பதஞ்சலிநாதர் திருக்கோவில், திருக்கானாட்டுமுள்ளூர்
சிவஸ்தலம்
திருக்கானாட்டுமுள்ளூர்
இறைவன்
பதஞ்சலி ஈஸ்வரர்
இறைவி
கானார்குழலி அம்மை, அம்புஜாட்சி
பதிகம்
சுந்தரர் - 1
திருக்கானாட்டுமுள்ளூர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது
கொள்ளிடக்கரையில் உள்ள இத்தலத்தை அடைய சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்குடி சென்று, அங்கிருந்து ஓமாம்புலியூர் செல்லும் பேருந்துச் சாலையில் சென்று, மோவூர் என்ற கிராமத்தைத் தாண்டி மேலும் சென்று, சாலையில் முட்டம் என்று வழிகாட்டிக்கல் உள்ள இடத்தில் பிரியும் சாலையில் 3 கி.மீ. சென்று முட்டம் கிராமத்தையடைந்து, ஊருள் புகுந்து செல்லும் சாலை வழியே சுமார் 2 கி.மீ. செல்ல இத்தலம் வரும். குறுகலான சாலை. கோயில் வரை வாகனத்தில் செல்லலாம். ஓமாம்புலியூரிலிருந்தும் இத்தலத்திற்கு இவ்வழியே வரலாம். காட்டுமன்னார்குடியில் இருந்து கமலம் என்ற மினி பேருந்து கானாட்டம்புலியூர் வழியாக முட்டம் செல்கிறது. கானாட்டம்புலியூர் நிறுத்தத்தில் இறங்கி சுமார் அரை கி.மீ. நடந்து சென்று இக்கோவிலை அடையலாம்.
ஆலய முகவரி
கானாட்டம்புலியூர்
முட்டம் அஞ்சல்
காட்டுமன்னார்குடி வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN - 608306
ஆலய நேரம்
காலை : 7:00 - 9:00
மாலை : 6:00 - 7:30
அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
பரிகாரத் தலம்
சிம்ம ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலம் பதஞ்சலிநாதர் கோவில், திருக்கானாட்டுமுள்ளூர்
தல வரலாறு
பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவிடம் சிவபெருமானின் நடனத்தை தரிசனம் செய்யும் விருப்பத்தை வெளியிட்டார் ஆதிசேஷன். மகாவிஷணுவின் ஆணைப்படி பதஞ்சலி முனிவராக அவதாரம் எடுத்து சிவபெருமானை நோக்கி தவம் இருந்தார். சிவன் அவருக்கு சிதம்பரத்தில் தன் நடனக் காட்சியை காட்டி அருளினார். பதஞ்சலி முரிவர் ஒருமுறை இத்தலத்திற்கு வந்தார். வந்த இடத்தில் சிவபெருமானின் நடனத்தைக் காணவேண்டும் என்று விருமினார். அவருக்கு சிவன் இத்தலத்திலும் தன் நடனத்தைக் காட்டி அருள் செய்தார். பதஞ்சலி ஈஸ்வரர் என்ற பெயரையும் இத்தல இறைவன் பெற்றார்.
கோவில் அமைப்பு
ராஜகோபுரம்
கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. கோபுரத்திற்கு வெளியே எதிரில் சூரிய தீர்த்தம் உள்ளது. கோபுர வாயிலை க் கடந்து உள்ளே சென்றால் முன்னுள்ள மண்டபத்தில் பலிபீடமும், நந்தியும் உள்ளனர். வலதுபுறம் அம்பாள் கானார்குழலி அம்மையின் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. அம்பாளுக்கு அம்புஜாட்சி, கோலவளைக்கை அம்பிகை என்ற பெயர்களும் உண்டு. அம்பாள் சந்நிதிக்கு வரதுபுறம் சனீஸ்வரர் தனி சன்னதியில் இருக்கிறார். சனிதோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனைகள் செய்து கொள்கின்றனர். முன்மண்டபத்தில் இரண்டு நாகங்களுக்கு நடுவே கிருஷ்ணனும், அருகே நாகங்களுக்கு நடுவே லிங்கமும் இருக்கிறது.
மூலவர் பதஞ்சலி ஈஸ்வரர்
முன் மண்டபம் தாண்டி நேரே உள்ளே சென்றால் மூலவர் பதஞ்சலி ஈஸ்வரர் சிறிய லிங்க உருவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதத்தில் 3 நாட்கள் சூரியன் தன் ஒளியை சூரியன் மீது பரப்பி பூஜிக்கிறார். கருவறை கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறைச் சுற்றில் மகாவிஷ்ணுவிறகு நேர் எதிரே வள்ளி தெய்வனை சமேத முருகர் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அருகில் கஜலட்சுமிக்கும் தனி சந்நிதி உள்ளது. கருவறைச் சுற்றில் காசி விஸ்வநாதர், காசிவிசாலாட்சி, நிருதிவிநாயகர் ஆகியோரும் தனி சந்நிதிகளில் அருள் பாலிக்கின்றனர். கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்திக்கு மேல் கல்லால மரம் இல்லை. நடராஜர் சந்நிதிக்கு எதிரே நால்வருடன் விநாயகரும், பதஞ்சலி முனிவரும் காணப்படுகின்றனர். நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு சுவாமி மற்றும் பதஞ்சலியிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை.
பஞ்ச புலியூர் தலங்கள்
புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், தன் தந்தை மாத்தியந்தினரிடம் தில்லை நடராஜரின் பெருமையை கேட்டறிந்து, அங்கு வந்து திருமூலநாதரை வழிபட்டு வந்தார். அன்று மலர்ந்த பூக்களைப் பறித்து வந்து இறைவனுக்கு அர்ச்சிப்பது இவரது வழக்கம். பொழுது புலர்ந்தால் வண்டுகள் மலர்களிலுள்ள மகரந்தத்தை உண்பதால் பூக்களின் தூய்மை போய்விடுகிறது என்று நினைத்த அவர், முன் இரவிலேயே மரங்களில் ஏறி பூ பறிக்க புலிக்கால்களையும், அம்மலர்களை ஆராய்ந்து பார்த்து பறிக்க புலியின் கண்களையும் பெற்றார். அதனால் இவருக்கு வியாக்ரபாதர் (வடமொழியில் வியாக்ரம் என்றால் புலி) என்று பெயர் வந்தது. தமிழில் புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்பட்டார். வீயாகரபாதர் வழிபட்ட தலங்கள் புலியூர்த்தலங்கள் என்று அறியப்படுகிறது. அவை :-
- திருஎருக்கத்தம்புலியூர்
- திருப்பாதிரிப்புலியூர்
- பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்)
- ஓமாம்புலியூர்
- திருக்கானாட்டுபுலியூர்
- திருப்பெரும்புலியூர்
பஞ்ச புலியூர் தலங்களில் இத்தலமும் ஒன்று. இவற்றில் திருஓமாம்புலியூர் இத்தலத்திலிருந்து அருகில் உள்ளது. எருக்கத்தம்புலியூர், திருப்பாதிரிப்புலியூர் ஆகிய இரண்டும் நடுநாட்டுத் தலங்கள். பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்), ஓமாம்புலியூர், கானாட்டம்புலியூர் ஆகிய மூன்றும் காவிரி வடகரைத் தலம்.
சுந்தரர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது
பதிகம்
சுந்தரர்
திருக்கானாட்டுமுள்ளூர் ஆலயம் புகைப்படங்கள்