தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

நாகேஸ்வரமுடையார் திருக்கோவில், நாகளேச்சுரம் (சீர்காழி)


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்நாகளேச்சுரம் (சீர்காழி)
இறைவன் பெயர்நாகேஸ்வரமுடையார்
இறைவி பெயர்பொன்னாகவள்ளி அம்பாள்
பதிகம்அப்பர் (6-71-8)
எப்படிப் போவது சிதம்பரத்திலிருந்து சீர்காழிக்குச் செல்லும்போது சீர்காழி நகர எல்லையிலேயே இடதுபுறம் சாலையோரத்திலேயே கோயில் உள்ளது. நாகேச்சரம் கோயில் என்று வழங்குகிறது. (கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநாகேஸ்வரம் என்பது வேறு. அது பாடல் பெற்ற தலம்)
ஆலய முகவரி அருள்மிகு நாகேஸ்வரமுடையார் திருக்கோவில்
சீர்காழி
சீர்காழி அஞ்சல்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 609110

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

நாகளேச்சுரம் (சீர்காழி) வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 8-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இத்திருத்தாண்டகத்தில் "ஈச்சரம்" என வரும் தலங்களை வகுத்து அப்பர் அருளிச் செய்துள்ளார்

நாடகம் ஆடிடம் நந்திகேச்சுரம் மாகாளேச்சுரம்
நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன் கான
கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டீச்சுரம்
குக்குடேச்சுரம் அக்கீச்சுரம் கூறுங்கால்
ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம் அயனீச்சுரம்
அத்தீச்சுரம் சித்தீச்சுரம் அந்தண் கானல்
ஈடுதிரை இராமேச்சுரம் என்று என்று ஏத்தி
இறைவன் உறை சுரம்பலவும் இயம்புவோமே.

பொழிப்புரை :
கூத்தப் பெருமானது இடமாகிய நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகேச்சுரம், 
நாகளேச்சுரம், நன்மை பொருந்திய கோடீச்சரம், கொண்டீச்சரம், திண்டீச்சரம், 
குக்குடேச்சுரம், அக்கீச்சரம் என்றுமிவற்றைக் கூறுமிடத்து உடன்வரும் ஆடகேச்சுரம், 
அகத்தீச்சுரம், அயனீச்சுரம், அத்தீச்சுரம், சித்தீச்சுரம், அழகிய குளிர்ந்த கடற் கரையில் 
முத்து பவளம் முதலியவற்றைக் கொணர்ந்து போடும் திரைகள் சூழ்ந்த இராமேச்சுரம் 
என்றெல்லாம் இறைவன் தங்குகின்ற ஈச்சுரம் பலவற்றையும் கூறி அவனைப் புகழ்வோமாக .

ஆலய அமைப்பு: ஆலயம் கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரத்துடன் விளங்குகிறது. கொபுர வாழில் வழி உள்ளே நுழைந்தால் நேரே மூலவர் நாகேஸ்வரமுடையார் சந்நிதி உள்ளது. சுவாமி சந்நிதிக்கு வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் பொன்னாகவள்ளி சந்நிதி அமைந்திருக்கிறது. ஓரிடத்தில் நின்றபடி சுவாமி, அம்பாள் சந்நிதி இரண்டையும் தரிசிக்க முடியும். இக்கோவிலில் ராகு, கேதுவுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. ராகு சந்நிதியில் ராகுவிற்கு அருகில் சனி தன் மனைவி நீலாதேவியுடன் இருக்கிறார். ராகுவின் நண்பன் சனி என்பதால் இது பொருத்தமே. கோதுபகவானும் தனி சந்திதியில் காட்சி தருகிறார். அவர் அருகில் நாகதேவதையும் காட்சி அளிக்கிறாள். இத்தலம் ஆதி ராகு, ஆதி கேது தலம் என்று புகழ் பெற்ற கோவிலாகும்.

தல வரலாறு: ராகுவும், கேதுவும் அசுர வடிவமாக இருந்த தங்களின் தோஷம் நீங்க தவமிருந்து இறைவனை வழிபட்டு கிரக பதவியை அடைந்தனர். அவர்கள் இறைவனை பூஜித்த தலம் சீர்காழியில் உள்ள நாகேஸ்வரமுடையார் கோவிலாகும். அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடைந்த போது அமிர்தம் வெளிப்பட்டது. நடை, திரை, பிணி, மூப்பு, சாக்காடு முதலியவற்றை நீக்கும் மருந்தாக அமிர்தம் விளங்கியது. அந்த அமிர்தத்தை தேவர்களும், அசுரர்களும் உண்ண போட்டியிட்டனர். அசுரர்கள் அமிர்தத்தை உண்டால் அவர்களுக்கு அழிவு இருக்காது. ஆகையால் அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டுமே கொடுக்க மாகாவிஷ்ணு முடிவெடுத்தார். ஆனால் ஒரு அசுரன் மட்டும் தேவர் வடிவம் கொண்டு சூரிய, சந்திரர்களுக்கு நடுவே நின்று தேவாமிர்தத்தை வாங்கி உண்டான். இதனை அறிந்த சூரிய, சந்திரர்கள் தேவாமிர்தத்தை பரிமாறி கொண்டிருந்த மகாவிஷ்ணுவிடம் குறிப்பால் உணர்த்த, அவர் தன் கையிலிருந்த கரண்டியால் அந்த அசுரனை ஓங்கி அடித்தார். அவர் அடித்த வேகத்தில் அசுரனின் கழுத்து துண்டிக்கப்பட்டு தலை, சிரபுரம் என்ற தற்போதைய சீர்காழியிலும், உடல் மற்றொரு இடத்திலும் விழுந்தது. தேவாமிர்தம் உண்டதால் அந்த அசுரனது இரண்டு உடல் பாகங்களும் இரண்டு பாம்புகளாக மாறியது. இந்த அரவங்கள் சிவபெருமானை தியானித்து காற்றை மட்டும் உணவாக கொண்டு கடும் தவம் புரிய இறைவன் பார்வதி சமேதராய் இடப வாகனத்தில் எழுந்தருளினார்.

அப்போது அந்த அரவங்கள் சிவபெருமானிடம் தங்களை காட்டிக் கொடுத்த சூரிய, சந்திரனை விழுங்கும் சக்தியையும், அகில உலகையும் ஆட்டிப் படைக்கும் வலிமையையும் தங்களுக்கும் அருளுமாறு வேண்டின. சிவபெருமான் சூரியன், சந்திரன் இருவரும் உலக உயிர்களுக்கு இன்றியமையாதவர்கள் என்று கூறி, அவர்களை அமாவாசை, பவுர்ணமி, கிரக நாட்களில் மட்டும் ஆதிக்கம் செலுத்த சிவபெருமான் வரம் அளித்தார். மேலும் இறைவன் அருளால் மனித தலையும், பாம்பு உடலும் கொண்டு ராகுவும், பாம்பு தலையும் மனித உடலும் கொண்டு கேதுவும் தோன்றினார்கள். அத்துடன் அதுவரை இருந்த 7 கிரகங்களுடன் அவர்களையும் சேர்த்து 9 கிரகங்களாக (நவக்கிரகம்) விளங்கும்படி வரம் அளித்தார்.

அமிர்தம் உண்ட அசுரன் தலை மகாவிஷ்ணுவால் வெட்டப்பட்டு விழுந்த இடம் சீர்காழி. எனவே இத்தலம் சிரபுரம் என்றும், ஆதி ராகு, ஆதி கேது தலமாக சீர்காழியில் நாகேஸ்வரமுடையார் கோவில் என்று சிறப்புடன் விளங்குகிறது.

நாகளேச்சுரம் (சீர்காழி) நாகேஸ்வரமுடையார் ஆலயம் புகைப்படங்கள்

ஆலயத்தின் 3 நிலை இராஜகோபுரம்

நாகேஸ்வரமுடையார் சந்நிதி

பொன்னாகவள்ளி அம்பாள் சந்நிதி

அமிர்த ராகு பகவான், சனி, நீலாதேவி சந்நிதி

கேது, நாகதேவதை சந்நிதி