Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருநீலக்குடி
இறைவன் பெயர்ஸ்ரீ மனோக்கியநாத சுவாமி, நீலகண்டேஸ்வரர்
இறைவி பெயர்ஸ்ரீபக்தபீஷ்டப்பிரதாயனி(தவக்கோல அம்மை),
ஸ்ரீ அனூபமஸ்தநி (அழகாம்பிகை)
பதிகம்திருநாவுக்கரசர் - 1
எப்படிப் போவது கும்பகோணம் - காரைக்கால் சாலையில் கும்பகோணத்தில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது தென்னலக்குடி என்ற திருநீலக்குடி. அருகில் உள்ள ரயில் நிலையம் ஆடுதுறை 4 கி.மீ. தொலைவில் இருக்கிறது. ஆடுதுறையில் இருந்ததும் திருநீலக்குடி வர சாலை வசதி உள்ளது. சாலையோரத்தில் கோயில் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு
ஸ்ரீ மனோக்கியநாத சுவாமி திருக்கோவில்
திருநீலக்குடி அஞ்சல்
திருவிடைமருதூர் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612108

இவ்வாலயம் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் திறந்திருக்கும்.

ஆலய தொடர்புக்கு: திரு V. அருணாசலம், கைபேசி: 9159455050
neelakudi route map

கும்பகோணத்தில் இருந்து திருநீலக்குடி ஆலயம் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

தல வரலாறு: மிருகண்டு முனிவர், அவரின் மனைவி புத்திரப் பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்கள் பக்திக்கு மெச்சி இறைவன் அவர்கள் முன் தோன்றி ஆயிரம் ஆண்டுகள் வாழும் துர்க்குணங்கள் நிறைந்த மகன் வேண்டுமா அல்லது 16 வயது வரை மட்டும் வாழும் தலைசிறந்த மகன் வேண்டுமா என்று கேட்க மிருகண்டு தமபதியினர் 16 வயது மகனே வேண்டும் என்று வரம் கேட்டனர். மிருகண்டு தம்பதியருக்கு இறைவன் அருளால் பிறந்த மார்க்கண்டேயர் சிறந்த சிவபக்தராக விளங்கினார். அவருக்கு 16 வயது நடக்கும் போது அவரின் பெற்றோர் இறைவன் கூறியபடி விதிக்கப்பட்ட ஆயுள் 16 வயது தான் என்பதை மார்க்கண்டேயருக்கு கூறினர். சிவபெருமானே அவரின் ஆயுளைக் காக்க முடியும் என்று மார்க்கண்டேயர் ஒவ்வொரு சிவஸ்தலமாக தரிசித்து வரும் போது திருநீலக்குடி தலத்திற்கும் வந்து ஈசனை வழிபட்டார். இங்கு வந்து நாளும் பொழுதும் சிவபெருமானை எண்ணி தியானிக்கிறார். முடிவில் இறைவன் அவர் முன் தோன்றினார். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறார். மார்க்கண்டேயர் தமது விருப்பத்தை சொன்னவுடன் அதுபடியே மார்க்கண்டேயருக்கு இத்தலத்தில் சிரஞ்சீவியாக இருக்க ஈசன் வரம் அளித்தார். அத்தகைய சிறப்பு பெற்ற தலம் திருநீலக்குடி

பாற்கடலை அமிர்தம் பெற வேண்டி தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டார். அது அவர் வநிற்றுக்குள் செல்லாமல் தடுக்க உமை அவரின் கழுத்தைப் பிடிக்க விஷம் அவர் கழுத்தில் தங்கியது. இறைவனும் நீலகண்டேஸ்வரர் என்று பெயர் பெற்றார்.

தலத்தின் சிறப்பு: இத்தலத்தில் இறைவன் நீலகண்டேஸ்வரருக்கு செய்யப்படும் நல்லெண்ணய் அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்குள்ள மூலவருக்கு எண்ணெய்யால் அபிஷேகம் செய்யும்போது பாத்திரம் பாத்திரமாக நிறைய எண்ணெய்யை சுவாமியின் மீது ஊற்றி அபிஷேகம் செய்வார்கள். எவ்வளவு எண்ணெய் ஊற்றி அபிஷேகம் செய்தாலும் அத்தனையும் சிவலிங்கத்திற்கு உள்ளேயே உறிஞ்சப்பட்டு விடுவது அதிசயமாக உள்ளது. நாள் பூராவும் எணணெய் அபிஷேகம் செய்தாலும் அத்தனையும் உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் அபிஷேகம் செய்த அடுத்த நாள் சுவாமியை பார்த்தால் அவரது சிவலிங்கத் திருமேனி கிட்டதட்ட 1 வருடமாக எண்ணெயே தடவாவது போல் அவ்வளவு உலர்ந்து காய்ந்து காணப்படும்.அபிஷேகம் செய்யப்படும் எண்ணெயெல்லாம் எங்கு மாயமாகிறது என்பது இத்தனை காலமும் யாருக்கும் புலப்படவில்லை. எண்ணெய் அபிஷேகம் செய்யப்பட்டுக் கொண்டே இருப்பதால் சிவலிங்கத் திருமேனி வழுவழுப்பாக இருப்பதற்கு பதில் சொர சொரப்பாகவே இருக்கிறது. ஈசன் ஆலகால விஷம் உண்டு தொண்டையில் விஷம் இருப்பதால் அந்த விஷத்தன்மை குறைக்க வேண்டியே இங்கு எண்ணெய் அபிஷேகம் செய்யப்படுகிறது என்பது ஐதீகம். சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட எண்ணெய் உட்கொண்டால் தீராத நோய்களும் குணமாகும்.

கோவில் அமைப்பு: இத்தலத்தில் இராஜ கோபுரம் இல்லை. இரண்டு நுழைவாயிலகள் உள்ளன. முதல் நுழைவாயில், 2-ம் நுழைவாயில் இரண்டிறகும் இடைப்பட்ட பகுதியில் உள்ள பிரகாரத்தில் நந்தி மண்டபம், கொடிமரம் மற்றும் பலிபீடம் உள்ளது. கருவறையில் இறைவன் ஸ்ரீ மனோக்கியநாத சுவாமி சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இத்தலத்தில் இரண்டு அம்மன் சந்நிதிகள் உள்ளன. ஒரு அம்மனின் பெயர் பக்தனது விருப்பத்தை நிறைவேற்றும் ஸ்ரீபக்தபீஷ்டப்பிரதாயனி என்கிற ஸ்ரீ தவக்கோல அம்மை. 2-வது அம்மனின் பெயர் திருமணக்கோலத்தில் உள்ள ஸ்ரீஅனூபமஸ்தநி என்கிற ஸ்ரீஅழகாம்பிகை.

ஐந்து இலைகள் கொண்ட வில்வமரம் இத்தலத்தின் தலவிருட்சமாக இருந்தாலும், கோயிலின் உட்பிரகாரத்தில் இருக்கும் பலா மரம் சிறப்பு வாய்ந்தது. இது தெய்வீகமான பலா மரம் என்று அழைக்கப்படுகின்றது. அந்த மரத்தில் காய்க்கும் பலாப்பழத்தை அறுத்து அதன் சுளைகளை சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பின்னர்தான் அதை நாம் சாப்பிட வேண்டும். ஆனால் சுவாமிக்கு நிவேதனம் செய்யாமல் பலாப்பழத்தையே வெளியில் எடுத்துக் கொண்டு போனால் நிச்சயமாக அப்பலாப்பழத்தில் வண்டுகள் உண்டாகிப் பழம் கெட்டுப் போகும் என்று சொல்லப்படுகிறது. பரீட்சித்து பார்ப்பதற்காக மீறி எடுத்துச்சென்று தண்டனை பெற்றவர்களும் உண்டென்று கூறுகிறார்கள்.

இத்தலத்தில் வழிபட்டால் ஆயுள் பலம் கூடும் என்பது ஐதீகம். எம பரிகாரம், ராகு தோஷ பரிகாரங்ள் இத்தலத்தில் பக்தர்களால் செய்யப்படுகிறது. தேவி தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஷீர குண்டம் என்று நான்கு சிறப்பு வாய்ந்த தீர்த்தங்களை கொண்ட தலமாக இக்கோவில் விளங்குகிறது. மேலும் பிரம்மா, தேவகண்டர், வசிஷ்டர், சூரபத்மன் ,காமதேனு ஆகியோர் வழிபட்டு சாப நிவர்த்தி பெற்ற தலம் என்ற பெருமையும், வருணனும் தேவகன்னியர்களும் பூஜித்து வரம் பெற்ற தலம் என்ற பெருமையும் இத்தலத்திற்கு உண்டு. ஸ்ரீ மனோக்கியநாத சுவாமியை வழிபட்டால் மனஅமைதி கிடைக்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து இறைவனை வழிபடலாம். பிரிந்திருக்கும் தம்பதியர் இங்குள்ள திருநீலகண்டரை மனமுருக வழிபட்டால் மீண்டும் ஒன்று சேர்ந்து இல்லறம் நடத்துவர். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

இத்தலத்தில் நடைபெறும் சித்திரைப் பெருவிழா சிறப்புடையது. மார்க்கண்டேயருக்கு இத்தலத்தில் சிரஞ்சீவி பதம் தரப்பட்டதால்,அதற்கு நன்றிக் கடனாக மார்க்கண்டேயர் இறைவனை பல்லக்கில் வைத்து இளந்துளை,ஏனாதிமங்கலம், திருநாகேசுவரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவகுடி என்று ஊர் ஊராக அழைத்துச் சென்றார். இவ்விழாவில் பன்னிரண்டாம் நாளில் சுவாமி பல்லக்கில் புறப்பட்டு ஏழூர் சென்று வருவது அற்புதமான காட்சியாகும். இந்த நிகழ்ச்சியை நினைவுகூறும் முகமாகவே இத்தலத்து சித்திரைத் திருவிழா நடத்தப்படுகிறது.(ஏழூர்களாவன - இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேச்சுரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவக்குடீ, திருநீலக்குடி). இத்தலத்தில் பெருமான் மார்க்கண்டேயருக்கு அருள் புரிந்திப்பதால் திருவிழாக்காலத்தில் சுவாமிக்கு முன்னால் எதிர்முகமாக மார்க்கண்டேயர் உற்சவமூர்த்தியாக செல்கிறார்.

திருநாவுக்கரசு சுவாமிகள் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. பல்லவ மன்னன் அமணர்களின் ஆலோசனைப்படி அப்பர் பெருமானை கல்லோடு கட்டிக் கடலில் வீழ்த்திய போது, அவர் இத்தலத்து இறைவனைத்தான் ஆத்மார்த்தமாகப் பாடி உயிர்பெற்றதாக இத்தலக் குறிப்பு கூறுகிறது. இத்தலத்து பதிகத்தின் 7-வது பாடலில் அப்பர் இதனைக் குறிப்பிடுகிறார். "அமணர்கள் பேச்சைக் கேட்டு கல்லினோடு என்னைச் சேர்த்துக்கட்டி மன்னர் உத்திரவின்படி கடலில் வீச, என் வாக்கினால் நெல்வளம் உடைய நீண்ட வயல் சூழ்ந்த நீலக்குடி இறைவனுடைய நல்ல நாமத்தைச் சொல்லி நன்றே உய்ந்தேன்" என்று அப்பர் பாடியுள்ளார். மேலும் தனது பதிகத்தில் "தேடிவைத்த செல்வமும், மனைவியும், மக்களும் நீர் இறக்கும் போது உம்முடன் வரார், ஆகையால் நாள் தோறும் நினைத்து தொழுது சிவகதி சேர்வீர் என்றும், உயிர் உடலை விட்டுப் பிரிந்துபோவதற்கு முன்பே, நிழல் உடையதாய்ச் செறிந்த பொழில்களையுடைய நீலக்குடி இறைவனுடைய கழலணிந்த சேவடிகளைக் கைகளால் தொழுது உய்வீர்களாக" என்றும் அறிவுறுத்துகிறார்.

Top
நீலகண்டேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
முதல் முகப்பு வாயில்
2-வது முகப்பு வாயில், நந்தி மண்டபம்
நந்தி மண்டபம், பலிபீடம், கொடிமரம்
ஸ்ரீபக்தபீஷ்டப்பிரதாயனி சந்நிதி
ஸ்ரீ அனூபமஸ்தநி சந்நிதி
ஸ்ரீ மனோக்கியநாத சுவாமி சந்நிதி
எண்ணெய் அபிஷேகம் செய்ய உபயோகிக்கும் பாத்திரம்
பிரகாரத்தில் பலாமரம்