A
தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்
ஞானபுரீஸ்வரர் திருக்கோவில், திருஇடைச்சுரம் (திருவடிசூலம்)

சிவஸ்தலம் பெயர்: திருஇடைச்சுரம் (தற்போது திருவடிசூலம் என்று வழங்குகிறது)

இறைவன் பெயர்: ஞானபுரீஸ்வரர், இடைச்சுரநாதர்

இறைவி பெயர்: கோவர்த்தனாம்பிகை, இமயமடக்கொடி அம்மை

பதிகம்: திருஞானசம்பந்தர் - 1

ஞானபுரீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது

செங்கல்பட்டில் இருந்து திருப்போரூர் போகும் சாலை மார்க்கத்தில், செங்கல்பட்டில் இருந்து கிழக்கே சுமார் 9 கி.மீ. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு பேருந்து திருவடிசூலம் செல்கிறது. மற்ற நாட்களில் செங்கல்பட்டிலிருந்து திருப்போரூர் வரை செல்லும் (T50) பேருந்தில் ஏறி திருவடிசூலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 850 மீட்டர் தொலைவில் உள்ள கோவிலை அடையலாம்.

ஆலய முகவரி
அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோவில்
திருவடிசூலம்
வழி செம்பாக்கம்
காஞ்சீபுரம் மாவட்டம்
PIN - 603108
கோவில் நேரம்

காலை: 8:00 AM - 12:00 PM
மாலை: 4:00 PM - 7:00 PM
ஞாயிறு: காலை 12 மணி வரை | பிரதோஷம்: இரவு 7 மணி வரை

வரைபடம்
பரிகார ஸ்தலம்

சகல நோய்களும் நீங்கும் ஞானபுரீஸ்வரர் கோவில் திருஇடைச்சுரம்.

மேலும் படிக்க
கோவில் அமைப்பு

தொண்டை நாட்டுத் தலங்கள் வரிசையில் 26-வது தலமான திருஇடைச்சுரம் (திருவடிசூலம்) பல குன்றுகளுக்கு நடுவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் திருவடிசூலம் கிராமத்தில் அமைந்துள்ளது. கோவிலுக்கு தெற்கு நோக்கிய ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது. கோவிலுக்கு வெளியே இடதுபுறம் வரசித்தி விநாயகர் சந்நிதி உள்ளது. நுழைவாயில் வழியாக உள்ளே சென்றால் விசாலமான தெற்கு வெளிப் பிரகாரத்தில் நேரே வலம்புரி விநாயகர் சந்நிதியைக் காணலாம். சிலவருடங்களுக்கு முன் கோவிலுக்கு ஐந்து நிலையுடன் கூடிய ராஜ கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

வெளிப் பிரகாரம்

வெளிப் பிரகாரம் வலம் வரும்போது கிழக்குப் பிரகாரத்தில் பலிபீடமும் நந்தியும் உள்ளன. இப்பிரகாரத்தில் பிரம்மாண்டேஸ்வரர் சந்நிதியும் உள்ளது. அருகில் வேப்பம், அரசு, வில்வம் ஆகிய மூன்று மரங்களும் இணைந்து வளர்ந்திருப்பதைக் காணலாம். கிழக்குப் பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் உள்ள சந்நிதியும் உள்ளது. பிரகார வலம் முடிந்து மீண்டும் தெற்குப் பிரகாரம் வந்தால் தல விருட்சங்களான வில்வம், வேம்பு, அரசமரம் ஆகிய மூன்றும் ஒரே இடத்தில் ஒன்றுடன் மற்றொன்று இணைந்து வளர்கின்றன. இந்த வில்வ மரத்திற்கு அருகில் ஒரு பாம்புப் புற்று உள்ளது, இது விநாயகர் வடிவில் காட்சி தருகிறது.

இங்கு காண வேண்டிய மற்றொரு சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், வெளிப்புற தாழ்வாரத்தில் ஒரு ஆலமரம் படிப்படியாக ஒரு பனை மரத்தை விழுங்குகிறது. கோவிலின் உள்ளே இருக்கும் பிரம்மாண்டேஷ்வரர் சந்நிதி அருகில் இருந்து பார்த்தால் மேலே பனை மர உச்சியையும், கீழே ஆலமரம் இருப்பதை தெளிவாக காணலாம். கோவிலின் வெளியே காட்சிகுளம் உள்ளது.

உட்பிரகாரம்

தெற்குப் பிரகாரத்திலுள்ள மற்றொரு நுழைவாயில் வழியே உள்ளே சென்றால் அநேக தூண்களுடன் ஒரு பெரிய மண்டபம் உள்ளது. மண்டபத்தை அடுத்து நேரே தெற்கு நோக்கிய இறைவி கோவர்த்தனாம்பிகை சந்நிதியைக் காணலாம். சந்நிதிக்குள் நுழைந்தால் இடதுபுறம் கிழக்கு நோக்கிய இறைவன் ஞானபுரீஸ்வரர் சந்நிதி உள்ளது. ஒரே இடத்தில் நின்றபடி இறைவன், இறைவி இருவரையும் தரிசிக்கலாம். மூலவர் சந்நிதிக்கு இருபுறமும் விநாயகரும் முருகப்பெருமானும் காட்சியளிக்கின்றனர்.

கருவறை அகழி அமைப்புடன் காணப்படுகிறது. கருவறை வலமாகச் சுற்றி வரும்போது நால்வர் சந்நிதி, விநாயகர் சந்நிதி, வள்ளி தெய்வயானை உடனாகிய சுப்பிரமணியர் சந்நிதி ஆகியவை காணப்படுகின்றன. அடுத்து பைரவரும் தரிசனம் தருகிறார். கோஷ்ட மூர்த்தங்களாக தட்சினாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

மரகத லிங்கம்

இத்தலத்தின் சிறப்பு மூலவர் லிங்கத் திருமேனியாகும். இந்த சுயம்பு லிங்கம் ஒரு மரகத லிங்கம். சதுர பீட ஆவுடையார். சிவலிங்கத் திருமேனியில் தீபாராதனை செய்யும்போது அவ்வொளி பிரகாசமாக லிங்க பாணத்தில் தெரிகின்றது. தினமும் காலை 8 மணி அளவில் இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். தேனில் அபிஷேகம் செய்யும்போது இறைவன் திருமேனி மரகத மேனியாக தெரிவதை உணர முடியும்.

அம்பாள் பசு வடிவில் வந்து பால் சொரிந்து இறைவனை வழிபட்ட தலம். ஆதலால் இறைவி கோவர்த்தனாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள்.

தலப் புராணம்
இடைச்சுரநாதர் என்னும் பெயருக்குக் காரணம்

திருஞானசம்பந்தர் தனது சிவஸ்தல யாத்திரையின்போது இவ்வழியே வந்துகொண்டிருந்தார். நீண்ட தூரம் நடந்து வந்ததாலும் வெயில் ஏறியதாலும் அவர் மிகவும் களைப்படைந்தார். அதோடு பசியும் அவரை வாட்ட ஒரு மரத்தடியில் அமர்ந்தார். அப்போது ஒரு இடையன் அங்கு வந்தான். பசியோடு உள்ள சம்பந்தரைப் பார்த்த அவன் தன்னிடமிருந்த தயிரை பருகக் கொடுத்தான். தயிரைப் பருகி களைப்பு நீங்கிய சம்பந்தரை பார்த்து இடையன் அவர் யார் என்று வினவினான். தனது சிவஸ்தல யாத்திரைப் பற்றிக் கூறிய சம்பந்தரிடம் இடையன் அருகிலுள்ள வனத்தில் ஒரு சிவன் கோவில் இருப்பதைப் பற்றிக் கூறினான். இடையன் மூலமாக பசியாறிய சம்பந்தர் அவனது அழைப்பைத் தட்ட முடியாமல் அவனைப் பின்தொடர்ந்து சென்றார். வழியில் ஒரு குளக்கரையில் நின்ற இடையன் சம்பந்தரைப் பார்த்து புன்னகைத்துவிட்டு மறைந்துவிட்டான். திகைப்படைந்த சம்பந்தர் சிவபெருமானை வேண்ட, சிவன் அவருக்கு காட்சியளித்து தானே இடையன் வடிவில் வந்து அருள் புரிந்ததைக் கூறினார். இடையனாக வந்து இடையிலேயே விட்டுவிட்டுச் சென்றதால் இறைவனை இடைச்சுரநாதர் என்று அழைத்து பதிகம் பாடினார் சம்பந்தர். சிவன் மறைந்த குளக்கரை “காட்சிகுளம்” என்ற பெயரில் தற்போதும் இருக்கிறது.

திருஞானசம்பந்தர், சேக்கிழார், சனர்குமரார், கௌதம மஹரிஷி, பிருங்கி மஹரிஷி ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.

தல விருட்சம் - வில்வம், வேம்பு, அரசமரம்

இத்தலத்தின் தல விருட்சங்களான வில்வம், வேம்பு, அரசமரம் ஆகிய மூன்று மரங்களும் ஒரே இடத்தில் ஒன்றுடன் மற்றொன்று இணைந்து வளர்கின்றன. இந்த வில்வ மரத்திற்கு அருகில் உள்ள பாம்புப் புற்று விநாயகர் வடிவில் காட்சி தருகிறது என்பது இத்தலத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்று.

பதிகம்

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இத்தல இறைவனின் திருமேனி வண்ணம் கண்டு அதிசயித்து தனது பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே என்று பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்து பதிகம்
  1. வரிவள ரவிரொளி யரவரை தாழ
மேலும் புகைப்படங்கள்