தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

மதங்கீஸ்வரர் திருக்கோவில், நாங்கூர்


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்நாங்கூர்
இறைவன் பெயர்மதங்கீஸ்வரர்
இறைவி பெயர்மதங்கீஸ்வரி.
பதிகம்சுந்தரர் (7-12-4, 7-47-6)
எப்படிப் போவது சீர்காழி - பொறையாறு சாலையில் அண்ணன் பெருமாள் கோயில் என்னும் திவ்யதேசம் ஊரையடைந்து, அங்குச் சாலையில் கட்டப்பட்டுள்ள வரவேற்பு வளைவு வழியே நாங்கூருக்குச் செல்லும் சாலையில் 2 கி.மீ. சென்றால் நாங்கூரை அடையலாம். சீர்காழியிலிருந்தும் மயிலாடுதுறையிலிருந்தும் பேருந்து வசதியுள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு மதங்கீஸ்வரர் திருக்கோவில்
நாங்கூர்
நாங்கூர் அஞ்சல்
வழி மங்கைமடம்
சீர்காழி வட்டம்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 609110

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். சிவாச்சாரியார் வீடு அருகிலுள்ளது. எந்த தேரத்திலும் தரிசனம் செய்யலாம்.

நாங்கூர் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

சுந்தரரின் 7-ம் திருமுறையில் 12-வது பதிகத்தில் 4-வது பாடலிலும், 47-வது பதிகத்தில் 6-வது பாடலிலும் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

தேங்கூரும் திருச் சிற்றம்பலமும் சிராப்பள்ளி 	7-12-4
பாங்கு ஊர் எங்கள் பிரான் உறையும் கடம்பந்துறை 
பூங்கூரும் பரமன் பரஞ்சோதி பயிலும் ஊர் 
நாங்கூர் நாட்டு நாங்கூர் நறையூர் நாட்டு நறையூரே.

பொழிப்புரை :
எமக்குத் துணையாய் வரும் தலைவனும், எப்பொருட்கும் மேலானவனும், 
எல்லா ஒளிகட்கும் மேலான ஒளியாய் உள்ளவனும் ஆகிய இறைவன் நீங்காது 
வாழும் அழகு மிகுந்த ஊர்கள், தேங்கூர், சிற்றம்பலம், சிராப்பள்ளி, அழகு மிக்க கடம்பந்துறை, 
நாங்கூர் நாட்டிலுள்ள நாங்கூர், நறையூர் நாட்டிலுள்ள நறையூர் என்பவை .
---------------------
தாங்கூர் பிணி நின் அடியார் மேல அகல அருளாயே	7-47-6
வேங்கூர் உறைவாய் விளமர் நகராய் விடையார் கொடியானே
நாங்கூர் உறைவாய் தேங்கூர் நகராய் நல்லூர் நம்பானே
பாங்கூர் பலிதேர் பரனே பரமா பழனப்பதியானே.

பொழிப்புரை :
வேங்கூர், நாங்கூர், தேங்கூர் முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே, 
இடபம் பொருந்திய கொடியையுடையவனே, நம்பனே, பக்கங்களில் உள்ள 
ஊர்களிற் சென்று பிச்சை தேடுகின்ற வேறுபட்ட தன்மையனே, மேலானவனே, 
உன் அடியார்மேல் உள்ள பொறுத்தற்கரிய நோய்கள் விலகிச் செல்ல அருள்புரியாய் .

பிரம்மாவின் மகனாகிய மதங்கர் சுவேத வனம் என்று போற்றப்படும் இத்தலத்தில் சிவனை வேண்டி தவம் செய்தார். சிவன் அவருக்கு காட்சி தந்தார். சிவபெருமான் தனக்கு மருமகனாக வர வேண்டும் என்ற வரத்தைக் கேட்டுப் பெற்றார். தன் தவத்தை மீண்டும் தொடரந்த மதங்கர் ஒருதாள் ஆற்றில் தீராடச் சென்ற போது, நீரில் மிதந்து வந்த தாமரை மலரின் மீது ஒரு அழகிய பெண் குழந்தை இருந்ததைக் கண்டு, அக்குழந்தைக்கு மாதங்கி என்று பெயர் சூட்டி அவளுக்கு அனைத்து கலைகளையும் கற்றுக் கொடுத்து வளர்த்தார். மாதங்கி பருவ வயதை அடைந்த போது, அவளை மணம் முடிக்கும் தகுதி சிவனுக்கு மட்டுமே உண்டு என்று அறிந்திருந்த முனிவர் சிவனை வேண்டினார். சிவன் அங்கு வந்து மாதங்கியை திருமணம் செய்து கொண்டார். பின் அவர்களிருவரும் மதங்கருக்கு சிவ, பார்வதியாக தரிசனம் தந்தனர். மதங்க முனிவரின் வேண்டுகோளின் படி இத்தலத்தில் சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி மதங்கீஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.

இத்தலத்தில் முன்னும் பின்னும் திரும்பிய இரண்டு நந்திகள் இருப்பதைக் காணலாம், ஒரு நந்தி மதங்கீஸ்வரரைப் பார்த்த படியும், மற்றொரு நந்தி மறுபக்கம் திரும்பியும் இருக்கிறது. பிரதோஷ வேளையில் இவ்விரு நந்திகளுக்கும் அபிஷேகங்கள் நடக்கிறது. இந்நேரத்தில் இரு நந்திகளையும் தரிசனம் செய்வது சிறப்பான பலன்களைத்தரும்.

தலத்தின் சிறப்பு: சிவபெருமானை அழைக்காமல் தட்சன் நடத்திய யாகத்திற்கு வந்த உமையம்மை தட்சனால் அவமானப் படுத்தப்பட்டு தீக்குளித்தாள். கோபமுற்ற சிவன் வீரபத்திரரை அனுப்பி தட்சனின் யாகத்தைக் கலைத்தார். பிறகும் கோபம் குறையாத சிவன் ருத்ரதாண்டவம் ஆடினார். அப்போது அவரது திருச்சடைமுடி பூமியை 11 இடங்களில் தொட்டது. அந்த இடங்களில் 11 சிவ வடிவங்கள் தோன்றின. கோபம் தணியாத்த சிவனின் ருத்ரதாண்டவத்தால் பூவுலகமே நிலை தடுமாற, மகாவிஷ்ணு 11 வடிவங்கள் எடுத்து வந்து சிவனை சாந்தப்படுத்தினார். சிவன் கோபம் தணிந்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இவ்வூரில் 11 சிவாலயங்கள் அமைக்கப்பட்டன. தற்போது இதில் 9 கோயில்கள் மட்டும் தற்போது இருக்கிறது. மகா விஷ்ணுவிற்கும் 11 கோயில்கள் இருக்கிறது. இந்த மகாவிஷ்ணு கோயில்கள் அனைத்தும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே தலத்தில் 9 சிவன், 11 மகாவிஷ்ணு கோயில்கள் அமைந்த சிறப்பான தலம் இது.

ஒவ்வொரு தமிழ் வருடமும் தை மாதத்தில் அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் நடைபெறும் 11 கருடசேவை விழா மிகப் புகழ் பெற்றது. அதே போன்று திருநாங்கூர் தலத்ததைச் சுற்றியுள்ள 11 சிவஸ்தலங்களில் ரிஷபசேவை என்றும் பழங்காலத்தில் நடக்கப் பெற்று இக்காலத்தில் மறைந்து போயுள்ளது.

நாங்கூர் மதங்கீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

வள்ளி தெய்வானையுடன் முருகர்

அம்பாள் மதங்கீஸ்வரி

ஆனந்த வடபத்ரமாகாளியம்மன்

இரட்டை நந்தி

மூலவர் மதங்கீஸ்வரர்

கோஷ்ட தட்சிணாமூர்த்தி

மதங்க மகரிஷி சந்நிதி

வலஞ்சுழி மதங்க விநாயகர் சந்நிதி