Shiva Temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


பசுபதிநாதர் திருக்கோவில், கருவூர், (கரூர்)

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்கருவூர் (கரூர்)
இறைவன் பெயர்பசுபதிநாதர், ஆநிலையப்பர்
இறைவி பெயர்சுந்தரவல்லி, அலங்காரவல்லி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவதுகரூர் நகரின் மத்தியில் கோவில் உள்ளது. கோயமுத்தூர், ஈரோடு, திருச்சியில் இருந்து பேருந்து வசதிகள் நிறைய உள்ளன. கரூர் ரயில் நிலையம் திருச்சி - ஈரோடு ரயில் பாதையில் இருக்கிறது.
ஆலய முகவரிஅருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோவில்
கரூர்
கரூர் மாவட்டம்
PIN - 639001

ஆலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

புத்திர பாக்கியம் அருளும் ஒரு பரிகார ஸ்தலமாக இத்தலம் போற்றப்படுகிறது

மேலும் படிக்க...

படிக்கும் நேரம் - நிமிடங்கள்

கோவில் அமைப்பு: கொங்குநாட்டு சிவஸ்தலங்களில் கரூரில் உள்ள சிவாலயம் பெருமை மிக்கதும் பெரிய அளவில் அமைந்துள்ளதும் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூன்று சிறப்புக்களை உள்ளடக்கியது கரூர் பசுபதிநாதர் கோயில். இந்த சிவஸ்தலம் கோவில் சுமார் 2.65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோவில் ராஜகோபுரம் ஏழு நிலைகளையும் ஏழு கலசங்களையும் கொண்டுள்ளது. கோபுரத்தில் திருவிளையாடல் புராணம், தசாவதாரம் ஆகியவை சுதைச் சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. உட்கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. இரு கோபுரங்களுக்கும் இடையே புகழ்ச்சோழர் மண்டபம் உள்ளது. புகழ்ச்சோழர் 63 நாயன்மார்களில் ஒருவர். இவர் கருவூர்ப் பகுதியை ஆண்ட மன்னராவார். 63 நாயன்மார்களில் ஒருவரான எறிபத்த நாயனார் பிறந்த தலம் என்ற பெருமையும் கருவூருக்கு உண்டு.


கோவில் நல்ல சுற்று மதிலோடு கூடியது. கிழக்கு மேற்காக 465 அடி நீளமும், தெற்கு வடக்காக 205 அடி நீளமும் உடையது. முன் கோபுரம் 120 அடி உயரம் உள்ளது. கோவிலுக்குள் 2 பிரகாரங்கள் உண்டு. கோவிலில் உள்ள நூற்றுக்கால் மண்டபம் காணவேண்டிய ஒன்றாகும். கிழக்கு நோக்கி உள்ள கல்யாண பசுபதிநாதர், ஆநிலையப்பர் என்று வழங்கப்படும் மூலவர் ஒரு சுயம்பு லிங்கம் ஆகும். சுமார் இரண்டடி உயரம் உள்ள இந்த சிவலிங்கம் வடபுறமாகச் சற்றே சாய்ந்தாற்போலக் காட்சியளிக்கிறது. பங்குனி மாதம் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் சூரியனின் ஒளி லிங்கத்தின் மீது படும்படியாக கோவில் அமைப்பு இருப்பது ஒரு சிறப்பம்சம் ஆகும். கீழ்ப்பகுதி பிரம்மபாகம். நடுப்பகுதி திருமால் பாகம். மேல்பகுதி உத்திர பாகம் என்று மும்மூர்த்திகளும் சேர்ந்த திருமூர்த்தியாக சிவலிங்கம் காட்சி தருகிறது. கோயிலில் லிங்கத்திற்கு எதிரில் கொடிமரமும், அடுத்து பலிபீடமும், நந்திகேஸ்வரரின் திருமேனியும் உள்ளன.உட்பிரகாரத்தில் தெற்குச்சுற்றில் 63 நாயன்மார்கள் எழுந்தருளியுள்ளனர். அவர்களில் எரிபத்த நாயனாருக்கு தனி சந்நிதி இருக்கிறது. மேற்குச் சுற்றில் விநாயகர், கஜலட்சுமி, ஆருமுகன் ஆகியோரின் திரு உருவங்கள் உள்ளன. வடக்குச் சுற்றில் பஞ்சலிங்க மூர்த்திகள் உள்ளனர்.



ஈசன் சந்நிதியில் இருந்து வடக்கு நோக்கிச் சென்று ஒரு வாயிலைக் கடந்தால் அம்மன் சுந்தரவல்லி சந்நிதி தெற்கு பார்த்தபடி அமைந்திருக்கிறது. இவள் கிரியா சக்தி வடிவானவள். இந்த சந்நிதியின் இடது புறம் கிழக்கு நோக்கி அலங்காரவல்லி என்ற அம்மனின் பழைய கோவில் இருக்கிறது. இவள் ஞான சக்தி வடிவானவள். பிரம்மா, காமதேனு ஆகியோர் இங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டுள்ளனர். காமதேனு வழிபடும் போது ஏற்பட்ட குளம்பின் தழும்பு இப்போதும் சிவலிங்கத்தின் மீது காணலாம். கந்த புராண காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் முசுகுந்த சக்ரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்டதாக பெருமை பெற்றது இந்த சிவஸ்தலம். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கருவூர் சித்தர் வாழ்ந்து இக்கோவிலில் உள்ள சிவனுடன் ஐக்கியமானதால் அவருக்கு தெற்குப் பிரகாரத்தில் கன்னி மூலையில் கிழக்கு நோக்கி கருவூர் சித்தர் சந்நிதி உள்ளது.


கி.பி. 14ம் நூற்றாண்டில் கருவூருக்கு வந்த அருணகிரிநாதர் இக்கோவிலில் உள்ள முருகனை பற்றி தன்னுடைய திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 7 பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடனும், 12 திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மயில் பின் பக்கம் உள்ளது.


பசுபதிநாதர் ஆலயம்
புகைப்படங்கள்

7 நிலை இராஜகோபுரம்
நந்தி மண்டபம், கொடிமரம்
ஆலயத்தின் 2வது கோபுரம்
புகழ்ச்சோழர் மண்டபம்
ஆலயத்தின் உள் தோற்றம்
காகபுஜண்டர்
பதஞ்சலி முனிவர்
ராகு, கேது மற்றும் நாகர்கள்
கருங்கல் விளக்குத் தூண்
கருவூர் சித்தர்