தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருபாற்றுறை (இன்றைய நாளில் திருப்பாலத்துறை என்று வழங்குகிறது) |
இறைவன் பெயர் | ஆதிமூலநாதர் |
இறைவி பெயர் | மேகலாம்பிகை |
பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
எப்படிப் போவது | திருச்சி - திருவானைக்கா - கல்லணை வழித்தடத்தில் பனையபுரம் என்ற இடத்தில் இறங்கி சுமார் 1 கி.மீ. நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம். பாதை சற்று கடினமானது. மிகச் சிறிய ஊர். பனையபுரத்தில் ஆட்டோ வசதிகள் இல்லை. ஆகையால் திருச்சியில் இருந்து ஆட்டோ அல்லது காரில் செல்வது நல்லது. திருவானைக்கா தலத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவு. |
ஆலய முகவரி | அருள்மிகு ஆதிமூலநாதர் திருக்கோவில் திருப்பாலத்துறை திருப்பாலத்துறை அஞ்சல் வழி திருவானைக்காவல் திருச்சி வட்டம் திருச்சி மாவட்டம் PIN - 620005 இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 10-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருபாற்றுறை செல்லும் வழி வரைபடம்
Map by: Google Map
கோவில் அமைப்பு: இவ்வாலயத்தின் கோபுரம் 3 நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. நந்தியும், பலிபீடமும் கோயிலுக்கு வெளியில் இருக்கிறது. இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். புரட்டாசி மற்றும் பங்குனியின் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமியின் மீது சூரிய ஒளி விழுகிறது. கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி கையில் வீணையுடன் காட்சி தருகிறார். அருகே சனகாதி முனிவர்கள் இல்லை. தட்சிணாமூர்த்தியின் இந்த வித்தியாசமான கோலத்தைக் காண்பது மிகவும் அபூர்வம். இசைக்கலைஞர்கள் இவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். அருகிலேயே பிட்சாடனர் இருக்கிறார். கருவறைக்கு பின்புற கோஷ்டத்தில் லிங்கோத்பவர் காட்சி அளிக்கும் இடத்தில் சங்கரநாராயணர் இருக்கிறார். பிரகாரத்தில் சத்யபாமா, ருக்மணியுடன் வேணுகோபாலர் சன்னதியும் இருக்கிறது.
அர்த்த மண்டபத்தில் சிற்ப வேலைப்பாடுடன் கூடிய நான்கு தூண்களுடன் உள்ள இடம் "தேவசபை" என்று aழைக்கப்படுகிறது. இந்த சபையில் இருந்து சிவன், மன்னர் போல ஆட்சி செய்வதாக சொல்லப்படுகிறது. அம்பாள் தெற்கு நோக்கிய சந்நிதியில் நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கின்றாள். குழந்தைகளை இழந்து மீண்டும் குழந்தை பாக்கியத்துக்காக வேண்டுபவர்கள் இத்தலத்தில் அம்பாளுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபட்டால் தீர்க்காயுள் உள்ள குழந்தை பிறக்கும் என நம்புகிறார்கள். பவுர்ணமி தோறும் இதற்குரிய விசேஷ பூஜை இவளது சந்நிதியில் நடக்கிறது. புதுமணத்தம்பதிகளும் நல்ல குழந்தைகள் வேண்டி இதே நாளில் பூஜை செய்கின்றனர்.
தல வரலாறு: இப்பகுதியை ஆண்ட சோழன், இத்தலத்தின் வழியாக வேட்டைக்கு சென்றபோது தன் படைகளுடன் சற்று நேரம் இங்கு ஓய்வெடுத்தான். அப்போது அருகிலுள்ள ஒரு புதரில் இருந்து வெண்ணிற அதிசய பறவை பறந்து சென்றது. மன்னன் அப்பறவையின் மீது ஆசைகொண்டு அம்பு எய்தான். ஆனால் பறவை தப்பி விட்டது. சிலநாட்கள் கழித்து மன்னன் மீண்டும் இவ்வழியாக சென்றபோது, முன்பு பார்த்த அதே பறவை பறப்பதைக் கண்டான். புதர் தானே அதன் இருப்பிடம், அங்கு வந்ததும் பிடித்து விடலாம் எனக்கருதி மறைந்திருந்தான். அந்த இடம் முழுதும் பால் மணம் வீசியது. பறவை வரவே இல்லை. சந்தேகப்பட்ட மன்னன் புதரை வெட்டினான். ஒரு புற்று மட்டும் இருந்தது. புற்றை தோண்டியபோது பால் பீறிட்டது. பயந்த மன்னன் அரண்மனைக்கு திரும்பி விட்டான். அன்றிரவில் அவனது கனவில் அசரீரியாக ஒலித்த சிவன், பால் வெளிப்பட்ட இடத்தில் தான் லிங்க வடிவில் இருப்பதாக கூறினார். அதன்பின் மன்னன் இவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டான். பால் பொங்கிய இடத்தில் இருந்து வெளிப்பட்டதால், சுவாமி "பாற்றுறை நாதர்" என்றும், தலம் "பாற்றுறை" (பால்துறை) என்றும் பெயர் பெற்றது. குபேரனும் இத்தலம் வந்து இறைவனை வழிபட்டுள்ளான் என்று தலபுராணம் தெரிவிக்கிறது.
இத்தலத்திற்கு வந்த மார்க்கண்டேய முனிவர் சிவபூசைக்குப் பால் இல்லாமையால் வருந்திய போது, சிவபெருமான் அருளினால் பால் பெருகியது. ஆதலாலும் பாற்றுறை என்று இத்தலம் பெயர் பெற்றது.
பரகேசரி வர்மனான விக்கிரம சோழன் காலத்து கல்வெட்டு ஒன்றில் இத்தலம் கொள்ளிடத்துத் தென் கரைநாட்டுப் பிரமதேயமான உத்தமசீலி சதுர்வேதிமங்கலத்துத் திருப்பால்துறை என குறிப்பிடப்படுகிறது. இறைவன் திருப்பால்துறை மகாதேவர் என்று வழங்கப் படுகிறார்
Top