தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

தேவார வைப்புத் தலங்கள் பெயர்கள்
அதிகமாக குறிப்பிடப்பட்டுள்ள பதிகங்கள். ...

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


திருநாவுக்கரசர் பதிகம் - 6-ம் திருமுறை, 51வது பதிகம் (திருவீழிமிழலை தலத்திற்குரிய பதிகம்)

கயிலாயமலை உள்ளார் காரோணத்தார்
கந்தமாதனத்து உளார் காளத்தியார்
மயிலாடுதுறை உளார் மாகாளத்தார்
வக்கரையார் சக்கரம் மாற்கு ஈந்தார் வாய்ந்த
அயில்வாய சூலமும் காபாலமும்
அமரும் திருக்கரத்தார் ஆன் ஏறு ஏறி
வெயிலாய சோதி விளங்கு நீற்றார்
வீழிமிழலையே மேவினாரே.

பூதியணி பொன்ன் நிறத்தர் பூண நூலர்
பொங்கு அரவர் சங்கரர் வெண்குழை ஓர் காதர்
கேதிசரம் மேவினார் கேதாரத்தார்
கெடில வடஅதிகை வீரட்டத்தார்
மா துயரம் தீர்த்து என்னை உய்யக் கொண்டார்
மழபாடி மேய மழுவாளனார்
வேதிகுடி உளார் மீயச்சூரார்
வீழிமிழலையே மேவினாரே

அண்ணாமலை அமர்ந்தார் ஆரூர் உள்ளார்
அளப்பூரார் அந்தணர்கள் மாடக்கோயில்
உண்ணாழிகையார் உமையாளோடும்
இமையோர் பெருமானார் ஒற்றியூரார்
பெண்ணாகடத்துப் பெருந் தூங்கானை
மாடத்தார் கூடத்தார் பேராவூரார்
விண்ணோர்கள் எல்லாம் விரும்பி ஏத்த
வீழிமிழலையே மேவினாரே.

வெண்காட்டார் செங்காட்டங்குடியார் வெண்ணி
நன்னகரார் வேட்களத்தார் வேதம் நாவார்
பண் காட்டும் வண்டார் பழனத்து உள்ளார்
பராய்த்துறையார் சிராப்பள்ளி உள்ளார் பண்டு ஓர்
வெண்கோட்டுக் கருங்களிற்றைப் பிளிறப் பற்றி
உரித்து உரிவை போர்த்த விடலை வேடம்
விண்காட்டும் பிறைநுதலி அஞ்சக் காட்டி
வீழிமிழலையே மேவினாரே.

புடைசூழ்ந்த பூதங்கள் வேதம் பாடப்
புலியூர்ச் சிற்றம்பலத்தே நடமாடுவார்
உடைசூழ்ந்த புலித்தோலர் கலிக் கச்சிமேற்
றளி உளார் குளிர்சோலை ஏகம்பத்தார்
கடைசூழ்ந்து பலி தேரும் கங்காளனார்
கழுமலத்தார் செழுமலர்த்தார்க் குழலியோடும்
விடைசூழ்ந்த வெல்கொடியார் மல்கு செல்வ
வீழிமிழலையே மேவினாரே.

பெரும்புலியூர் விரும்பினார் பெரும் பாழியார்
பெரும்பற்றப்புலியூர் மூலட்டானத்தார்
இரும்புதலார் இரும்பூளைஉயுள்ளார் ஏர் ஆர்
இன்னம்பரார் ஈங்கோய் மலையார் இன்சொல்
கரும்பனையாள் உமையோடும் கருகாவூரார்
கருப்பறியலூரார் கரவீரத்தார்
விரும்பு அமரர் இரவுபகல் பரவி ஏத்த
வீழிமிழலையே மேவினாரே.

மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார்
வாழ்கொளிபுத்தூரார் மாகாளத்தார்
கறைக்காட்டும் கண்டனார் காபாலியார்
கற்குடியார் விற்குடியார் கானப்பேரார்
பறைக்காட்டும் குழிவிழிகண் பல்பேய் சூழப்
பழையனூர் ஆலங்காட்டு அடிகள் பண்டோர்
மிறைக்காட்டும் கொடுங்காலன் வீடப் பாய்ந்தார்
வீழிமிழலையே மேவினாரே.

அஞ்சைக்களத்து உள்ளார் ஐயாற்று உள்ளார்
ஆரூரார் பேரூரார் அழுந்தூர் உள்ளார்
தஞ்சைத் தளிக்குளத்தார் தக்களூரார்
சாந்தை அயவந்தி தங்கினார் தாம்
நஞ்சைத் தமக்கு அமுதா உண்ட நம்பர்
நாகேச்சரத்து உள்ளார் நாரையூரார்
வெஞ்சொல் சமண் சிறையில் என்னை மீட்டார்
வீழிமிழலையே மேவினாரே.

கொண்டல் உள்ளார் கொண்டீச்சரத்தின் உள்ளார்
கோவலூர்வீரட்டம் கோயில் கொண்டார்
தண்டலையார் தலையாலங்காட்டில் உள்ளார்
தலைச்சங்கைப் பெருங்கோயில் தங்கினார் தாம்
வண்டலொடு மணல் கொணரும் பொன்னி நன் நீர்
வலஞ்சுழியார் வைகலின் மேல்மாடத்து உள்ளார்
வெண்தலை கைக்கொண்ட விகிர்த வேடர்
வீழிமிழலையே மேவினாரே.

அரிச்சந்திரத்து உள்ளார் அம்பர் உள்ளார்
அரிபிரமர் இந்திரர்க்கும் அரியரானார்
புரிச்சந்திரத்து உள்ளார் போகத்து உள்ளார்
பொருப்பு அரையன் மகளோடு விருப்பர் ஆகி
எரிச்சந்தி வேட்கும் இடத்தார் ஏம
கூடத்தார் பாடத் தேன் இசையார் கீதர்
விரிச்சங்கை எரிக்கொண்டு அங்கு ஆடும் வேடர்
வீழிமிழலையே மேவினாரே.

புன்கூரார் புறம்பயத்தார் புத்தூர் உள்ளார்
பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்க
தன்கூர்மை கருதிவரை எடுக்கல் உற்றான்
தலைகளொடு மலைகள் அன்ன தாளும் தோளும்
பொன் கூரும் கழல் அடி ஓர் விரலால் ஊன்றிப்
பொருப்பதன்கீழ் நெரித்தது அருள்செய் புவன நாதர்
மின்கூரும் சடைமுடியார் விடையின் பாகர்
வீழிமிழலையே மேவினாரே

இப்பதிகத்தில் குறிப்பிடப்படும் கந்தமாதனமலை, மாகாளம், அளப்பூர், கூடம் (ஏமகூட மலை), பேராவூர், தஞ்சைத் தளிக்குளம், தக்களூர், கொண்டல், அரிச்சந்திரம் , ஏமகூடம், புரிச்சந்திரம் (சந்திரபுரம், பிறையனூர்), புலிவலம் முதலியவை வைப்புத் தலங்கள் ஆக கூறப்படுகின்றன.