தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

தேவார வைப்புத் தலங்கள் பெயர்கள்
அதிகமாக குறிப்பிடப்பட்டுள்ள பதிகங்கள். ...

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


திருநாவுக்கரசர் பதிகம் - 6-ம் திருமுறை, 71வது பதிகம்

1. பொருப்பள்ளி வரைவில்லாப் புரம் மூன்று எய்து
புலந்தழியச் சலந்தரனைப் பிளந்தான் பொற்சக்
கரப்பள்ளி திருக்காட்டுப்பள்ளி கள்ளார்
கமழ்கொல்லி அறைப்பள்ளி கலவஞ் சாரல்
சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன்பள்ளி
செழு நனிபள்ளி தவப்பள்ளி சீரார்
பரப்பள்ளி யென்றென்று பகர்வோர் எல்லாம்
பரலோகத்து இனிதாகப் பாலிப்பாரே.

2. காவிரியின் கரைக் கண்டி வீரட்டானம்
கடவூர் வீரட்டானம் காமரு சீர் அதிகை
மேவிய வீரட்டானம் வழுவை வீரட்டம்
வியன் பறியல் வீரட்டம் விடையூர்திக்கு இடமாம்
கோவல்நகர் வீரட்டம் குறுக்கை வீரட்டம்
கோத்திட்டைக்குடி வீரட்டானம் இவை கூறி
நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுகச் சென்றால்
நமன்தமருஞ் சிவன் தமரென்று அகல்வர் நன்கே.

3. நற்கொடிமேல் விடையுயர்த்த நம்பன் செம்பங்குடி 
நல்லக்குடி நளி நாட்டியத்தான்குடி
கற்குடி தென் களக்குடி செங்காட்டங்குடி
கருந்திட்டைக்குடி கடையக்குடி காணுங்கால்
விற்குடி வேள்விக்குடி நல் வேட்டக்குடி
வேதிகுடி மாணிகுடி விடைவாய்க்குடி
புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி
புதுக்குடியும் போற்ற இடர் போகுமன்றே.

4. பிறையூரும் சடைமுடி எம் பெருமான் ஆரூர்
பெரும்பற்றப்புலியூரும் பேராவூரும்
நறையூரும் நல்லூரும் நல்லாற்றூரும்
நாலூரும் சேற்றூரும் நாரையூரும்
உறையூரும் ஓத்தூரும் ஊற்றத்தூரும்
அளப்பூர் ஓமாம்புலியூர் ஓற்றியூரும்
துறையூரும் துவையூரும் தோழூர் தானுந்
துடையூரும் தொழ இடர்கள் தொடராவன்றே.

5. பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோடு எட்டும் மற்றும்
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்
திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து
தாழ்ந்து இறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே.

6. மலையார் தம் மகளொடு மாதேவன் சேரும்
மறைக்காடு வண்பொழில் சூழ் தலைச்சங்காடு
தலையாலங்காடு தடங் கடல் சூழந்தண்
சாய்க்காடு தள்ளு புனற் கொள்ளிக்காடு
பலர்பாடும் பழையனூர் ஆலங்காடு
பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க
விலையாடும் வளை திளைக்கக் குடையும் பொய்கை
வெண்காடும் அடைய வினை வேறாமன்றே.

7. கடுவாயர் தமைநீக்கி யென்னை யாட்கொள்
கண்ணுதலோன் நண்ணுமிடம் அண்ணல்வாயில்
நெடுவாயில் நிறை வயல்சூழ் நெய்தல்வாயில்
நிகழ்முல்லை வாயிலொடு ஞாழல் வாயில்
மடுவார் தென்மதுரை நகர் ஆலவாயில்
மறிகடல்சூழ் புனவாயில் மாட நீடு
குடவாயில் குணவாயில் என எல்லாம்
புகுவாரைக் கொடுவினைகள் கூடா வன்றே.

8. நாடகமாடிட நந்திகேச்சுரம் மாகாளேச்சுரம்
நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன் கான
கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டீச்சுரம்
குக்குடேச்சுரம் மக்கீச்சுரம் கூறுங்கால்
ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம் அயனீச்சுரம்
அத்தீச்சுரம் சித்தீச்சுரம் அந்தண் கானல்
ஈடுதிரை இராமேச்சுரம் என்றென்றேத்தி
இறைவனுறை சுரம் பலவும் இயம்புவோமே.

9. கந்தமாதனம் கயிலைமலை கேதாரம்
காளத்தி கழுக்குன்றம் கண்ணா ரண்ணா
மந்தமாம் பொழிற்சாரல் வடபற்பதம்
மகேந்திரமாமலை நீலம் ஏம கூடம்
விந்தமாமலை வேதஞ் சையம் மிக்க
வியன்பொதியின் மலைமேரு உதயம் அத்தம்
இந்துசேகரன் உறையும் மலைகள் மற்றும்
ஏத்துவோம் இடர் கெட நின்றே த்துவோமே.

10. நள்ளாறும் பழையாறும் கோட்டாற்றோடு
நலந்திகழும் நாலாறும் திருவையாறும்
தெள்ளாறும் வளைகுளமும் தளிக்குளமும் நல்
இடைக்குளமும் திருக்குளத்தோடு அஞ்சைக் களம்
விள்ளாத நெடுங்களம் வேட்களம் நெல்லிக்கா
கோலக்கா ஆனைக்கா வியன்கோடிகா
கள்ளார்ந்த கொன்றையான் நின்ற ஆறுங்
குளம் களங்கா என அனைத்துங் கூறுவோமே.

11. கயிலாய மலையெடுத்தான் கரங்களோடு
சிரங்களுரம் நெரியக்கால் விரலாற் செற்றோன்
பயில்வாய பராய்த்துறை தென் பாலைத்துறை
பண்டெழுவர் தவத்துறை வெண்டுறை பைம்பொழில்
குயிலாலந்துறை சோற்றுத்துறை பூந்துறை
பெருந்துறையும் குரங்காடுதுறை யினோடு
மயிலாடுதுறை கடம்பந்துறை ஆவடு
துறை மற்றுந் துறையனைத்தும் வணங்குவோமே.

இப்பதிகத்தில் குறிப்பிடப்படும் பொருப்பள்ளி, சிவப்பள்ளி, தவப்பள்ளி, பரப்பள்ளி, வழுவூர், செம்பங்குடி, நல்லக்குடி, தென்களக்குடி, கருந்திட்டைக்குடி, கடையக்குடி, மாணிகுடி, விடைவாய்க்குடி, புற்குடி, மாகுடி, புதுக்குடி, பேராவூர், ஊற்றத்தூர், அளப்பூர், நல்லாற்றூர், நாலூர், சேற்றூர், துவையூர், துடையூர், பனங்காடு, அண்ணல்வாயில், நெடுவாயில், நெய்தல்வாயில், ஞாழல் வாயில், குணவாயில், திண்டீச்சுரம், நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகளேச்சுரம், கோடீச்சுரம், குக்குடேச்சுரம், அக்கீச்சுரம், ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம், அத்தீச்சுரம், கந்தமாதனம், மகேந்திரம், நீலமலை, விந்தம், சையம், மேரு, உதயமலை, அத்தமலை, பழையாறு, நாலாறு, தெள்ளாறு, வளைகுளம், தஞ்சைத் தளிக்குளம், இடைக்குளம், திருக்குளம், தவத்துறை, பூந்துறை முதலியவை வைப்புத் தலங்கள் ஆக கூறப்படுகின்றன.