தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருக்கடைமுடி (தற்போதைய பெயர் கீழையூர்) |
இறைவன் பெயர் | கடைமுடிநாதர், அந்தஸம்ரக்ஷணேஸ்வரர் |
இறைவி பெயர் | அபிராமி |
பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
எப்படிப் போவது | மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் மேலப்பாதியைக் கடந்து பூம்புகாருக்கு முன்னால் உள்ள கீழையூரில் இத்தலம் அமைந்துள்ளது. கீழையூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு கி.மீ. நடந்தால் கோயிலை அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது. மயிலாடுதுறை - பொறையார் சாலையிலுள்ள மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமான திருசெம்பொனார்கோவிலில் (காவிரி தென்கரைத் தலம்) இருந்து திருநனிபள்ளி (புஞ்சை) வழியாகவும் இத்தலத்திற்கு செல்லலாம். |
ஆலய முகவரி | அருள்மிகு கடைமுடிநாதர் (அந்தஸம்ரக்ஷணேஸ்வரர்) திருக்கோவில் கீழையூர் கீழையூர் அஞ்சல் தரங்கம்பாடி வட்டம் மயிலாடுதுறை மாவட்டம் PIN - 609304 ஆலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலய தொடர்புக்கு: தொலைபேசி எணகள் - 04364 283360, 04364 283261, 94427 79580 |
மயிலாடுதுறையில் இருந்து திருக்கடைமுடி செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps
தலத்தின் சிறப்பு: பிரம்மா இத்தலத்தின் சிறப்பை உணர்ந்து இங்கு இறைவனுக்கு ஓர் ஆலயம் எழுப்பி இறைவனைப் போற்றி வணங்கி வந்தார். தன் பெயரில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதற்கு பிரம்ம தீர்த்தம் எனப் பெயரிட்டு அப்புனித நீரால் இறைவனை வழி பட்டுள்ளார். இந்த பிரம்ம தீர்த்தம் ஆலயத்தின் நேர் எதிரில் அழகுற விசாலமாக அமைந்துள்ளது. மகிழ்ந்த சிவன், அவருக்கு இங்கிருந்த கிளுவை மரத்தடியில் காட்சி தந்தார். பிரகாரத்தில் உள்ள கிளுவை மரத்தின் கீழ், கிளுவைநாதர் இருக்கிறார். இவரே இக்கோயிலின் ஆதிமூர்த்தி ஆவார். கண்வ மகரிஷியும் (சகுந்தலையின் வளர்ப்புத்தந்தை) இத்தல இறைவனை வழிபட்டு தன் புண்ணிய பலன்களைப் பெருக்கிக் கொண்டார் என்பது இத்தலத்தின் மற்றொரு சிறப்பாகும். இவர் காவிரியில் நீராடி வழிபட்ட இடம் இன்று கண்வமஹான் துறை என்ற காரணப் பெயர் கொண்டு வளங்குகிறது. இத்தல இறைவன் கடைமுடிநாதர் என்றும், வடமொழியில் அந்தஸம்ரக்ஷணேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். கடைமுடிநாதர் என்ற பெயரினால் நாம் நமது ஆயுளின் கடைசி காலத்தில் அவரைப் பற்ற வேண்டும் என்றும், அந்தஸம்ரக்ஷணேஸ்வரர் என்ற பெயரினால் நமது அந்திமக் காலத்தில் அதாவது இறுதிக் காலத்தில் நம்மைக் காப்பவர் அவரே என்று நமக்குத் தெளிவாக புலப்படுத்துகிறார்.
கோவிலின் அமைப்பு:இவ்வாலயம் ஒரு முகப்பு வாயிலுடன் காட்சி தருகிறது .இராஜகோபுரமில்லை. இறைவனின் சந்நிதி மேற்கு நோக்கி உள்ளது. மேற்கு பார்த்த சிவத்தலங்கள் தமிழகத்தில் சில இடங்களிலேயே உள்ளன. அதில் இதுவும் ஒன்று. லிங்க மூர்த்தம் 16 பட்டைகளுடன் ஷோடச லிங்கமாக அமைந்துள்ளது இத்தலத்தின் மற்றொரு சிறப்பாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் உள்ள நவக்கிரக மண்டபம் எண்கோண வடிவ ஆவுடையார் மீது அமைக்கப்பட்டுள்ளது. சிவன் சந்நிதி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தியும், பைரவரும் இடதுகாதில் வளையம் அணிந்துள்ளனர். கடைமுடி விநாயகர் மற்றும் சுப்பிரமணியருக்கும் சந்நிதிகள் உள்ளன. அம்பாள் அபிராமி என்ற பெயருடன் தெற்கு நோக்கி அருள் காட்சி தருகிறாள்.
அபிராமி அன்னையை அருகிலுள்ள கண்வமஹான் துறையில் நீராடி வெள்ளிக்ககிழமை தரிசனம் செய்து ஸெளபாக்கிய திரவியங்கள் சமர்ப்பித்து வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். கன்னிப்பெண்கள் திருமணத்தடை நீங்க திருமாங்கல்ய வழிபாடு செய்கின்றனர்.
இத்தலத்தில் காவிரி வடக்கு முகமாக வந்து பின் மேற்காக ஓடுவதும் ஒரு சிறப்பம்சமாகும்.
Top