தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருகோலக்கா |
இறைவன் பெயர் | சப்தபுரீசுவரர், தாளபுரீஸ்வரர் |
இறைவி பெயர் | ஓசைகொடுத்த நாயகி, த்வனிபிரதாம்பாள் |
பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 சுந்தரர் - 1 |
எப்படிப் போவது | சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் திருகோலக்கா என்ற சிவஸ்தலம் இருக்கிறது. இக்காலத்தில் இது திருத்தாளமுடையார் கோவில் என்று வழங்கப்படுகிறது. |
ஆலய முகவரி | அருள்மிகு சப்தபுரீசுவரர் திருக்கோவில் திருக்கோலக்கா சீர்காழி அஞ்சல் சீர்காழி வட்டம் மயிலாடுதுறை மாவட்டம் PIN - 609110 இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
சீர்காழியில் பிறந்து வளர்ந்த திருஞானசம்பந்தர் திருக்கோலக்கா அல்லது திருத்தாளமுடையார் கோவில் என்று வழங்கும் இத்தலத்தில் இருந்து தான் தன்னுடைய சிவஸ்தல யாத்திரையைத் தொடங்கினார். சீர்காழியில் ஞானப்பாலுண்டு பதிகம் பாடத் தொடங்கிய சுமார் மூன்று வயதுடைய சம்பந்தர் தனது முதல் தல யாத்திரையாக சென்றது இத்தலத்திற்குத் தான். தனது சின்னஞ்சிறு கைகளால் தட்டி தாளம் போட்டுக்கொண்டு இத்தலத்தில் இறைவனைத் துதித்து பதிகம் பாடினார். கைகள் வலிக்குமே என்று சம்பந்தருக்காக இரக்கப்பட்ட இத்தலத்து இறைவன் சம்பந்தருக்கு இரண்டு பொற்றாளம் கொடுத்து அருளினார். இறைவி அதற்கு தெய்வீக ஓசையைத் தந்தருளினாள். ஆதலின் இத்தலத்து அம்பிகைக்கு ஓசை கொடுத்த நாயகி என்று பெயர். சம்பந்தருக்கு பொற்றாளம் தந்த இறைவனை சுந்தரர் தனது பதிகத்தில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.
நாளும் இன்னிசை யால்தமிழ் பரப்பும் ஞான சமந்த னுக்குல கவர்முன் தாளம் ஈந்தவன் பாடலுக் கிரங்கும் நன்மை யாளனை என்மனக் கருத்தை ஆளும் பூதங்கள் பாடநின் றாடும் அங்க ணன்றனை எண்கணம் இறைஞ்சும் கோளி லிப்பெரும் கோயிலுள் ளானைக் கோலக் காவினிற் கண்டு கொண்டேனே.
கோவில் அமைப்பு: மக்கள் வழக்கில் தாளமுடையார் கோவில் என்று அறியப்படும் கிழக்கு நோக்கி உள்ள இவ்வாலயத்திறகு கோபுரம் இல்லை. முகப்பு வாயிலுக்கு எதிரே திருக்குளம் ஆனந்ததீர்த்தம் உள்ளது. முகப்பு வாயிலின் மேற்புறத்தில் வண்ணச் சுதையில் ரிஷபாரூடர் தரிசனம் தருகிளார். கிழக்கு நோக்கி இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளன. முதல் நுழைவு வாயிலைக் கடந்தவுடன் திறந்த வெளிமுற்றம் உள்ளது. இரண்டாவது நுழைவு வாயில் வழியாக உட்புகுந்தவுடன் நேர் எதிரே பலிபீடம், நந்தி இவற்றைக் கடந்தால் இறைவன் சந்நிதி உள்ளது. உள்ளே சம்பந்தருக்கு பொற்தாளம் கொடுத்த இறைவன் தாளபுரீஸ்வரர் லிங்க உருவில் எழுந்தருளியுள்ளார். இந்திரன் மற்றும் சூரியன் இத்தலத்தில் இறைவன் சப்தபுரீஸ்வரரை வணங்கி வழிபட்டுள்ளனர். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறைப் பிரகாரத்தின் மேற்குச் சுற்றில் கிழக்கு நோக்கிய வள்ளி தேவசேனாவுடன் இருக்கும் முருகர் சந்நிதி இருக்கிறது. மேற்குச் சுற்றில் முருகர் சந்நிதியை அடுத்து மகாலட்சுமி சந்நிதி உள்ளது. இத்தலத்தில் உள்ள மகாலட்சுமி மிகவும் சக்தி வாய்ந்தவள். மகாலட்சுமி இங்கு சிவபெருமானை தவம் செய்து அதன் பயனாக மகாவிஷ்னுவை திருமணம் செய்து கொண்டாள். திருமகள் திருமணம் செய்து கொண்ட தலம் ஆதலால் திருகோலக்கா என்று இத்தலம் பெயர் பெற்றது. திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் இங்கு தொடர்ந்து ஆறு வாரங்கள் மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்தால் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடைபெறும் என்பது ஐதீகம். இறைவி ஓசைகொடுத்த நாயகியின் சந்நிதி ஒரு தனிக் கோவிலாக இறைவன் சந்நிதிக்கு இடதுபுறம் அமைந்துள்ளது. வெளிப் பிரகாரத்தின் வடக்குச் சுற்றில் உள்ள வாயில் வழியாக இறைவியின் சந்நிதியை அடையலாம்.
பிற்காலத்தில் இப்பகுதியில் தன் ஊமை மகன் பேசும் ஆற்றலைப் பெறவேண்டும் என்று, பிரார்த்தித்துக் கொண்ட தாய் ஒருத்தி, அவ்வாறே இறையருளால் தன் மகன் பேசும் வல்லமை பெற, மகிழ்ந்து, கோயிலுக்குத் தன் காணிக்கையாகச் செய்து தந்துள்ள பொற்றாளம் கோவிலில் உள்ளது.
திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.