தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

பலாசவனநாதர் திருக்கோவில், நாலூர்


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்நாலூர்
இறைவன் பெயர்பலாசவனநாதர்
இறைவி பெயர்பெரியநாயகி.
பதிகம்அப்பர் (6-71-4)
எப்படிப் போவது கும்பகோணம் - நாச்சியார்கோவில் - திருச்சேறை - குடவாசல் சாலை வழித்தடத்தில் திருச்சேறைக்கு அடுத்து வரும் ஊர் நாலூர். பிரதான சாலையிலிருந்து சற்று உள்ளடங்கி கோவில் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு பலாசவனநாதர் திருக்கோவில்
நாலூர்
திருச்சேறை அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612605

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் 7 மணிவரைநிலும் திறந்திருக்கும்.

நாங்கூர் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 4-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

பிறையூரும் சடைமுடி எம் பெருமான் ஆரூர்
பெரும்பற்றப்புலியூரும் பேராவூரும்
நறையூரும் நல்லூரும் நல்லாற்றூரும்
நாலூரும் சேற்றூரும் நாரையூரும்
உறையூரும் ஓத்தூரும் ஊற்றத்தூரும்
அளப்பூர் ஓமாம்புலியூர் ஒற்றியூரும்
துறையூரும் துவையூரும் தோழூர் தானுந்
துடையூரும் தொழ இடர்கள் தொடரா வன்றே.

பொழிப்புரை :

பிறை தவழும் சடைமுடிச் சிவபெருமானுடைய ஆரூர், பெரும்பற்றப்புலியூர், பேராவூர், நறையூர், நல்லூர், நல்லாற்றூர், நாலூர், சேற்றூர், நாரையூர், உறையூர், ஓத்தூர், ஊற்றத்தூர், அளப்பூர், ஓமாம்புலியூர், ஒற்றியூர், துறையூர், துவையூர், தோழூர், துடையூர், என்னுமிவற்றைத் தொழத் துன்பங்கள் தொடர மாட்டா.

கோவில் அமைப்பு: இத்தலத்தில் உள்ள கல்வெட்டுகளின் படி இத்தல இறைவன் சம்பரீசுவரத்து மகாதேவர், சம்பரீசுவரத்துப் பெருமானடிகள் என்று குறிப்படப்பட்டுள்ளார். எனினும் தற்போது பலாசவனநாதர் என்றே இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார். கிழக்கு திசையில் கோபுரமற்ற ஒரு சிறிய கம்பிக் கதவுடன் ஆலயம் அமைந்துள்ளது. வாயிலுள் நுழைந்ததும் திறந்தவெளியும், அதையடுத்து 9 படிகளை ஏறி மாடக்கோவில் அமைப்புள்ள ஆலயத்திற்குள் செல்லலாம். படிகள் ஏறி மேலே சென்றவுடன் தெற்குப் பிராகாரத்திலுள்ள வாயில் வழியே முன்மண்டபத்தை அடையலாம். இங்கு பலிபீடமும், நந்தி மண்டபமும் அமைந்துள்ளன. முன் மண்டபம் கடந்து முகமண்டப வாயிலருகே தெற்கில் பிள்ளையாரும் வடக்கில் முருகனும் உள்ளனர். அர்ந்த மண்டபம் கடந்து கருவறையில் இறைவன் பலாசவனநாதர் லிங்க உருவில் கிழக்கு நோக்கி சதுர ஆவுடையாருடன் எழுந்தருளியுள்ளார். இறைவன் கருவறை விமானம் கஜபிரஷ்ட விமானம் என்று கூறப்படும் தூங்கானை மாடமாக அமைந்துள்ளது. கஜபிரஷ்ட விமானம் என்பதற்கேற்ப இதன் கிழக்குப் பகுதியில் நிற்கும் யானையின் முன்தோற்றம் இருப்பதைக் காணலாம். வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது வடக்குச் சுற்றில் அம்பாள் தனி சந்நிதியில் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளாள். இந்த வெளிப் பிராகாரத்தில் தென்மேற்கு மூலையில் விநாயகர் சந்நிதியும், வடக்குச் சுற்றில் சண்டேஸ்வரர் சந்நிதியும் அமையப் பெற்றுள்ளன.

நாலூர் ஒரு தேவார வைப்புத் தலம். பாடல் பெற்ற தலம் என்று இத்தலத்தை குறிப்பிட்டு கோவில் வளாகத்தில் திருஞானசம்பந்தர் இயற்றிய தாலூர் மயானத்திற்குரிய பதிகப் பாடல்களை எழுதி வைத்துள்ளனர். இது பிழையாகும். நாலூர் மயானம் என்று தனது பதிகத்தில் தெளிவாக சம்பந்தர் கூறிய தலம் நாலூரிலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் திருமெய்ஞானம் என்ற கிராமத்தில் உள்ள ஞானபரமேஸ்வரர் கோவிலாகும். நாலூர் பலாசவனநாதர் கோவில் அப்பர் பெருமான் வைப்புத் தலமாக தனது ஷேத்திரக் கோவை திருத்தாண்டகத்தில் குறிப்பிட்டுள்ள தலமாகும்.

திருக்கடவூர், திருக்கடவூர் மயானம் என்று இரண்டு பாடல் பெற்ற தலங்கள் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் தரங்கம்பாடி வட்டத்தில் அருகருகே இருக்கின்றன. அதே போன்று நாலூர், நாலூர் மயானம் என்ற இரு கோவில்களும் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் அருகருகே அமைந்திருந்தாலும், நாலூர் ஒரு வைப்புத் தலம், நாலூர் மயானம் ஒரு பாடல் பெற்ற தலம்.

நாலூர் பலாசவனேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

ஆலயத்திற்குச் செல்லும் வழி

இறைவன் கருவறை விமானம்

கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி

அம்பாள் பெரியநாயகி

மூலவர் பலாசவனநாதர்