Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருநல்லூர்
இறைவன் பெயர்பஞ்சவர்ணேஸ்வரர், கல்யாண சுந்தரேஸ்வரர்
இறைவி பெயர்கல்யாணசுந்தரி, கிரிசுந்தரி
பதிகம்திருநாவுக்கரசர் - 2
திருஞானசம்பந்தர் - 3
எப்படிப் போவது தஞ்சாவூர் - கும்பகோணம் பேருந்து சாலையில் உள்ள ஊர் பாபநாசம். பாபநாசத்தை அடுத்து வரும் வாழைப்பழக்கடை என்ற ஊரில் இருந்து பிரியும் சாலையில் 1 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். தஞ்சாவூரில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவிலும் இத்தலம் உள்ளது. பாபாநாசத்தில் இருந்து வாழைப்பழக்கடை வழியாக கோவிந்தக்குடி செல்லும் சாலையில் இத்தலம் உள்ளது.
ஆலய முகவரிஅருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்
திருநல்லூர் கிராமம்
திருநல்லூர் அஞ்சல்
(வழி) சுந்தரப்பெருமாள் கோயில்
வலங்கைமான் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 614208.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
Thirunallur route mapகும்பகோணத்தில் இருந்து திருநல்லூர் சிவஸ்தலம் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

கோவில் அமைப்பு: இவ்வாலயம் கோச்செங்கட் சோழன் கட்டிய ஒரு மாடக்கோவிலாகும். இறைவன் சந்நிதி ஒரு கட்டுமலை மீது அமைந்துள்ளது. ஐந்து நிலை அழகான ராஜ கோபுரம் மற்றும் 3 நிலைகளையுடைய உள் கோபுரம் கொண்டு இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழந்தால் ஒரு விசாலமான இடம் உள்ளது. இந்தப் பிரகாரத்தில் கவசமிட்ட கொடிமரமும், அதற்கு முன்னால் கொடிமர விநாயகரும் உள்ளார். இதையடுத்து வடபுறம் வசந்த மண்டபமும், தென்புறம் அமர்நீதி நாயனார் தராசுத் தட்டில் ஏறி அமர்ந்த துலா மண்டபமும் உள்ளன. அம்பாள் கிரிசுந்தரி தனி சந்நிதியில் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். அகத்தியர், காசி விஸ்வநாதர், கணநாதர், காசி விநாயகர், பாணலிங்கம், விஸ்வநாதர், முருகன், நால்வர், குந்திதேவி, தெட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நடராஜர் ஆகியோரை மண்டபங்களிலும், பிரகாரத்திலும் தரிசிக்கலாம். தலவிருட்சமான வில்வ மரம் மிகவும் பழமையானது. இதை "ஆதிமரம்" என அழைக்கின்றனர். 63 நாயன்மார்களில் ஒருவரான அமர்நீதி நாயனார் தனது மனைவி மற்றும் மகனுடன் சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு முக்தி பெற்ற தலம் திருநல்லூர். இத்தலத்தில் அமர்நீதி நாயனார், அவர் மனைவி, மகன், அருகில் அந்தணர் உருவில் இறைவன் ஆகியோர் உருவச் சிலைகள் இருப்பதைக் காணலாம்.

திருப்புகழ் தலம்: இத்தலத்திலுள்ள முருகப் பெருமான் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றுள்ளார். முருகப் பெருமான் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி, தெய்வானை சமேதராய் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது.

தல வரலாறு: ஒருசமயம் ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் தமக்குள் யார் வலியவர் என்பதில் போட்டி எழுந்தது. ஆதிசேடன் கயிலையைத் தன் ஆயிரம் மகுடங்களாலும் இறுகப்பற்றிக் கொள்ள, வாயுதேவன் சண்டமாருதமாக மலையை அசைக்க முற்பட்டு பலத்த காற்றை வீசினார். இந்த இருவரின் போட்டியால் தேவர்கள் அஞ்சினர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி ஆதிசேடன் தன்பிடியைச் சிறிது தளர்த்தினார். இது தான் தக்க சமயமென்றெண்ணி வாயு இரு சிகரங்களைப் பெயர்த்துக் கொண்டு வந்து தென்னாட்டில் ஒன்றை திருநல்லூரிலும், மற்றொன்றை அருகிலுள்ள ஆவூரிலும் விடுவித்தார். நல்லூரில் விழுந்த அம்மலைச் சிகரமே இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் எழுந்தருளியுள்ள மலையாகும். தென் கயிலாயம் என்று இத்தலமும் வழங்கப்படுகின்றது.

இமயமலையில் உமாதேவியை சிவபெருமான் திருமணம் செய்யும் காட்சியைக் காண உலகத்திலுள்ள அனைத்து ஜீவகோடிகளும் திரண்டு சென்றனர். இதனால் வடதிசை பாரத்தால் தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. உலகை சமப்படுத்த அகத்தியரை தென்திசைக்கு செல்லும்படி சிவபெருமான் பணித்தார். தனக்கு திருமண காட்சி காணும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே என்ற அகத்தியரிடம், "நீ வேண்டும் போது நான் உனக்கு திருமணகாட்சி அருளுகிறேன்"'என்றார் சிவன். அதன்படி அகத்தியர் சிவனின் திருமணக்கோலம் கண்ட பல தலங்களில் திருநல்லூர் தலமும் ஒன்றாகும். இதைக்கண்டு மகிழ்ந்த அகத்தியர் இங்குள்ள சுந்தரலிங்கத்தின் வலதுபுறம் மற்றொரு லிங்கத்தை வைத்து பூஜித்து பேறுபெற்றார். அன்று அவர் தரிசித்த திருமணக்கோல மூர்த்தியை மூலலிங்கத்தின் பின்புறம் கருவறையில் காணலாம்.

சிறப்பம்சம்: இங்குள்ள மூலவர் பஞ்சவர்ணேஸ்வரர் சிவலிங்கத் திருமேனி ஒரு நாளில் பகல் ஒன்றில் 6 நாழிகைக்கு ஒரு முறை ஐந்து தடவை நிறம் மாறுகிறார். முதலில் தாமிர நிறம், அடுத்து இளம் சிவப்பு, அடுத்து உருக்கிய தங்க நிறம், இதையடுத்து நவரத்தின பச்சை, பிறகு இன்ன நிறமென்றே கூற முடியாத ஒரு தோற்றத்தில் காட்சி தருகிறார். எனவே தான் மூலவருக்கு பஞ்சவர்ணேஸ்வரர் என்று திருநாமம். இத்தல மூலவர் சுயம்பு லிங்கமாக சதுர ஆவுடையாருடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார் . பிருங்கி முனிவர் வண்டு உருவில் இறைவனை வழிபட்டதால் லிங்கத்தில் துளைகள் இருப்பதைக் காணலாம். சிவலிங்கத்தின் பின்னால், அகத்தியருக்குத் திருமணக் கோலம் காட்டியருளிய கல்யாண சுந்தரர் உருவம் சுதை வடிவில் காட்சியளிக்கின்றது. இருபக்கத்திலும் திருமாலும், பிரம்மாவும் காட்சி தர, அகத்தியர் வழிபடும் நிலையில் நிற்கின்றார். மூலவருக்குப் பக்கத்தில் ஒரு சிறிய லிஙம் அமைக்கப்பட்டுள்ளது. இது அகத்திய லிங்கம் எனப்படுகிறது. ஒரே ஆவுடையார் மீது இரண்டு பாணங்கள் இருப்புது ஒரு சிறப்பம்சம்.

முசுகுந்த சக்கரவர்த்தி இந்திரனிடமிருந்து தியாகராஜரைப் பெற்று திருவாரூர் செல்லும் போது, இத்தலத்தில் 3 நாள் இருந்து தியாகராஜரை வைத்து பூஜை செய்துள்ளார் என்ற பெருமையை உடையது இக்கோவில். இரண்டு பிரகாரங்களை உடைய இக்கோவிலின் தெற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள அஷ்டபுஜ காளி சந்நிதியும் சிறப்பு வாய்ந்தது. எட்டு கைகளுடன் சூலாயுதம் தாங்கி அமர்ந்துள்ள கோலம் தரிசிக்கத் தக்கது. கருவுற்ற பெண்கள் நல்ல முறையில் குழந்தையை ஈன்றெடுக்க இங்கு காளி சந்நிதியில் வளைகாப்பு போட்டுக் கொள்ளும் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

பாண்டவர்களின் தாய் குந்தி தேவி பஞ்சபூதங்களினால் குழந்தை பெற்றதாலும், கர்ணனை ஆற்றில் விட்டதாலும் அவளுக்கு தோஷம் தொற்றிக் கொள்கிறது. இந்த தோஷம் நீங்க குந்தி இறைவனிடம் முறையிட்டாள். ஒரேநாளில் ஏழு கடலில் நீராடினால் மனநிம்மதி கிடைப்பதுடன் செய்த பாவமும் நீங்கும் என்று அறிந்தாள். அது எப்படி சாத்தியம் என அவள் கலங்கியபோது, ஏழுகடல் தீர்த்தமும் ஒரே இடத்தில் கலந்த "சப்தசாகர தீர்த்தம்" தென்னகத்தில் நல்லூர் எனப்படும் இத்தலத்தில் இருப்பதை அறிந்தாள். இத்தலம் வந்து சிவபூஜை செய்து இங்கு வந்து சப்தசாகர தீர்த்தத்தில் நீராடி மனநிம்மதி அடைந்தாள். மகம் நட்சத்திரத்தில் பிறந்த குந்தி இத்தலத்தில் நீராடி தன் தோஷம் நீங்கப் பெற்றது ஒரு மாசிமக நாளாகும். எனவே இந்த சப்தசாகர தீர்த்தத்தில் நீராடுவதால் கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடிய பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. இதை மெய்ப்பிக்கும் வகையில் குந்தி சிவபூஜை செய்யும் சிற்பம் இங்கு இருக்கிறது.

திருநாவுக்கரசர் திருச்சத்திமுற்றத்தில் இறைவன் தன்னுடைய திருப்பாதங்களைத் தன் தலைமேல் வைத்து அருளவேண்டும் என்று இறைவனிடம் பதிகம் பாடி வேண்டுகோள் வைத்தார். அவரின் வேண்டுகோளை திருநல்லூர் தலத்தில் இறைவன் நிறைவேற்றுகிறார். தம் திருவடிகளை அப்பரின் தலைமீது இத்தலத்தில் சூட்டி அருளினார். அப்பேறு பெற்ற திருநாவுக்கரசர் இறைவனை பதிகம் பாடி தொழுதார். இதன் காரணமாக பெருமாள் கோயிலில் சடாரி சாத்தும் வழக்கம் போன்று இத்தலத்தில் சிவன் பாதம் பொறித்த சடாரியை பக்தர்களுக்கு வைக்கும் பழக்கம் ஏற்பட்டது. பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் இறைவன் தன் திருவடியை சூட்டி அருளியதை குறிப்பிட்டுப் பாடுகிறார்.

Top
பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
இறைவி கிரிசுந்தரி அம்பாள்
மூலவர் பஞ்சவர்னேஸ்வரர்
அஷ்டபுஜ காளி
நந்தி மண்டபம், பலிபீடம், கொடிமரம்
வள்ளி, தெய்வானையுடன் முருகர்
5 நிலை இராஜகோபுரம் - உள்ளிருந்து தோற்றம்
3 நிலை இரண்டாவது கோபுரம்
மங்கையற்கரசி, அமர்நீதி நாயனார்
குந்தி சிவபூஜை செய்யும் சிற்பம்
சப்தசாகர தீர்த்தம்