Shiva Temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


மணிகண்டேஸ்வரர் திருக்கோவில், திருமாற்பேறு

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருமாற்பேறு (தற்போது திருமால்பூர் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்மணிகண்டேஸ்வரர், மால்வணங்கீஸ்வரர்
இறைவி பெயர்அஞ்சனாட்சி அம்மை, கருணை நாயகி
பதிகம்திருநாவுக்கரசர் - 4
திருஞானசம்பந்தர் - 2
எப்படிப் போவது காஞ்சிபுரம் நகரில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் அரக்கோணம் செல்லும் வழியில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்தும், அரக்கோணத்தில் இருந்தும் பேருந்து வசதிகள் இருக்கின்றன. மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் திருஊறல் (தக்கோலம்) அருகில் இருக்கிறது.
அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்1. தக்கோலம் - 18 கி மி -
2. திருவாலங்காடு, திருவிற்கோலம், இலம்பயங்கோட்டூர், தக்கோலம், திருமாற்பேறு ஆகிய தலங்களை இணைக்கும் வரைபடம் காண்க
ஆலய முகவரிஅருள்மிகு மணிகண்டேஸ்வரர் திருக்கோவில்
திருமால்பூர் அஞ்சல்
அரக்கோணம் வட்டம்
வேலூர் மாவட்டம்
PIN - 631053

இவ்வாலயம் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
திருமாற்பேறு செல்லும் வழி வரைபடம்

படிக்கும் நேரம் - நிமிடங்கள்

தல புராண வரலாறு: மகாவிஷ்ணு ஒருமுறை குபன் என்ற அரசனுக்காக துதீசி முனிவருடன் போரிட்டார். அப்போது மகாவிஷணுவின் சக்கரம் முனிவரின் வைர உடம்பில் பட்டு முனை மழுங்கி விட்டது. சலந்திரனை சம்ஹாரம் செய்த சக்கரம் சிவபெருமானிடம் இருப்பதைக் கேள்விப்பட்ட மகாவிஷ்ணு அதனை பெறவேண்டி இத்தலம் வந்து அம்பிகை பூசித்த இலிங்கத்தை தினந்தோறும் ஆயிரம் தாமரை மலர்களால் அருச்சித்து வந்தார். சிவபெருமான் அவரது பக்தியைப் பரிசோதிக்க வேண்டி ஒரு நாள் ஆயிரம் தாமரை மலர்களில் ஒன்றை மறைத்தருளினார். திருமால் ஆயிரம் பெயர்களால் இறைவனை அருச்சிக்கும் போது ஒரு பெயருக்கு மலர் இல்லாமையால் தனது கண்ணைப் பறித்து இறைவன் திருவடியில் சமர்ப்பித்தார். உடன் சிவபெருமான் மகிழ்ந்து மகாவிஷ்ணுவிற்கு காட்சி கொடுத்து அவர் வேண்டியபடி சக்கரத்தைக் கொடுத்தருளினார். திருமால் வழிபட்டு சக்கராயுதம் பெற்றதால் இத்தலம் அன்று முதல் திருமாற்பேறு என்று பெயர் பெற்றது. இன்று பெயர் மருவி திருமால்பூர் என்று வழங்குகிறது. இதே வரலாறு திருவீழிமிழலை தலத்திற்கும் சொல்லப்படுகின்றது. இப்புராண வரலாற்றை உறுதிப்படுத்தும் வகையில் திருமாலின் உற்சவத் திருமேனி நின்ற கோலத்தில் ஒரு கையில் தாமரை மலரும் மறு கையில் "கண்"ணும் கொண்டு இருப்பதை இக்கோயிலில் காணலாம்.


ஒருமுறை பார்வதி விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூட அதனால் உலகமே இருண்டு போயிற்று. உலக இயக்கமே தடைபட, தனது தவறை உணர்ந்த பார்வதி இப்பூவுலகம் வந்து விருத்தக்ஷீர நதிக்கரையில் மணலால் ஒரு இலிங்கம் அமைத்து இறைவனை பூஜித்து தன் தவறை போக்கிக் கொண்டாள். விருத்தக்ஷீர நதி என்ற பழைய பாலாறு இத்தலத்திற்கு வடக்குத் திசையில் இப்போது உள்ளது. மணலால் அமைக்கப்பட்ட லிங்கம் இங்கு மூலவராக உள்ளதால், அது கரைந்து விடாமல் இருக்க லிங்கத்தின் மீது குவளை (செம்பால் செய்யப்பட்ட கவசம்) சாத்தியே அபிஷேகம் செய்யப்படுகிறது. மூலவர் தீண்டாத் திருமேனி.



கோவில் அமைப்பு: சுமார் 1.20 ஏக்கர் அளவில் சுற்று மதில் சுவர்களுடன் கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரம், இரண்டு பிரகாரங்களுடன் கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு எதிரில் சக்கர தீர்த்தம் உள்ளது. சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியும், அம்மன் சன்னதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் நேரே உயரமான பீடத்தின்மீது பலிபீடம், கவசமிட்ட கொடிமரம், நந்தி முதலியவை தனித்தனியே உள்ளன. முன் பகுதி மேலே சிமெண்டு தகடுகள் வேயப்பட்ட கொட்டகை போடப்பட்டுள்ளது. அடுத்துள்ள உள் வாயிலைக் கடந்து மூலவர் சந்நிதியை அடையலாம். உட்பிராகாரத்தில் நந்திகேசுவரர் நின்ற திருக்கோலத்திலும், செந்தாமரைக்கண்ணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் கூப்பிய கரங்களுடன் மூலவர் சந்நிதிக்கு நேர் எதிரே காட்சி தருகின்றனர். உட்பிராகாரத்தில் விநாயகர், சிதம்பரேசுவரர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், சண்ட்கேசுவரர், நடராஜர், கஜலட்சுமி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. மூலவர் மணிகண்டேஸ்வரர் தீண்டாத் திருமேனி ஆதலால் இத்தலத்திலுள்ள சிதம்பரேஸ்வரர் சந்நிதியில் தான் ஐப்பசி அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.


பிராகார வலம் முடித்து படிகளேறி மூலவர் கருவறை நோக்கி செல்லும் போது வாயிலின் இருபுறம் துவாரபாலகர்கள் உள்ளனர். ஒருபுறம் வல்லபை விநாயகர் பத்துக்கரங்களுடன் காட்சி தருகின்றார். இது அபூர்வ அமைப்பாகும். மறுபுறம் சண்முகர் உள்ளார். நடுவில் மூலவரைப் பார்த்தவாறு மகா விஷ்ணு கூப்பிய கரங்களுடன் காட்சி தருகின்றார். மேலே விமானம் உள்ளது. அவருக்கு முன் நந்தி உள்ளது. சந்நிதி வாயிலைக் கடந்து உள் மண்டபத்தை அடையலாம். இங்குள்ள தூண்களில் தட்சிணாமூர்த்தி, சூரியன், மகாவிஷ்ணு, பாலசுப்பிரமணியர், அப்பர், சுந்தரர், சம்பந்தர், விநாயகர், முருகன், நான்கு முகங்களும் நன்கு தெரிய பிரம்மா, அம்பாள் வில்வ மரத்தடியில் இறைவனை வழிபடுவது, காளிங்கநர்த்தனம், காமதேனு, பைரவர், வீரபத்திரர் ஆகிய பல வகையான அரிய சிற்பங்கள் உள்ளன. நடராசர் தெற்கு நோக்கியுள்ளார். எதிரில் வாயில் உள்ளது. நடராஜ சபையில் மாணிக்கவாசகரும் சிவகாமியும் உடன் எழுந்தருளியுள்ளனர். நேரே மூலவர் தரிசனம். கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். துர்க்கை அஷ்டபுஜங்களுடன் சங்கு சக்கரம் ஏந்தி அழகாகக் காட்சி தருகின்ற திருமேனி. சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. மூலவருக்கு எதிரில் உள்ள மகாவிஷ்ணுவுக்குத் தீபாராதனை முடிந்த பின்பு சடாரி சார்த்தி தீர்த்தம் தரும் மரபு உள்ளது.


திருஞானசம்பந்தர் அருளிய இரண்டு திருப்பதிகங்களும், திருநாவுக்கரசர் அருளிய நான்கு திருப்பதிகங்களும் ஆக ஆறு தேவாரப் பதிகங்கள் இத்தலத்திற்கு உரியன. சுந்தரமூர்த்தி சுவாமிகளும் இத்தலத்திற்கு எழுந்தருளி வழிபட்டதாக சேக்கிழார் தனது பெரிய புராணத்தில் குறிப்பிடுகிறார். ஆனால் அவர் அருளிய திருப்பதிகம் கிடைக்கவில்லை.


மணிகண்டேஸ்வரர்
ஆலயம் புகைப்படங்கள்

ஆலயத்தின் 5 நிலை கோபுரம்
வெளிப் பிராகாரத்தில் நந்தி
நந்தி, கொடிமரம், பலிபீடம்
வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர்