்த தலம் திருநனிபள்ளி. சம்பந்தர் தனது மூன்றாம் வயதில் சிவஞானம் பெற்றதையும், சிவபெருமான் அருளால் பெற்றாளம் பெற்றதையும் கேள்விப்பட்ட அவ்வூர் அந்தணர்கள் சம்பந்தர் தங்கள் ஊருக்கு எழுந்தருள வேண்டும் என்று கோரினர். அதற்கு இசைந்த திருஞானசம்பந்தர் தன் திருவடி நோக நனிபள்ளி நோக்கி நடந்தார். ஆளுடைய பிள்ளையார் கால்கள் நோக நடப்பதைக் கண்ட அவரது தந்தை சிவபாத இருதயர் ஞானசம்பந்தரை தனது தோளில் அமர்த்திக் கொண்டு சென்றார். தந்தையால் இது தான் திருநனிபள்ளி தலம் என்று கூற "காரைகள் கூகைமுல்லை களவாக ஈகை" எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடிக் கொண்டே நனிபள்ளி ஆலயத்தை அடைந்து இறைவனை வணங்கிப் போற்றினார். இப்பதிகமே பாலை நிலமாக இருந்த திருநனிபள்ளயை அவ்வூர் வாழ் மக்கள் வேண்டுகோளின்படி நெய்தல் நிலமாக மாற்றியருளிய பதிகம் என்று கூறப்படுகிறது. தனது தந்தை தோள் மீதமர்ந்து திருநனிபள்ளி அடைந்ததை சம்பந்தர் தனது பதிகத்தின் கடைசி பாடலில் குறிப்பிடுகிறார்.


கடல்வரை ஓதம்மல்கு கழிகானல் பானல் கமழ்காழி யென்று கருதப்
படுபொருள் ஆறும் நாலும் உளதாக வைத்த பதியான ஞான முனிவன்
இடுபறை ஒன்ற அத்தர் பியன்மேல் இருந்து இன் இசையால் உரைத்த பனுவல்
நடுஇருள் ஆடும் எந்தை நனிபள்ளி யுள்க வினை கெடுதல் ஆணை நமதே

பொழிப்புரை :		www.thevaaram.org

கடல் எல்லையில் உள்ள வெள்ளம் மிக்க கழிகளையும் சோலைகளையும் 
உடையதாய்க் குவளைமலரின் மணம் கமழும் காழி என்று கருதப்படும் 
பதியின்கண் நால்வேத, ஆறங்கங் களை அறிந்துணர்ந்தவனாய்த் தோன்றிய 
ஞானமுனிவன் தந்தையார் தோள்மேல் இருந்து இன்னிசையோடு உரைத்த 
இப்பதிகத்தை ஓதிப் பறை ஓசையோடு நள்ளிருளில் நடனமாடும் எந்தை 
நனிபள்ளியை உள்க வினைகள் கெடும் என்பது நமது ஆணையாகும். 

கோவில் அமைப்பு: மூவராலும் பாடப் பெற்ற தலங்களில் ஒன்று என்ற சிறப்பை இத்தலம் பெற்றுள்ளது. இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயிலின் மேலே ரிஷப வாகனத்தின் மீதமர்ந்த சிவன் பார்வதி, மூஞ்சூறு வாகனத்தின் மீதமர்ந்த விநாயகர், மயில் வாகனத்தின் மீதமர்ந்த முருகப் பெருமான் ஆகியோர் சுதைச் சிற்பங்கள் வடிவில் காட்சி அளிக்கின்றனர். உள்ளே கருவறையில் மூலவர் நற்றுணையப்பர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கித் தரிசனம் தருகின்றார். கோஷ்ட மூர்த்தங்களாக அகத்தியர், விநாயகர், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கோஷ்ட மூர்த்தங்கள் சிறந்த சிற்ப வேலைப்பாடுடன் அமைந்துள்ளன. கோவிலின் கருவறை நல்ல வேலைப்பாடுடையதாக அமைந்துள்ளது. இறைவன் நற்றுணையப்பர் கிழக்கு நோக்கித் தரிசனம் தருகின்றார். விநாயகர், அகத்தியர் இருவருக்குமே சிவபெருமான் தனது திருமண கோலத்தை காட்டியருளிய தலம் திருநனிபள்ளி. அகத்தியருக்கு இறைவன் திருமணக்கோலம் காட்டிய கல்யாண சுந்தரேசர் கோயில் உள்ளது.

இங்கு பர்வதராஜபுத்திரி, மலையான்மடந்தை என்ற திருநாமத்தில் இரண்டு அம்மன் அருள்பாலிக்கின்றனர். இங்கு சுவாமியின் வலது பக்கம் அம்மன் வீற்றிருக்கிறார். இது தவிர தனி சன்னதியில் மூலஸ்தானத்திலேயே அம்மனுடன் கல்யாணசுந்தரேஸ்வரர் காட்சி அளிக்கிறார். உட்பிரகாரத்தில் நால்வர், விநாயகர், சூரியன் சந்நிதிகளும் உள்ளன. மகாமண்டபத்தில் நடராசர் சபை உள்ளது. அத்துடன் "நனிபள்ளி கோடி வட்டம்" என்ற மண்டபம் மிகவும் அருமையாக கோயில் உள்ளே அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் 7-ம் நாள் முதல் 13-ம் நாள் வரை சூரியனின் கதிர்கள் சிவலிங்கத்தின் மீது படுகிறது. திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்குள்ள கல்யாணசுந்தரரை வணங்கினால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும், நற்றுணையப்பரை வணங்கினால் செல்வ செழிப்பு, குழந்தைகளின் படிப்பு சிறக்கும் என்பதும் நம்பிக்கை.

Top
நற்றுணையப்பர் ஆலயம் புகைப்படங்கள்
முகப்பு வாயில்
நற்றுணையப்பர் சந்நிதி
இறைவி பர்வதராஜபுத்திரி
சனகாதி முனிவர்களுடன் தட்சிணாமூர்த்தி
ஆலயத்தின் உட்புறத் தோற்றம்
கல்யாணசுந்தரர்
நந்தி மண்டபம், பலிபீடம்
கோஷ்டத்தில் விநாயகர்
கோஷ்டத்தில் அகத்தியர்
கோஷ்டத்தில் மகாவிஷ்ணு