தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருவானைக்காவல் |
இறைவன் பெயர் | ஜம்புகேஸ்வரர் |
இறைவி பெயர் | அகிலாண்டேஸ்வரி |
பதிகம் | திருநாவுக்கரசர் - 3 திருஞானசம்பந்தர் - 3 சுந்தரர் - 1 |
எப்படிப் போவது | திருவானைக்கா திருச்சி நகரின் ஒரு பகுதியாகும் |
ஆலய முகவரி | அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோவில் திருவானைக்காவல் திருவானைக்காவல் அஞ்சல் திருச்சி வட்டம் திருச்சி மாவட்டம் PIN - 620005 இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
தல வரலாறு: புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர். சிவலிங்கம் கூரையில்லாமல் வெய்யில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும்,மற்றும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும்.
இந்த தல வரலாற்றை திருநாவுக்கரசர் தனது திருக்குறுக்கை சிவஸ்தலம் பதிகத்தில் (4-ம் திருமுறை - "ஆதியில் பிரமனார் தாம்" என்று தொடங்கும் பதிகம் - 4வது பாடல்) தெரிவிக்கிறார்.
"சிலந்தியும் ஆனைக்காவில் திருநிழல் பந்தர் செய்து உலந்து அவண் இறந்த போதே கோச்செங்கணானும் ஆகக் கலந்த நீர்க் காவிரீ சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள் குலந்தனில் பிறப்பித்திட்டார் குறுக்கைவீ ரட்டனாரே" இப்பாடலின் பொழிப்புரை : திருவானைக்காவிலுள்ள பெருமானுக்கு அழகிய நிழலைத்தரும் பந்தலை அமைத்த சிலந்தி இறந்தபின் மறுபிறப்பில், சுவாமியுடன் கலந்து பயின்ற நீரை உடைய காவிரியாற் சூழப்பட்ட சோழ நாட்டில் அந்நாட்டு மன்னர் மரபிலே கோச்செங்கண்ணான் என்ற பெயருடைய அரசனாகுமாறு பிறப்பித்து விட்டார் குறுக்கை வீரட்டனார்
கோவில் சிறப்பு: திருவானைக்கா பஞ்சபூத ஸ்தலங்களில் அப்புஸ்தலம். மூலஸ்தான லிங்கம் இருக்குமிடம் தரைபட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் அலயம் ஒரு மிகப்பெரிய கோவில். சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில் நீண்ட உயரமான மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களும் உடையது. அம்மன் அகிலாண்டேஸ்வரியின் சந்நிதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது. தனி சந்நிதியில் கிழக்கு நோக்கியவாறு அகிலாண்டேஸ்வரி காட்சி தருகிறாள். மூலவர் ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உள் பிரகாரத்தில் அப்புலிங்கமாக காட்சி தருகிறார்.
திருவானைக்கா அன்னை அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம். அகிலாண்டேஸ்வரி அம்மையின் காதுகளில் இருக்கும் காதணிகள் பெரிதாக பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாக பளிச்சென்று தெரியும். இந்தக் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பார்கள். அம்பாள் முன்னொரு காலத்தில் மிக உக்கிரமான உருவத்துடன் கொடூரமாக இருந்ததாகவும் பக்தர்கள் வழிபாடு செய்ய மிகவும் அச்சமுற்றதாகவும் இருக்க ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர ரூபமான இக்காதணிகளைப் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்தார் என்று தல வரலாறு கூறுகிறது. அன்னையின் உக்ரத்தை தணிப்பதற்காக முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
உஷத் காலத்தில் கோபூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்கு தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. உச்சிக்கால பூஜையின் போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேஸ்வரி போல பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்ல சுவாமி சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.மேலும் இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்கு திருநீறை கூலியாகக் கொடுத்ததாக தலவரலாறு கூறுகிறது. பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது. இதனால் இம்மதிலை திருநீற்றான் மதில் என்று அழைக்கிறார்கள்.
Top