Shiva Temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


பாசுபதேஸ்வரர் கோவில், திருவேட்களம்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவேட்களம்
இறைவன் பெயர்பாசுபதேஸ்வரர், பாசுபதநாதர்
இறைவி பெயர்நல்லநாயகி, சற்குனாம்பாள்
பதிகம்திருநாவுக்கரசர் - 1,
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது சிதம்பரத்தில் இருந்து 2 கி.மி. தொலைவில் அண்ணாமலை பல்கலைக் கழகம் வளாகத்தின் உள்ளே புகுந்து பின்புறம் சங்கீதக் கல்லூரியைக் கடந்து சென்று இத்தலத்தை அடையலாம்.
அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்1. திருநெல்வாயல் - 4 கி மி -
2. திருக்கழிப்பாலை - 4 கி மி -
ஆலய முகவரிஅருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோவில்
திருவேட்களம்
அண்ணாமலை நகர் அஞ்சல்
சிதம்பரம்
கடலூர் மாவட்டம்
PIN - 608002

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6-45 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

படிக்கும் நேரம் - நிமிடங்கள்

தல வரலாறு: அர்ஜுனன் தவம் செய்து, பாசுபதம் பெற்ற முதன்மைத் தலமாகக் கருதப்படுவது திருவேட்களம். பாரதப்போரில் வெற்றி பெறுவதற்காக அர்ஜுனன் பாசுபதம் பெற விரும்பி சிவபெருமானை நோக்கி மூங்கில் காடாக இருந்த திருவேட்களத்தில் கடும் தவம் செய்கிறான். அர்ஜுனனின் தவத்தைக் கெடுக்க துரியோதனன் மூகாசுரனை பன்றி வடிவில் அனுப்பினான். சிவபெருமான் பார்வதியுடன் வேடன் உருவில் வந்து தனது அம்பால் பன்றியை கொன்றார். அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பெய்தினான். அந்த பன்றியை யார் கொன்றார்கள் என்பது குறித்து சிவனுக்கும் அர்ஜுனனுக்கும் சொற்போரும், விற்போரும் நடந்தது. விற்போரில் அர்ஜுனின் வில் முறிந்தது. இதனால் கோபமடைந்த அவன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். இந்த அடி மூவுலகத்தில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது. இதனால் அன்னை பார்வதி கோபமடைந்தாள். சிவன் பார்வதியை சமாதானப்படுத்தி தனது திருவடியால் அர்ஜுனனை தூக்கி எறிகிறார். அவன் சிவனின் பாத தீட்சை பெற்று, அன்னையின் கருணையால் இத்தல தீர்த்தத்தில் விழுகிறான். சிவன், உமாதேவியுடன் காட்சிகொடுத்து, அர்ஜுனனுக்கு பாசுபதம் கொடுத்து அருளினார். அர்ஜுன் வில்லால் அடித்த தழும்பு லிங்கத்தின் மீது இருப்பதை இன்றும் காணலாம். கிராதமூர்த்தியாக பாரவதிதேவியுடன் பாசுபதாஸ்திரம் கையில் ஏந்திய இறைவனின் உற்சவ விக்கிரகமும், அர்ஜுனன் உற்சவ விக்கிரகமும் இவ்வாலயத்தில் உள்ளன. வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் அளித்த உற்சவம் நடைபெறுகிறது.


தற்போது மூன்று அடுக்கு ராஜகோபுரத்துடன் கோயில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பிரகாரத்தில் சித்திவிநாயகர், சோமஸ்கந்தர் சந்நிதிகள் உள்ளன. முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பிகையின் சன்னதியில் நான்கு தூண்களிலும் அர்ஜுனன் தன் ஆயுதங்களை வைத்தல், ஒரு காலில் நின்று தவம் புரிதல், இறைவன் வேடன் வடிவம் எடுத்தல், சிவனும் அர்ஜுனனும் சண்டையிடுதல் போன்றவை சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளன. கோயிலின் சுற்றுப்பகுதியில் உள்ள நர்த்தன விநாயகர், அனுக்கிரக தட்சிணாமூர்த்தி, இந்திர மயில் மீதமர்ந்த முருகன் ஆகியன அனைவரையும் கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அருகருகே சூரியனும் சந்திரனும் இத்தலத்தில் இருப்பது விசேஷம். இவர்களை சூரிய, சந்திர கிரகணங்களின் போது வழிபட்டால் கிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். மூலவர் கருவறையில் கிழக்கு நோக்கு எழுந்தருளியுள்ளார். கோஷ்ட மூர்த்திகளாக உச்சி விநாயகர், நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதியுன் உள்ளது.



இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் பன்னிரு திருக்கரங்களுடன் தனது தேவியர் இருவருடன் மயில் மீது கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருவாசியுடன் ஒரே கல்லில் அமைந்த திருவுருவம். வைகாசி விசாக விழா இத்தலத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இத்தல தீர்த்தம் கிருபா தீர்த்தம் கோவிலின் எதரில் உள்ளது. தலமரம் மூங்கில்.

திருஞானசம்பந்தர் சிதம்பரத்தில் தங்கியிருப்பதற்கு மனமில்லாமல் திருவேட்களம் என்ற இத்தலத்திலிருந்து கொண்டு தான் சிதம்பரத்திற்கு எழுந்தருளி நடராஜப் பெருமானை தரிசித்து வந்தார்.

திருநாவுக்கரசர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. தனது பதிகத்தின் முதல் பாடலில் இத்தல இறைவனைத் தொழுதால் நம் வினைகள் யாவும் தொலைந்து விடும், என்றும் இன்பம் தழைக்க இருந்து உய்யலாம் என்று குறிப்பிடுகிறார். மேலும் தனது பதிகத்தின் 6-வது பாடலில் கவலைகளாற் கட்டப்பெற்று வீழ்ந்திடாது, விரைந்து உயிர்போவதற்கு முன்பே உயர்ந்த இறைவர் எழுந்தருளியுள்ள திருவேட்களம் இறைவனைத் கைதொழுவீர்களாக, அப்படி தொழுதால் பொருந்திய வல்வினைகள் அனைத்தும் கெடும் என்றும் குறிப்பிடுகிறார்.


திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்து பதிகம்

  1. அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல்

திருநாவுக்கரசர் அருளிய இத்தலத்து பதிகம்

  1. நன்று நாடொறும் நம்வினை போயறும்

அருணகிரிநாதர் அருளிய இத்தலத்து திருப்புகழ்

  1. சதுரத்தரை நோக்கிய பூவொடு
  2. மாத்திரை யாகிலு நாத்தவ றாளுடன்
பாசுபதேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

3 நிலை இராஜகோபுரம்
வெளிப் பிரகாரத்தில் கொடிமரம், பலிபீடம்
கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி
கோஷ்டத்தில் லிங்கோத்பவர்
வள்ளி தெய்வானையுடன் முருகர்