தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோவில், திருநள்ளாறு
சிவஸ்தலம் பெயர்: திருநள்ளாறு
இறைவன் பெயர்: தர்ப்பாரண்யேஸ்வரர்
இறைவி பெயர்: பிராணம்பிகை, போகமார்த்த பூன்முலையாள்
பதிகம்: திருநாவுக்கரசர் - 2, திருஞானசம்பந்தர் - 4 (இவற்றில் ஒரு பதிகம் திருநள்ளாறு, திருஆலவாய் இரண்டிற்கும் பொதுவானது), சுந்தரர் - 1
தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது
காரைக்காலில் இருந்து மேற்கே 6 கி.மீ. தொலைவில் திருநள்ளாறு ஸ்தலம் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பேரளம், காரைக்கால், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் முதலிய இடங்களிலிருந்து இத்தலத்திற்கு அடிக்கடி பேருந்துகள் செல்கின்றன. திருநள்ளாறு நவக்கிரக ஸ்தலங்களில் சனி பகவானுக்கு உரிய ஸ்தலம் ஆகும். பாடல் பெற்ற சிவஸ்தலம் திருதருமபுரம் அருகிலுள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்
திருநள்ளாறு
திருநள்ளாறு அஞ்சல்
காரைக்கால் வட்டம்
புதுச்சேரி மாநிலம்
PIN - 609607
ஆலய நேரம்
காலை: 6:00 - 12:00
மாலை: 4:00 - 9:00
அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
| 1 | திருவேட்டக்குடி - 12 கிமி | |
| 2 | திருதெளிச்சேரி - 5.2 கிமி | |
| 3 | திருதருமபுரம் - 4 கிமி | |
| 4 | திருகோட்டாறு - 9.6 கிமி | |
| 5 | அம்பர் பெருந்திருக்கோவில் - 15.2 கிமி | |
| 6 | அம்பர் மாகாளம் - 16.9 கிமி |
தலப் பெருமை
சப்தவிடங்கத் தலம்
தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் ஏழு நிலை ராஜகோபுரம் கொண்டு எழிலுடன் விளங்குகிறது. இத்தலம் தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள தியாகராஜர் தகவிடங்கர் எனப்படுகிறார். அவர் ஆடும் நடனம் உன்மத்த நடனம் எனப்படும். இத்தலத்தின் மூலவராக சிவபெருமான் தர்ப்பாரண்யேஸ்வரர் என்ற பெயருடன் அருள் பாலித்து வந்தாலும், இத்தலத்தின் பெருமைக்கு மூலகாரணமாக இருப்பவர் இத்தலத்தில் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ள சனீஸ்வரர் ஆவார்.
நவக்கிரக ஸ்தலம்
நவக்கிரக ஸ்தலங்களில் சனி பகவானுக்கு உரிய ஸ்தலமாக திருநள்ளாறு விளங்குகிறது. சனீஸ்வரன் தனி சன்னதி கொண்டு அருள்பாலிப்பதால் இக் கோயிலில் நவகிரகங்கள் கிடையாது. மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரர் சந்நிதிக்கும், இறைவி பிராணம்பிகை சந்நிதிக்கும் இடையில் சனீஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. சனிக்கழமைகளில் சனீஸ்வரரை வழிபடுவதற்காக பக்தர்கள் பெருமளவில் இங்கு கூடுகிறார்கள். இக்கோயிலில் சனி பகவானுக்கு உகந்த காக்கை வாகனம் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. விசேஷ காலங்களில் சனீஸ்வர பகவான் தங்கக் காகம் வாகனத்தில் அமர்ந்து வீதி உலா வருவார்.
இந்த தலத்திற்கு வந்து சனீஸ்வரரையும், தர்ப்பாரண்யேஸ்வரரரையும் வணங்குபவர்களுக்கு சனி பாதிப்பைத் தாங்கிக்கொள்ளும் மன திடமும், பிரச்னைகளிலிருந்து மீளும் வழியும் கிட்டும். நல்வாழ்வுக்கும் வழி பிறக்கும்.
நள தீர்த்தம்
இக்கோவிலுக்கு அருகில் நள தீர்த்தம் என்ற பெயரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. சனியின் ஆதிக்கத்திற்கு உள்ளான நளச் சக்கரவர்த்தி பல துன்பங்களை அனுபவித்தான். கடைசியில் இத்தலம் வந்து இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானையும், இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரரையும் வழிபட்டு துன்பம் நீங்கப் பெற்றான். நளன் நீராடிய தீர்த்தம் அவன் பெயரால் நள தீர்த்தம் என்று பெயர் பெற்றது.
நள தீர்த்தம் தவிர, பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் உள்ளிட்டவையும் இத்தலத்தில் உள்ளன. சனீஸ்வரன் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனிப் பெயர்ச்சியின் போது அவர் அவர்கள் ஜாதகத்தின் தன்மைக்குத் தக்கவாறு நன்மை தீமைகள் நடைபெறகூடும் என்பதால் இந்நாளில் சனிபகவானுக்கு தீபமேற்றி வழிபட்டால் நன்மை உண்டாகும் என்பது மக்கள் நம்பிக்கை. இதனால் ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் லக்ஷக்கணக்கில் மக்கள் இங்கு வந்து நள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானையும், இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரரையும் வழிபாடு செய்கின்றனர்.
பச்சைப் பதிகம்
திருஞானசம்பந்தரின் இத்தலத்திற்கான "போகமார்த்த பூன்முலையாள்" என்று தொடங்கும் பதிகம் "பச்சைப் பதிகம்" என்ற சிறப்புடையது. சம்பந்தரை மதுரையில் சமணர்கள் வாதிற்கு அழைத்தனர். அனல் வாதம் மற்றும் புணல் வாதம் செய்வது என்றும் அதில் வெல்பவர் சமயமே உயர்ந்தது என்று மதுரை மன்னர் முன்னிலையில் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி சமணர்கள் தங்கள் சமயக் கருத்துக்களை ஒரு ஏட்டில் எழுதி அதை தீயில் இட்டனர். ஏடு தீயில் எரிந்து சாம்பலாயிற்று. அதன் பின் சம்பந்தர் முறை வரும்போது அவர் திருமுறை ஏட்டில் கயிறு சார்த்தி பார்த்த போது திருநள்ளாறு தலத்திற்கான "போகமார்த்த பூன்முலையாள்" என்ற பதிகம் வந்தது.
சம்பந்தர் அதை தீயில் இட்டார். ஏடு தீயில் கருகாமல் பச்சை ஏடாகவே இருந்தது. சமணர்கள் வாதில் தோற்றனர். மதுரை மன்னனும் சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாறினான். இவ்வாறு பாண்டிய நாட்டில் சைவம் தழைக்க காரணமாக இருந்த பதிகம் பெற்ற பெருமையை உடையது திருநள்ளாறு தலம்.
மகாவிஷ்ணு, பிரம்மா, தேவேந்திரன், திசைப் பாலகர்கள், அகத்தியர், புலஸ்தியர், அர்ச்சுனன், நளன் முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்ற தலம் என்ற பெருமை உடையது திருநள்ளாறு திருத்தலம்.
கோவில் அமைப்பு
நான்கு வீதி
நான்கு வீதிகளுக்கு நடுவில் கோயில் அமைந்துள்ளது. உயர்ந்த ராஜகோபுரம். அதற்கு முன்புள்ள முற்றம் மண்டபமாக்கப்பட்டுள்ளது. இங்கு வடபுறம் அலுவலகமும் தென்புறம் இடையனார் கோயிலும் உள்ளது. விசாலமான பிராகாரத்துடனும், உயர்ந்த சுற்றுமதில்களுடனும் ஆலயம் அமைந்துள்ளது. சுவரில் நளன் வரலாறு வண்ண ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. வசந்த மண்டபம் உள்ளது.
சனீஸ்வரர் சந்நிதி
சனி பகவான் சந்நிதி முன்னால் மகர, கும்பராசிகளின் உருவங்கள் உள்ளன. மகர, கும்பராசிகளுக்குச் சனி அதிபதியாவார். அதையடுத்து அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம்.
உள்சுற்று
உள்சுற்றில் சுந்தரர், அறுபத்துமூவர் மூல உருவங்கள் உள்ளன. வரிசை முடிவில் நளன் வழிபட்ட நளேஸ்வரர் சிவலிங்கம் உள்ளது.
கோஷ்ட மூர்த்தங்கள்
கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும், விநாயகரும், பிரமனும் துர்க்கையும் உள்ளனர். சொர்ண கணபதி சந்நிதி தலவிநாயகர் சந்நிதியாகும்.
சிறப்பு சந்நிதிகள்
சப்தவிடங்கத் தலசிவலிங்கத் திருமேனிகளும், சுப்பிரமணியர் சந்நிதியும், ஆதிசேஷன், நளநாராயணப் பெருமாள், மகாலட்சுமி, பைரவர் முதலிய சந்நிதிகளும் உள்ளன. படிகளேறிச் செல்லும்போது பலிபீடம் சற்று விலகியிருப்பதைக் காணலாம். தினந்தோறும் ஆறுகால வழிபாடுகளும் செம்மையாக நடைபெறும் இத்திருக்கோயில் தருமையாதீனத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. வைகாசியில் பெருவிழா நடைபெறுகிறது.
பதிகம்
இத்தலத்திற்கான பதிகங்கள் திருநாவுக்கரசர் (2), திருஞானசம்பந்தர் (4), சுந்தரர் (1) ஆகியோரால் அருளப்பட்டுள்ளன. திருஞானசம்பந்தரின் நான்கு பதிகங்களில் ஒரு பதிகம் திருநள்ளாறு மற்றும் திருஆலவாய் இரண்டிற்கும் பொதுவானது.
திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்துப் பதிகம்
திருநாவுக்கரசர் அருளிய இத்தலத்துப் பதிகம்
சுந்தரர் அருளிய இத்தலத்துப் பதிகம்
தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்