A
தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்
பல்லவனேஸ்வரர் திருக்கோவில், திருபல்லவனீச்சுரம்

சிவஸ்தலம் பெயர்: திருபல்லவனீச்சுரம்

இறைவன் பெயர்: பல்லவனேஸ்வரர்

இறைவி பெயர்: சௌந்தரநாயகி

பதிகம்: திருஞானசம்பந்தர் - 2

பல்லவனேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது

சீர்காழி - பூம்புகார் (காவிரிப்பூம்பட்டிணம்) சாலையில் சீர்காழியில் இருந்து சுமார் 19 கி.மீ. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது. பூம்புகாருக்குள் நுழையும்போது, எல்லையில் உள்ள கண்ணகி வளைவைத் தாண்டியதும் சாலை ஓரத்திலேயே கோயில் உள்ளது. சீர்காழி மற்றும் மயிலாடுதுறையில் இருந்து காவிரிப்பூம்பட்டிணம் செல்ல பேருந்து வசதிகள் இருக்கின்றன.

ஆலய முகவரி
அருள்மிகு பல்லவனேஸ்வரர் திருக்கோவில்
பல்லவனீச்சுரம்
காவிரிப்பூம்பட்டினம் அஞ்சல்
சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்
PIN - 609105
ஆலய நேரம்

காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
ஆலயத்தின் இருப்பிடம்
கோவில் அமைப்பு
ஆலயத்தின் அமைப்பு

ஐந்து நிலைகளையுடைய ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. கோபுர வாயிலைக் கடக்கும்போது இடதுபுறம் அதிகார நந்தி சந்நிதியுள்ளது. வாயிலைக் கடந்து வந்தால் வெளிச்சுற்றில் சூரியன், நான்கு சிவலிங்கத் திருமேனிகள், கைகூப்பி நின்ற நிலையில் பட்டினத்தார் சந்நிதி ஆகியவை உள்ளன. விநாயகரை அடுத்துள்ள சுப்பிரமணியர் சந்நிதியில் உள்ள முருகப் பெருமானின் உருவம் பெரியதாக உள்ளது. அடுத்து கஜலட்சுமி சந்நிதியும், ஒரே சந்நிதிக்குள் சனிபகவான், பைரவர், சந்திரன் ஆகிய திருமேனிகள் வைக்கப்பட்டும் உள்ளன.

மூலவர் சந்நிதி

வெளிமண்டபத்தில் வலதுபுறம் அம்பாள் சந்நிதி உள்ளது. நேரே இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பல்லவனேஸ்வரர் பெரிய, பருத்த சிவலிங்க பாணத்துடன் கூடிய கம்பீரமான காட்சியுடன் எழுந்தருளியுள்ளார். உள்மண்டபத்தில் வலதுபுறம் சிதம்பரத்தில் உள்ளது போன்றே அமைந்துள்ள சபாபதி சபை தரிசிக்கத்தக்கது. இங்குள்ள நவக்கிரக மண்டபத்தில் அனைத்து கிரகங்களும் சுவாமியை நோக்கி மேற்கு பார்த்தபடி உள்ளன. பிரகாரத்தில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்; மயில் வாகனம் கிடையாது. கோஷ்டத்தில் இரண்டு துர்க்கை இருக்கின்றனர். சண்டிகேஸ்வரர் சன்னதியில் இரண்டு பேர் இருக்கின்றனர். இத்தலத்திற்கு அருகில்தான் காவிரி நதி வங்காள விரிகுடா கடலுடன் சங்கமிக்கிறது. இந்த சங்கமமே இத்தலத்தின் தீர்த்தமாகும். காலவ மகரிஷி இத்தலத்தில் சிவனை வழிபட்டுள்ளார்.

தல வரலாறு
பட்டினத்தார்

காவிரிப்பூம்பட்டிணம் பட்டினத்தார் அவதார தலம். பட்டினத்தார் தனிச் சன்னதியில் வடக்கு நோக்கியபடி காட்சி தருகிறார். இவரது சன்னதி விமானத்தில் பட்டினத்தார், மனைவி, அவரது தாய் மற்றும் மகனாக வளர்ந்த சிவன் ஆகியோரது சிற்பங்களும் இருக்கின்றன. இங்கு சிவனுக்கு பிரம்மோற்ஸவம் கிடையாது; பட்டினத்தாருக்காகவே விழா எடுக்கப்படுகிறது. பட்டினத்தார் திருவிழா 12 நாட்கள் நடக்கிறது. விழாவின் 10-ம் நாளில் பட்டினத்தாருக்கு சிவன் மோட்சம் தரும் நிகழ்ச்சி பெரிய அளவில் நடக்கும். பட்டினத்தார் இங்கிருந்து திருத்தல யாத்திரை மேற்கொண்டு, தொண்டை நாட்டுத் தலமான திருவொற்றியூரில் முக்தி பெற்றார். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதால் இவர் "பட்டினத்தார்" என்றழைக்கப்பட்டார்.

பதிகம் & தல சிறப்பு

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இரண்டு பதிகங்களும் 1-ம் மற்றும் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன. 1-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ள பதிகத்தில் காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தின் சிறப்புகளைக் குறிப்பிட்டு, அத்தகைய தலத்தில் உறையும் இறைவனைப் பற்றி தான் பாடிய பதிகத்தை மனம் ஒன்றிச் சொல்லி வழிபடும் மக்கள், தீ வினையும் நோயும் இல்லாதவராய், அமைந்த ஒப்புடையவர் என்று கூறி உலகில் உயர்வோடு ஓங்கி வாழ்வர் என்று குறிப்பிடுகிறார்.

சம்பந்தர் பதிகம் பாடிய காலத்தில் பல்லவனீச்சரம் வாயில்களோடு கூடிய மாடவீடுகள் எங்கும் உயர்ந்து விளங்கியதும், வான வெளியைத் தடவும் மதில்களால் சூழப்பட்டதும், நன்கு அமைக்கப்பட்ட சோலைகளில் அழகிய வண்டுகள் நாள்தோறும் தேனுண்டு இசைபாடும், ஆழமான கடலினது வெள்ள நீரால் தானும் மேலே உயர்ந்துள்ள பொய்கைகளில் தாமரை மலர்கள் பூத்திருக்கும் ஒரு மாபெரும் நகராக விளங்கியதை அவர் தனது பாடல்களில் வருணிக்கிறார்.

பதிகம்
திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்து பதிகம்
  1. அடையார் தம்புரங்கள் மூன்றும்
  2. பரசுபாணியர் பாடல்வீணையர்
பல்லவனேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்