சிவஸ்தலம் பெயர்: திருமுருகபூண்டி
இறைவன் பெயர்: திருமுருகநாதசுவாமி
இறைவி பெயர்: முயங்கு பூண்முலை வல்லியம்மை, ஆலிங்க பூஷணஸ்தனாம்பிகை
பதிகம்: சுந்தரர் - 1
திருமுருகநாதசுவாமி ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது
கொங்கு நாட்டில் உள்ள மற்றொரு சிவஸ்தலமான அவிநாசியில் இருந்து 5 கி.மீ. தொலைவில், அவிநாசி - திருப்பூர் சாலை வழியில் திருமுருகபூண்டி உள்ளது. திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புளியம்பட்டி செல்லும் 9G நகர பேருந்து மற்றும் திருப்பூரில் இருந்து மேட்டுப்பாளையம் வரை செல்லும் தனியார் பேருந்துகளில் ஏறி திருமுருகன் பூண்டி கோவிலை அடையலாம். அருகில் உள்ள பேருந்து நிறுத்ததின் பெயர் : பூண்டி. கூப்பிடு விநாயகர் கோவில், திருமுருகநாதர் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவிலும், பூண்டி பேருந்து நிறுத்தத்தில் இருந்து 1.1 கிமீ தொலைவில், பூண்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் (TNHB) உள்ளே அமைந்துள்ளது.
ஆலய முகவரி
திருமுருகபூண்டி அஞ்சல்
அவிநாசி வட்டம்
திருப்பூர் மாவட்டம்
PIN - 637211
ஆலய நேரம்
காலை: 6:00 - 1:00
மாலை: 4:00 - 8:00
(தினந்தோறும்)
பரிகார ஸ்தலம்
இழந்த பொருளை மீண்டும் பெற்றிட பரிகார ஸ்தலமாக விளங்கும் திருமுருகபூண்டி
மேலும் படிக்க ...கோவில் அமைப்பு
நொய்யல் ஆற்றின் வடபகுதியில் அமைந்த மேற்கு நோக்கிய தலம் திருமுருகன் பூண்டி. மேற்கு திசை நோக்கியவாறு அமைந்துள்ள இந்த கோவிலில் மற்ற கோவில்களைப் போல நுழைவு கோபுரம் இல்லை. கோயிலுக்கு வெளியே கொங்கு நாட்டுத் தலங்களுக்கே உரித்தான கருங்கல் தீபஸ்தம்பம் உள்ளது.
சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் நான்கு புறமும் உயர்ந்த மதில் சுவர்களை உடையதாய் 2 பிராகாரங்களுடன் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. கோவிலின் மூலவரான திருமுருகநாதர் சிவலிங்க ரூபத்தில் சுமார் 2 1/2 அடி உயரம் உள்ளதாக தரிசனம் தருகிறார். மேற்குப் பார்த்து மூலவர் சந்நிதி உள்ளது.
கோவில் சிற்பங்கள்
கருவறையின் பின்புறச் சுவரில் யானை ஒன்று தும்பிக்கையால் சிவலிங்கத்தைத் தூக்கிப் பிடித்திருப்பதை அழகிய புடைப்புச் சிற்பமாக வடித்துள்ளனர். கருவறை விமானத்தில் அழகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன.
பிரகார அமைப்பு
உட்பிராகாரத்தில் நிருதி விநாயகர், 63 நாயன்மார்கள், சண்முகர், துர்க்கை, பைரவர், சனீஸ்வரர், நவகிரகங்கள் சந்நதிகள் உள்ளன. மூலவர் சந்நிதியின் வலது பக்கம் தெற்குப் பார்த்த நிலையில் ஆறு முகங்களுடன் காணப்படும் சண்முகர் சந்நிதி உள்ளது. 5 அடி உயரம் உள்ள இந்த சிற்பம் முன்பக்கம் 5 முகங்களும், பின்பக்கம் ஒரு முகமும் உடையதாக அமைந்துள்ளது.
அம்மன் சந்நிதி
மூலவர் சந்நிதியின் இடதுபுறம் மேற்குப் பார்த்த நிலையில் அம்பாள் முயங்கு பூண்முலை வல்லியம்மையின் சந்நிதி அமைந்துள்ளது. இறைவியின் இப்பெயரை சுந்தரர் தனது பதிகத்தின் 5 பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
தீர்த்தங்கள்
கோவிலுக்கு உள்ளே பிரகாரத்தில் சுப்பிரமணிய தீர்த்தமும், கோவிலுக்கு வெளியே பிரம்ம தீர்த்தமும், ஞான தீர்த்தமும் இருக்கிறது. சித்த பிரமை பிடித்தவர்களை இந்த்ச் சிவஸ்தலத்திற்கு அழைத்து வந்து தங்கியிருக்கச் செய்து அன்றாடம் மூன்று தீர்த்தங்களிலும் நீராடச் செய்து சுவாமியை வழிபட்டுவர அவர்களுடைய சித்த பிரமை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தல புராணம்
புராணங்களின் படி முருகப்பெருமான் அரக்கன் சூரபத்மனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிகொள்ளும் பொருட்டு இந்த சிவஸ்தலத்திற்கு வந்து சிவலிங்கத்தை நிறுவி அதற்கு பூஜை செய்தார் என்பது ஐதீகம்.
சுந்தரரின் வரலாறு
சேரமான் பெருமான் நாயனாரிடம் பெற்ற பரிசுப் பொருள்களுடன் திரும்பி வந்து கொண்டிருந்த சுந்தரர் திருமுருகபூண்டி அருகே வரும் போது சிவபெருமான் தனது பூதகணங்களை வழிப்பறி திருடர்கள் வேடத்தில் அனுப்பி சுந்தரரின் பரிசுப் பொருள்களை கொள்ளையடித்து வரச் செய்தார். கவலை அடைந்த சுந்தரர் திருமுருகபூண்டி சென்று இறைவன் மேல் பதிகம் பாடி முறையிட்டார்.
வழிப்பறித் திருடர்கள் இருக்கும் இந்த ஊரில் அந்த பயத்திலிருந்து பக்தர்களைக் காப்பாற்றாமல் நீயும் அம்பிகையும் எதற்காக இங்கு இருக்கிறீர்கள் என்று தனது தேவாரப் பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் "எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே" என்று நிந்திப்பதைப் போலப் பாடியவுடன் சுவாமி அத்தனை பொருள்களையும் பூத கணங்கள் மூலம் சுந்தரரிடம் திரும்ப சேரும்படி செய்தார். இழந்த பொருளை மீண்டும் பெற்றிட, பரிகாரத் தலமாக திருமுருகன் பூண்டி விளங்குகிறது.
சிற்பக்கலை சான்றுகள்
இதற்குச் சான்று கூறும் வகையில் இக்கோவிலில் உள்ள மண்டபத்தில் வில் கையில் ஏந்தியபடி வேட்டுவன் கோலத்தில் நிற்கும் சிவபெருமான் சிற்பமும், இதற்கு எதிரில் சுந்தரர் கவலையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கும் இரு சிற்பங்கள் காணப்படுகின்றன. பரிசுப் பொருள்களை பறி கொடுத்த நிலை ஒன்று, பறி கொடுத்த பொருள்களை மீண்டும் பெற்ற நிலை மற்றொன்று ஆக இந்த இருநிலைகளைக் காட்டும் வகையில் இருப்பதே சுந்தரரின் இந்த இரண்டு சிற்பங்கள்.
கூப்பிடு விநாயகர்
இத்தலத்து விநாயகர் கூப்பிடு விநாயகர் என்ற பெயரில் இங்கு காட்சி தருகிறார். சுந்தரரின் பரிசுப் பொருள்கள் சிவபெருமானால் கொள்ளையடிக்கப்பட்ட பிறகு, விநாயகர் சுந்தரரைக் கூப்பிட்டு பொருள் இருக்கும் இடத்தைக் காட்டி அருளியதால் அவர் கூப்பிடு விநாயகர் என்ற பெயர் பெற்றார்.
பிற சிறப்புகள்
மாதவனேஸ்வரர் கோவில்
திருமுருகநாதசுவாமி ஆலயத்தின் பின்புறம் இவ்வாலயத்தின் மிக அருகே மாதவனேஸ்வரர் கோவில் என்ற ஒரு கோவிலும் உள்ளது. இவ்வாலயத்தின் முகப்பு மண்டபத்தின் மேற்கூரையில் பெரிய நந்தியெம்பெருமான் சிற்பம் உள்ளது.
கேது பரிகாரம்
இக்கோவிலின் வடமேற்கு மூலையில் கேது பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இத்தலத்தில் கேது பகவான் இறைவனை பூஜித்ததாக தல வரலாறு கூறுகிறது. எனவே இவ்வாலயம் கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓர் அரிய பரிகாரத்தலமாக விளங்குகிறது.
தரிசனம் செய்த முழு பலன்
இந்த தலத்தை தரிசனம் செய்த முழு பலன் பெற, முதலில் கூப்பிடு விநாயகரையும், பின் கோவிலின் முன்னர் சற்று எதிர்புறம் உள்ள வேல் மற்றும் மயிலை வணங்கி கோவிலின் உள்ளே செல்லலாம். தரிசனம் முடித்த பின் கோவிலின் பின் புறம் உள்ள மாதவனேஷ்வரர் வணங்கி நிறைவு செய்ய வேண்டும்.
சுந்தரர் பதிகம்
சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. திருடர்கள் கொள்ளையடித்த பொருள்களை திருப்பித் தரும்படி இறைவனிடம் பாடி முறையிட்ட பதிகம் இதுவாகும்.
பதிகம்திருப்புகழ்
சுந்தரர் அருளிய இத்தலத்து பதிகம்
அருணகிரிநாதர் அருளிய இத்தலத்து திருப்புகழ்
மேலும் புகைப்படங்கள்