தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருஎதிர்கொள்பாடி ( தற்போது மேலதிருமணஞ்சேரி என்று வழங்குகிறது ) |
இறைவன் பெயர் | ஐராவதேஸ்வரர் |
இறைவி பெயர் | மலர்க்குழல் நாயகி, சுகந்த குந்தளாம்பிகை |
பதிகம் | சுந்தரர் - 1 |
எப்படிப் போவது | இத்தலம் மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் இருக்கிறது. குத்தாலத்தில் இருந்து பந்தநல்லூர் செல்லும் சாலையில் அஞ்சார் வார்த்தலை என்னும் ஊரை அடைந்து அங்குள்ள வாய்க்காலைத் தாண்டி வலதுபுறம் திருமணஞ்சேரி செல்லும் சாலையில் சென்றால் முதலில் மேலதிருமணஞ்சேரி என்று இன்று வழங்கப்படும் ஊர் வரும். (இதே சாலையில் மேலும் சிறிது தூரம் சென்றால் திருமணஞ்சேரி உள்ளது.) ஊருக்குள் வலதுபுறம் பிரியும் சாலையில் சிறிது தொலைவு சென்றால் திருஎதிர்கொள்பாடி ஆலயத்தை அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து திருமணஞ்சேரி செல்ல பேருந்து வசதிகள் உண்டு. |
ஆலய முகவரி | அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோவில் மேலதிருமணஞ்சேரி திருமணஞ்சேரி அஞ்சல் குத்தாலம் S.O. மயிலாடுதுறை வட்டம் மயிலாடுதுறை மாவட்டம் PIN - 609813 இவ்வாலயம் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
குத்தாலத்தில் இருந்து திருஎதிர்கொள்பாடி செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps
தல வரலாறு: பரத்வாஜ மகரிஷி தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார். அவருக்கு பார்வதியே குழந்தையாகப் பிறந்தாள். மணப்பருவம் வந்தபோது, சிவபெருமானிடம் அவளை மணந்து கொள்ளும்படி பரத்வாஜ மகரிஷி வேண்டினார். சிவபெருமானும் அம்பிகையை மணக்க பூலோகம் வந்தார். பரத்வாஜரும் மாப்பிள்ளையாக வந்த சிவபெருமானை பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்றார். பரத்வாஜரின் மரியாதையை ஏற்ற இறைவன், அவரது வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார். பரத்வாஜர் எதிர்கொண்டு அழைத்ததால் இத்தலத்திற்கு "எதிர்கொள்பாடி" என்றும், சுவாமிக்கு திருஎதிர்கொள்பாடி உடையார் என்றும் பெயர் உண்டானது. ஐராவதம் என்னும் இந்திரனின் யானை வழிபட்டதால் ஐராவதேஸ்வரர் என்ற பெயர் பிற்காலத்தில் உண்டானது.
ஐராவதம் பூஜித்த தலம்: துர்வாச முனிவர் ஒருமுறை சிவனை பூஜித்து பிரசாதமாக பெற்ற மலரை இந்திரனிடம் கொடுத்தார். இந்திரன் அம்மலரை தன் வாகனமான ஐராவதத்தின் தலை மீது வைக்க, அது அம்மலரை கீழே போட்டு தன் காலால் மிதித்து அம்மலரை அவமரியாதை செய்தது. இதனால் கோபம் கொண்ட துர்வாசரிடம் சாபம் பெற்ற ஐராவதம் சாப விமோசனம் வேண்டி பூமிக்கு வந்து பல இடங்களில் சுற்றித் திரிந்தது. பூலோகத்தில் பல தலங்களில் சிவபூஜை செய்தது. அப்படி சிவபூஜை செய்த தலங்களில் திருஎதிர்கொள்பாடி தலமும் ஒன்றாகும். இறைவனும் ஐராவதேஸ்வரர் என்ற பெயர் பெற்றார். ஐராவதம் உண்டாக்கிய தீர்த்தம் ஐராவத தீர்த்தம் என்ற பெயருடன் இங்கு உள்ளது.
தலத்தின் சிறப்பு: நல்ல குணம் படைத்த மருமகன் அமையவும், அமைந்த மருமகன் திருந்தவும் பெண்ணின் தந்தை வழிபட வேண்டிய தலம் மேலத்திருமணஞ்சேரி என்னும் எதிர்கொள்பாடி ஆகும். இத்தலத்தில் அருளும் ஐராவதேஸ்வரர், சிறந்த மருமகன் கிடைக்க அருள் செய்கிறார். பெண்ணைப் பெற்றவர்கள் மகளுக்கு வரன் பார்க்கும் முன்பு, நல்ல மாப்பிள்ளை அமைய இங்கு மகளை அழைத்து வந்து. சிவனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து பூஜை செய்கின்றனர். மாப்பிள்ளை வீட்டாருடன் மனக்கசப்பு உள்ளவர்களும் இங்கு பூஜை நடத்துகின்றனர். மகளின் வாழ்க்கை நன்றாக அமைய பெற்றோர் வழிபட வேண்டிய தலம் இது.
கோவில் அமைப்பு: இவ்வாலயம் மூன்று நிலை இராஜகோபுரத்துடன் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் வெளிப் பிரகாரத்தில் கொடிமரத்து விநாயகரையும், பலிபீடம் மற்றும் அதிகார நந்தி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். கருவறை முன் மண்டபம் வழியே உள்ளே நுழைந்தவுடன் மேறகு நோக்கிய சந்நிதியில் சதுர ஆவுடையார் மீது லிங்க உருவில் இறைவன் ஐராவதேஸ்வரர் தரிசனம் தருகிறார். அம்பாள் மலர்க்குழல் நாயகி தெறகு நோக்கி காட்சி தருகிறாள். பரத்வாஜ முனிவர் இங்கு சிவனை வழிபட்டுள்ளார். இவர் வணங்கிய பரதலிங்கம் பிரகாரத்தில் இருக்கிறது. சுவாமி சத்திதி கோஷ்டத்தில் தாமரை பீடத்தின் மீது துர்க்கை காட்சி தருகிறாள். கருவறை முன் மண்டபத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. வெளிப் பிரகாரத்தில் ஞானசரஸ்வதி, பைரவர், சனீஸ்வரர், துணைவந்த விநாயகர், சூரியன் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன.
Top