Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருநின்றியூர்
இறைவன் பெயர்லக்ஷ்மிபுரீசுவரர், மகாலட்சுமிநாதர்
இறைவி பெயர்உலகநாயகி
பதிகம்திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 1
சுந்தரர் - 2
எப்படிப் போவது வைத்தீஸ்வரன்கோயில் - மயிலாடுதுறை சாலை மார்க்கத்தில் திருநின்றியூர் இருக்கிறது. பிரதான சாலையிலிருந்து கோவில் செல்ல பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 1 கி.மீ. சென்று இத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறையிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஆலய முகவரிஅருள்மிகு லக்ஷ்மிபுரீசுவரர் திருக்கோவில்
திருநின்றியூர்
திருநின்றியூர் அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
மயிலாடுதுறை மாவட்டம்
PIN - 609118

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
Tirunindriyur route map

வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து திருநின்றியூர்
செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

மூவர் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் வரிசையில் திருநின்றியூர் லக்ஷ்மிபுரீசுவரர் ஆலயமும் ஒன்று. இவ்வாலயம் 3 நிலைகளைக் கொண்ட இராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் விசாலமான முற்றவெளி உள்ளது. கொடிமரம் இல்லை. பலிபீடமும், நந்தியும், கொடிமரத்து விநாயகரும் இருப்பதைக் காணலாம். வெளிப் பிராகாரத்தில் செல்வப் பிள்ளையார் சந்நிதியுள்ளது. அடுத்து பரசுராமர் வழிபட்ட லிங்கமும், வள்ளி, தெய்வானையுடன் வலது புறம் திரும்பிய மயில் வாகனத்துடன் சுப்பிரமணியர், நால்வர், மகாலட்சுமி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. அடுத்து நவக்கிரக சந்நிதியும், பைரவர், சந்திரன் உருவங்கள் ஒரு சந்நிதியிலும் உள்ளன. பிரகார வலம் முடித்து, துவார விநாயகரையும் தண்டபாணியையும் வழிபட்டு, துவாரபாலகர்களைத் தொழுது, உட்சென்றால் நேரே சுவாமி சந்நிதியும், வலதுபுறம் அம்பாள் சந்நிதியும் உள்ளன.

தனது தந்தை ஜமதக்னி முனிவரின் ஆணைப்படி தனது தாயான ரேணுகாவைக் கொன்றார் பரசுராமர். பின் தனது தந்தையிடம் அன்னையை உயிர்ப்பிக்கும் படி வரம் வேண்டி தாயை உயிர்ப்பித்தார். தாயைக் கொன்ற தோஷம் நீங்குவதற்காக இத்தலத்தில் இறைவனை வழிபட்டு மன அமைதி பெற்றார். ஜமதக்னி முனிவரும் தான் அவசரத்தில் செய்த செயலுக்கு வருந்தி இங்கு சிவபெருமானை வணங்கி மன்னிப்பு கேட்டுக் கொண்டார். சிவன் இருவருக்கும் காட்சி தந்து அருள் செய்தார். பரசுராமர் வழிபட்ட சிவன் பிரகாரத்தில் பரசுராமலிங்கமாக காட்சி தருகிறார். ஜமதக்னி முனிவருக்கு காட்சி தந்த சிவன் ஜமதக்னீஸ்வரர் என்ற் பெயருடன் சிறிய பாண வடிவில் காட்சி தருகிறார். அருகில் மகாவிஷ்ணுவின் சந்நிதியும் உள்ளது. மகாலட்சுமியும் இத்தலத்தில் சிவனை வழிபட்டு அருள் பெற்றாள். எனவே தான் இத்தலத்து சிவன் மகாலட்சுமீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இந்திரன், அகத்தியர், பரசுராமர், ஐராவதம், பசு, சோழ மன்னன் ஆகிய பலரும் இத்தல இறைவனை வழிபட்டு பேறுகள் யாவும் பெற்றுள்ளனர்.

சோழ மன்னன் ஒருவன் தினந்தோறும் சிதம்பரம் சென்று நடராஜரை தரிசிக்கும் வழக்கும் உடையவன் அவ்வாறு தனது படைகளுடன் செல்லும் போது இத்தலம் இருக்கும் காட்டு வழியே தான் தினமும் செல்வான். இரவு நேரத்தில் தீப்பந்தங்களுடன் இவ்வழியே செல்லும் போது தீப்பந்தங்கள் தானாகவே அணைந்து, இத்தல எல்லையைத் தாண்டியவுடன் தானாகவே எரிய ஆரம்பிக்கும். இவ்வாறு பல நாட்கள் தொடர்ந்து நடைபெற, மன்னன் காட்டில் மாடுகளை மேய்ந்து கொண்டிருந்த ஒரு இடையனிடம் இத்தலத்தில் ஏதேனும் விசேஷம் உண்டா எனக் கேட்டான். இடையன் பசுக்கள் இங்கு ஓரிடத்தில் தானாகவே பாலை கறப்பதைக் கண்டதாகக் கூறினான். மன்னன் அவ்விடத்தில் நிலத்தைத் கோடாரியால் தோண்ட இரத்தம் வெளிப்பட்டது. மன்னன் மேலும் அவ்விடத்தை ஆராய ஒரு சிவலிங்கம் இருப்பதையும், அதன் பாணத்தின் மேல் பகுதியில் கோடாரி பட்டு இரத்தம் வருவதையும் கண்டு மிவும் வருத்தம் அடைய, அப்போது அசரீரி மூலம் இறைவன் தான் இருக்குமிடத்தை தெரியப்படுத்தவே இவ்வாறு செய்ததாகக் கூறி, இவ்விடத்தில் ஆலயம் எழுப்ப மன்னனுக்கு ஆணையிட்டார். மன்னனும் சிவலிங்கம் இருந்த அதே இடத்தில் கோவிலைக் கட்டினான் என்று தல வரலாறு கூறுகிறது. இன்றும் சிவலிங்கத்தின் பாணத்தில் தற்போதும் கோடரி வெட்டிய தழும்பு குழி போல இருப்பதைப் பார்க்கலாம். இத்தலத்தில் மூலவர் சுயம்பு லிங்கமாக உயர்ந்த பாணத்துடன் எழுந்தருளியுள்ளார். தீப்பந்தம் திரி நின்ற ஊர் ஆனதால் இத்தலம் திரிநின்றஊர் என்று பெயர் பெற்று தற்போது மருவி திருநின்றியூர் என்று வழங்குகிறது.

தேவாரம் பாடப்பட்ட காலத்தில் இத்தலமும் கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில்களுள் ஒன்றாக விளங்கியது. நூறு ஆண்டுகளுக்குமுன் நகரத்தார் திருப்பணி செய்தபோது இதை இப்போதுள்ள அமைப்பில் மாற்றிக் கட்டிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இத்தலம் மூவர் தேவாரப் பாடலும் பெற்ற சிறப்புடையதாகும் இத்தலத்திற்கு அப்பர் பாடிய பதிகம் 1, திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் 1, சுந்தரர் பாடிய பதிகங்கள் 2 என 4 பதிகங்கள் உள்ளன. இவை தவிர மற்ற தலப்பதிகங்களிலும், பொது பதிகங்களிலும் இத்தலம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சுந்தரரின் இரண்டு பதிகங்களில் ஒன்று இங்கு தரப்பட்டுள்ளது. அதில் முதல் 7 பாடல்களே நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. 8, 9, 10 பாடல்கள் சிதைந்து போய் விட்டன.

இப்பதிகத்தின் முதல் பாடலில் சிலந்திக்கு அருள் செய்து மறுபிறப்பில் கோச்செங்கட் சோழனாக பிறக்க அருள் செய்ததைக் குறிப்பிடுகிறார்.

2-வது பாடலில் 4900 பதிகங்கள் பாடிய திருநாவுக்கரசருக்கும், சண்டேசுர நாயனாருக்கும், கண்ணப்ப நாயனாருக்கும் அருள் செய்ததை குறிப்பிடுகிறார்.

3-வது பாடலில் இத்தலத்தின் புராணத்தைக் குறிப்பிடுகிறார். பரசுராமர் தனக்கு காட்சி கொடுத்தருளிய இறைவனுக்கு 300 வேதியர் சூழ, 340 வேலி நிலத்தைக் கொடுத்து திருநின்றியூர் என்று பெயரிட்டு பொன்னாலாகிய அழகிய கலசங்களைக் கொண்டு நீர் வார்த்து அளிக்க, அவருக்கு தன் திருவடியை அளித்த இறைவன் என்று குறிப்பிடுகிறார்.

4வது பாடலில் பசு ஒன்று தன் மடியாகிய கலசத்திலிருந்து பாலைச் சொரிந்து வழிபட்டு இறைவன் திருவடியை அடைந்ததைக் குறிப்பிடுகிறார்.

5-வது பாடலில் இத்தலத்திலுள்ள இறைவனை இந்திரன் வழிபட அவனுக்கு வான நாட்டை ஆட்சி செய்யும் உரிமையை வழங்கியதையும், அகத்தியருக்கு பொதியமலையில் வீற்றிருக்க அருள் புரிந்ததையும் குறிப்பிடுகிறார்.

7-வது பாடலில் துர்வாசர் சாபத்தால் காட்டானையாகி திரிந்த தேவலோக யானை ஐராவதம் இறைவனை வழிபட அதற்கு முன்னை வடிவத்தையும் விண்ணுலகம் அடையும் பேற்றையும் வழங்கியதைக் குறிப்பிடுகிறார்.

Top
லக்ஷ்மிபுரீசுவரர் ஆலயம் புகைப்படங்கள்
3 நிலை கோபுரம்
கோபுர வாயில் கடந்து உள் தோற்றம்
இறைவன் கருவறை விமானம்
சுப்பிரமணியர்
நால்வர் சந்நிதி
பரசுராம லிங்கம்
மூலவர் லக்ஷ்மிபுரீசுவரர்