திருத்தளிநாதர் கோவில், திருப்புத்தூர்
சிவஸ்தலம் பெயர்: திருப்புத்தூர்
இறைவன் பெயர்: திருத்தளிநாதர்
இறைவி பெயர்: சிவகாமி, சௌந்தர்ய நாயகி
பதிகம்: திருநாவுக்கரசர் - 2, திருஞானசம்பந்தர் - 1
திருத்தளிநாதர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது
இந்த சிவஸ்தலம் காரைக்குடியில் இருந்து கிழக்கே சுமார் 20 கி.மீ. தொலைவிலும், சிவகங்கையில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவிலும், மதுரையில் இருந்து சுமார் 65 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து 250 மீட்டர் தொலைவில் உள்ளது. திருப்புத்தூரில் இருந்து 23 கிமீ தொலைவில் திருமயம் கோட்டை உள்ளது. இங்கு சிவபெருமான் குடைவரை கோவிலில் இருந்து அருள்பாலிக்கிறார்.
பேருந்து வசதிகள்:
மதுரை, காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களில் இருந்து திருப்புத்தூருக்கு பேருந்து வசதிகள் உண்டு.
அருகில் உள்ள ரயில் நிலையம்: காரைக்குடி
அருகில் உள்ள தலம்: கொடுங்குன்றம் (பாண்டிய நாட்டில் உள்ள மற்றொரு பாடல் பெற்ற தலம்) - 26 கிமி
ஆலய முகவரி
திருப்புத்தூர் அஞ்சல்
சிவகங்கை மாவட்டம்
PIN - 623211
ஆலய நேரம்
காலை: 7:30 AM - 12:30 PM
மாலை: 5:00 PM - 8:00 PM
பரிகார ஸ்தலம்
ஏவல், பில்லி, சூனியம் செய்வினை போன்ற தொல்லைகள் போக்கும் தலம் - திருப்புத்தூர்
தல வரலாறு
மகாலட்சுமி வழிபாடு
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன், தலம் தோறும் எழுந்தருளி, தம்மை நாடி வருவோருக்கு அருள்பாலித்து வருகிறான். அத்தகைய அருள் சுரக்கும் ஆலயங்களில் ஒன்றுதான் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள ஸ்ரீ திருத்தளிநாதர் ஆலயம்.
திருத்தளிநாதர் இங்கு எழுந்தருள முக்கியக் காரணம் ஸ்ரீ மகாலட்சுமி ஆவார். ஈசனாகிய இறைவன் பல்வேறு தாண்டவங்களை நிகழ்த்தினான். அவற்றில் கௌரி தாண்டவமும் ஒன்று. அதனைக் காண விரும்பிய ஸ்ரீ மகாலட்சுமி இறைவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். அவருக்கு இறைவன் காட்சி தந்து, கௌரி தாண்டவம் ஆடிக்காட்டிய இடமே இவ்வாலயமாகும்.
பெயர்க்காரணம்
திரு (மகாலட்சுமி) வழிபட்ட ஆலயம் என்னும் பொருள் தரும்படியாக இவ்வாலயம் 'திருத்தளிநாதர்' ஆலயம் என்றும் அழைக்கப்படுவதாகத் தலபுராணம் கூறுகின்றது.
வால்மீகி மகரிஷி இங்கு வந்து புற்று வடிவில் தவம் செய்து வழிபட்டதாகவும், அதனாலேயே இத்திருத்தலத்திற்கு "திருப்புத்தூர்" என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகின்றது.
பைரவர் சந்நிதி
வைரவன் கோவில்
இத்தலத்திலுள்ள பைரவர் சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். திருப்பத்தூர் திருத்தளிநாதர் திருக்கோவில் ஆலய பைரவர் பெயரில் வைரவன் கோவில் என்றே இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது.
ஆதி பைரவர் / யோக பைரவர்
இவ்வாலயத்தின் 2-வது பிரகாரத்தில் மேற்கு நோக்கிய தனி சந்நிதியில் ஸ்ரீயோகபைரவர் தரிசனம் தருகிறார். குழந்தை வடிவில், வலக்கரத்தில் பழம், இடக்கரம் தொடையின் மீது வைத்துக்கொண்டு கோரைப் பற்களுடன் காட்சி தருகிறார்.
தனிச்சிறப்புகள்:
- உலகின் முதல் பைரவர்:
- உலகில் தோன்றிய முதல் பைரவ மூர்த்தம் இதுதான் என இவ்வாலயக் குறிப்பு கூறுகின்றது
- ஆதி பைரவர்:
- இங்குள்ள பைரவர் "ஆதி பைரவர்" என்றே அழைக்கப்படுகின்றார்
- அமர்ந்த நிலை:
- பொதுவாக பைரவர் நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதே மரபு. ஆனால் இங்குள்ள பைரவர் அமர்ந்த நிலையில், யோக நிஷ்டையில் காணப்படுகின்றார்
- சூலம், நாய் வாகனம் இல்லை:
- பொதுவாக பைரவர் கையில் சூலத்துடனும், நாய் வாகனத்துடனும் காட்சி தருவார். ஆனால் இங்கு அவை இல்லை
இந்திரன் மகன் ஜெயந்தன்
இந்திரன் மகன் ஜெயந்தனைக் காப்பதற்காக இவர் திரு அவதாரம் செய்ததாகக் கோயில் குறிப்பு கூறுகின்றது. இந்திரன் மகன் ஜெயந்தன் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுப் பேறடைந்தான். ஆதலின் அவன் உருவம் சந்நிதிக்கு வெளியில் வாயிலில் உள்ளது.
வழிபாடு மற்றும் நம்பிக்கை
சிறப்பு வழிபாடுகள்:
- சஷ்டி, அஷ்டமி நாட்களில் சிறப்பு ஆராதனை, அபிஷேகம், வழிபாடு, யாகங்கள் செய்யப்படுகின்றன.
- புனுகு சார்த்தப்பட்டு, வடைமாலை அணிவிக்கப் பெற்று வழிபாடு.
- சம்பா சாதம் தினம் நைவேத்தியம் செய்யப்படுகிறது.
நம்பிக்கை:
இவரது வழிபாட்டில் கலந்து கொண்டாலோ அல்லது இங்கு வந்து நியமத்தோடு வேண்டிக் கொண்டாலோ சத்ரு பயம், ஏவல், பில்லி, சூனியம் போன்ற தொல்லைகள், வியாபாரக் கஷ்ட நஷ்டங்கள், வேலை பற்றிய பிரச்னைகள் நீங்குவதாக நம்பிக்கை.
ஐதீகம்
அர்த்தசாம வழிபாட்டிற்காக பூஜை மணியடித்து விட்டால் குருக்கள், பரிசாரகர், நைவேத்தியம் கொண்டு செல்வோர் ஆகிய மூவர் தவிர அதன் பின் யாரும் பைரவர் இருக்கும் பகுதிக்குச் செல்லக் கூடாது என்பது தொன்று தொட்டுக் கடைப்பிடிக்கப்படும் ஐதீகம். பைரவர் அவ்வளவு உக்ரமானவராகக் கருதப்படுகிறார். உக்ரத்தைத் தணிக்க பைரவரைச் சங்கிலியால் பிணைத்து வைத்தலும் உண்டு.
பிற சந்நிதிகள்
நாகேஸ்வரர் சந்நிதி
யோக பைரவர் சந்நிதியை அடுத்து பிராகாரம் வலம் வரும்போது நாகேஸ்வரர் சந்நிதியும் உள்ளது.
மகாலட்சுமி மற்றும் சரஸ்வதி வழிபாடு
பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இத் திருத்தலத்தில் சரஸ்வதியும், மகாலட்சுமியும் பூஜித்து அருள் பெற்றிருக்கிறார்கள். இந்திரனின் மகன் ஜயந்தன் இங்கு வந்து இறைவனை வழிபட்டிருக்கிறான். இங்குள்ள ஸ்ரீ மகாலட்சுமியை வணங்குபவர்களுக்கு வளமும், நலமும் கிட்டும் என்பது நம்பிக்கையாகும்.
யோக நாராயணர் சந்நிதி
யோக நரசிம்மரை நாம் அறிவோம். யோக ஆஞ்சனேயரையும் அறிவோம். ஏன் யோக தட்சிணாமூர்த்தியையும் அறிவோம். ஆனால் ஸ்ரீமன் நாராயணனே யோக நிலையில் வீற்றிருப்பது இத்திருத்தலத்தின் சிறப்பம்சமாகும்.
நடராஜர் மற்றும் சிவகாமி
கோயிலுள் உள்ள நடராஜரின் உருவமும் சிவகாமி அம்மையின் அழகும் கண்டு இன்புறத்தக்கன. இங்கு நடராஜர் கெளரி தாண்டவ மூர்த்தியாகக் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். அழகான சிற்ப வேலைப்பாடு அமைந்த ஐந்து இசைத் தூண்களும் இங்குள்ளன.
பிற தெய்வங்கள்
- துர்க்கை: தனிச் சன்னதியில் வீற்றிருக்கின்றாள்
- விநாயகர்: வன்னி மரத்து விநாயகராக எழுந்தருளியிருக்கிறார்
- நவக்கிரகங்கள்: பிரான்மலையில் உள்ளது போலவே அமர்ந்த நிலையில் உள்ளன
திருப்புகழ் தலம்
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் 2-ம் பிரகாரத்தில் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு மயிலின் முன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார்.
கோவில் சிறப்பம்சங்கள்
வரலாற்று சிறப்பு
பாண்டிய மன்னர்கள் பலரும் இத்தலத்திற்குத் திருப்பணி செய்துள்ளனர். மருதுபாண்டியர்களால் ஆராதிக்கப் பெற்ற தலம். பல்வேறு கல்வெட்டுக்களும் காணக் கிடைக்கின்றன.
தல விருட்சம் மற்றும் தீர்த்தங்கள்
- தல விருட்சம்: கொன்றை
- தீர்த்தங்கள்: திருத்தளி தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம்
பதிகம் திருப்புகழ்
திருநாவுக்கரசர் அருளிய இத்தலத்து பதிகம்
திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்து பதிகம்
அருணகிரிநாதர் அருளிய இத்தலத்து திருப்புகழ்
கூடுதல் புகைப்படங்கள்