தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருஅன்னியூர் (தற்போது பொன்னூர் என்று பெயர்) |
இறைவன் பெயர் | ஆபத்சகாயேஸ்வரர், லிகுசாரண்யேஸ்வரர், அக்னீசுவரர், பாண்டதவேசுவரர், ரதீசுவரர். |
இறைவி பெயர் | பிருஹந்நாயகி, பெரியநாயகி |
பதிகம் | திருநாவுக்கரசர் - 1 திருஞானசம்பந்தர் - 1 |
எப்படிப் போவது | மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து வடமேற்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. மாயவரத்திலிருந்து நமச்சிவாயபுரம் செல்லும் பேருந்தில் பொன்னூர் நிறுத்தம் இறங்கி இக்கோவிலை அடையலாம். மாயவரத்திலிருந்து பொன்னூர் மார்க்கமாகப் பாண்டூர் செல்லும் பேருந்திலும் இவ்வூரை அடையலாம். அனைத்து வசதிகளும் மாயவரம் மற்றும் நீடுரில் உள்ளன. இவ்வூரில் தங்கும் விடுதி உள்ளதால் இங்கு தங்கியும் இறை தரிசனம் செய்யலாம். இத்தலத்திற்கு அருகில் 5 கி.மீ. தொலைவில் நீடூர் என்ற மற்றொரு சிவஸ்தலம் உள்ளது. |
ஆலய முகவரி | அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் பொன்னூர் பாண்டூர் அஞ்சல், (வழி) நீடூர் மயிலாடுதுறை வட்டம் மயிலாடுதுறை மாவட்டம் PIN - 609203 இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 11-30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
மயிலாடுதுறையில் இருந்து திருஅன்னியூர் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps
திருஅன்னியூர் என்ற பெயரில் இரண்டு தேவாரத் தலங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று காவிரி வடகரைத் தலம், மற்றொன்று காவிரி தென்கரைத் தலம். காவிரி வடகரைத் தலமான திருஅன்னியூர் இன்றைய நாளில் பொன்னூர் என்று அழைக்கப்படுகிறது.
கோவில் அமைப்பு: ஆரவாரமற்ற அமைதியான இந்த பொன்னூர் கிராமத்தின் வடகோடியில் எழிலுற அமைந்திருக்கிறது இச்சிவாலயம். கிழக்கு முகம் கொண்ட இச்சிவாலயம் சிறிய ஆலயமாக சிறப்புறத் திகழ்கிறது. இவ்வாலயத்திற்கு கோபுரம் இல்லை. கிழக்கு நோக்கிய ஒரு தோரண வாயில் மட்டும் உள்ளது. முகப்பு வாயிலின் மேல் அழகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன. முகப்பு வாயிலுக்கு எதிரில் வருண தீர்த்தம் (அக்னி தீர்த்தம் என்றும் இதற்குப் பெயர் உண்டு) உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் ஒரு சிறிய விமானத்துடன் கூடிய நந்தி மண்டபமும் அதையடுத்து இறைவன் கருவறைக்குச் செல்லும் மற்றொரு நுழைவு வாயிலும் உள்ளன. இந்த இரண்டாவது நுழைவு வாயில் மேற்புரத்திலும் அழகிய சுதை வேலைப்பாடுகள் கொண்ட உருவங்கள் காணப்படுகின்றன. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், முருகன், மகாலட்சுமி, நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. கருவறை முன் உள்ள மகா மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் பிருஹந்நாயகி சந்நிதி உள்ளது. அம்பாளைத் தொழுது வரும்போது பிராகாரத்தில் ஆதிமூல லிங்கம் - அக்கினிக்குக் காட்சி தந்த மூர்த்தி உள்ளார்.
கருவறை அர்த்த மண்டபத்தில் விநாயகர் தரிசனம் தருகிறார். கருவறையில் ஆபத்சகாயேஸ்வரர் லிங்க உருவில் சுயம்புமூர்த்தியாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இத்தல நாதனான ஆபத்சாகயேஸ்வரர் பெறும் ஆபத்துகளையும் நீக்க வல்லவர். ஒரே மகாமண்டபத்தைக் கொண்டு ஸ்வாமி சன்னதி கிழக்கு நோக்கியும், அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியும் அமையப் பெற்றுள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை உள்ளனர். கருவறை சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி - தெய்வயானையுடன் முருகர், சந்திரசேகரர், நடராஜர், சிவகாமி, ஆடிப்பூர அம்மன், துர்க்கை, அஸ்திரதேவர் முதலிய மூர்த்தங்கள் உள்ளன. வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் சுப்பிரமணியர், காதுகளில் வட்ட வடிவமான காதணி அணிந்த கோலத்தில் காட்சி தருவது சிறப்பம்சம்.
இவ்வாலயத்தின் தலவிருட்சம் எலுமிச்சை மரம். அக்கினி, சூரியன், ரதி, பாண்டவர் முதலியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர்.
தலத்தின் பெருமை:
வைகாசி விசாகத்தில் இத்தலத்தில் நீராடி, ஸ்வாமி, அம்பாளுக்கு அபிஷேகம் நடத்தி, தயிர் சாதம் நிவேதித்து, வழிபடுவோரது பெரும் ஆபத்துகள் நீங்கும் என்பது இத்தலத்தின் பிரார்த்தனையாக அனுசரிக்கப்படுகிறது. இவ்வூரில் அமைந்துள்ள கரியமாணிக்கப் பெருமாள் கோயிலும் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும்.
Top