தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

ஆலந்துறையப்பர் திருக்கோவில், நல்லக்குடி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்நல்லக்குடி
இறைவன் பெயர்ஆலந்துறையப்பர்
இறைவி பெயர்குயிலாடுநாயகி, குயிலாண்டநாயகி
பதிகம்அப்பர் (6-71-3)
எப்படிப் போவது மயிலாடுதுறை - கோடங்குடி - நெடுமருதூர் சாலையில் இவ்வூர் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து கிழக்கே 2 கி. மீ. தொலைவிலுள்ளது. மயிலாடுதுறையிலிருந்து கோடங்குடி செல்லும் நகரப் பேருந்தில் சென்றால் கோயிலருகே இறங்கலாம்.
ஆலய முகவரி அருள்மிகு நாகேஸ்வரமுடையார் திருக்கோவில்
சீர்காழி
சீர்காழி அஞ்சல்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 609110

இவ்வாலயத்தில் ஒரு கால பூஜை நடைபெறுகிறது. கோவில் மெய்க்காவலர் வீடு அருகிலுள்ளது. தகவல் தெரிவித்து தரிசனம் செய்யலாம்.

நல்லக்குடி வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 3-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இத்திருத்தாண்டகம் "குடி" என முடியும் தலங்களை வகுத்தருளிச் செய்தது

நற்கொடி மேல் விடையுயர்த்த நம்பன் செம்பங்குடி
நல்லக்குடி நளி நாட் டியத்தான்குடி
கற்குடி தென்களக்குடி செங்காட்டங்குடி
கருந்திட்டைக்குடி கடையக்குடி காணுங்கால்
விற்குடி வேள்விக்குடி நல் வேட்டக்குடி
வேதிகுடி மாணிகுடி விடைவாய்க்குடி
புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி
புதுக்குடியும் போற்ற இடர் போகுமன்றே.

பொழிப்புரை :	www.thevaaram.org
நல்ல இடபக் கொடியை மேலே உயரத்தூக்கியவனும், நம்புதற்குரியவனுமாகிய 
சிவபெருமானுடைய செம்பங்குடி, நல்லக்குடி, பெருமைமிக்க நாட்டியத்தான்குடி, 
கற்குடி, இனிய களக்குடி, செங்காட்டங்குடி, கருந்திட்டைக்குடி, கடையக்குடி 
ஆகியவற்றோடு ஆராயுங்கால் குடியில் முடியும் ஊர்களாகிய விற்குடி, வேள்விக் குடி, 
நன்மமைமிகு வேட்டக்குடி, வேதிகுடி, மாணிகுடி, விடைவாய்க் குடி, புற்குடி, மாகுடி, 
தேவன்குடி, நீலக்குடி, புதுக்குடி என்பனவற்றையும் புகழ்ந்து கூறத் துன்பம் நீங்கும் ..

கோவில் அமைப்பு: இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயில் கடந்து உள்ளே சென்றால் நேரே நந்தி மண்டபத்தில் நந்தியுர் பலிபீடமும் இருக்கக் காணலாம். அதையடுத்துள்ள வாயிலைக் கடந்து மூலவர் கருவறைக்குச் செல்லலாம், மூலவர் ஆலந்துறையப்பர் மேற்குப் பார்த்து கருவறையில் எழுந்தருளியுள்ளார். அம்பாள் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளாள். கருவறை சுற்றிப் பிராகாரத்தில் நவக்கிரக சந்நிதி, பைரவர், சூரியன், காக வாகனத்துடன் சனி பகவான் ஆகியோர் உள்ளனர். தட்சிணாமூர்த்தியும் இடது காலை மடித்து வைத்துக் கொண்டு, வலது காலை தொங்கவிட்டு முயலகன் மீது வைத்தபடி காட்சி அளிக்கிறார்.

இத்தலத்தில் அம்பிகைக்கு குயிலாண்டநாயகி என்று பெயர். மயிலாடுதுறையிலும், திருமயிலையிலும் மயில் வடிவில் சிவபெருமானை வழிபட்ட அம்பிகை இத்தலத்தில் குயில் வடிவில் இறைவனை வழிபட்டுள்ளாள். குயில் வடிவில் வழிபட்டதால் அம்பிகைக்கு குயிலாண்டநாயகி, குயிலாடுநாயகி எனும் திருநாமம். வில்வ மரம் தல விருட்சமாகவும், சூரியனால் தோற்றுவிக்கப்பட்ட சூரிய தீர்த்தமும் உள்ள இத்தலத்து இறைவனை சூரியன் வழிபட்டுள்ளான். சூரிய புஷ்கரணியில் நீராடி இவ்விறைவனை வழிபடுவோர் தொழு நோய் முதலிய சரும நோய்கள் நீங்கப்பெற்று குணமடைவர் என்று சொல்லப்படுகிறது.

இவ்வூர் குயிலாலந்துறை என வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. குயில்கள் இனிதமர்ந்து கூவும் செழுஞ் சோலையினிடையே உள்ள ஆலந்துறையைக் "குயிலாலந்துறை" என்று அப்பர் தனது தேவாரத்தில் குறித்தார். மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள நல்லக் குடியிலே கோயில் கொண்ட இறைவன் பெயர் ஆலந்துறையப்பர் என்றும், இறைவியின் பெயர் குயிலாண்டநாயகி என்றும் வழங்குதலால், திருநாவுக்கரசர் குறிப்பிட்ட குயிலாலந்துறை எனும் வைப்புத் தலம் இதுவே எனக் கொள்ளப்படுகின்றது.

குயிலாலந்துறை வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 11-வது பாடலில் குயிலாலந்துறை வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இத்திருத்தாண்டகம் "துறை" என முடியும் தலங்களை வகுத்தருளிச் செய்தது.

கயிலாயமலை எடுத்தான் கரங்களோடு
சிரங்கள் உரம் நெரியக் கால் விரலால் செற்றோன்
பயில்வாய பராய்த்துறை தென்பாலைத்துறை
பண்டு எழுவர் தவத்துறை வெண்டுறை பைம்பொழில்
குயிலாலந்துறை சோற்றுத்துறை பூந்துறை
பெருந்துறையும் குரங்காடுதுறையினோடு
மயிலாடுதுறை கடம்பந்துறை ஆவடுதுறை
மற்றும் துறை அனைத்தும் வணங்குவோமே.

பொழிப்புரை :	www.thevaaram.org
கயிலாய மலையை எடுத்த இராவணனுடைய கரங்களும் சிரங்களும் வலிமை சிதையும் வண்ணம் 
தன் கால் விரலால் அழிவுண்டாக்கிய சிவபெருமான் பயின்றுறையும் பராய்த்துறை, தென்பாலைத்துறை, 
எழுமுனிவர் பண்டுதவம் செய்த தவத்துறை, வெண்டுறை, பசிய சோலையிடத்துக் குயில்கள் வாழும் 
குயிலாலந்துறை, சோற்றுத்துறை, பூந்துறை, பெருந்துறை, குரங்காடுதுறை, மயிலாடுதுறை, கடம்பந்துறை,
ஆவடுதுறை ஆகியவற்றையும் துறை என்னும் பெயர் தாங்கும் மற்றைத் திருத்தலங்களையும் வணங்குவோம்.

நல்லக்குடி ஆலந்துறையப்பர் ஆலயம் புகைப்படங்கள்

முகப்பு வாயில்

முகப்பு வாயில் கடந்து உள் தோற்றம்

நந்தி, பலிபீடம்

நவக்கிரக சந்நிதி

பைரவர், சூரியன், சனி

தட்சிணாமூர்த்தி

அம்பாள் குயிலாண்டநாயகி

குயில் உருவில் அம்பாள் சிவனை வழிபடுதல்

மூலவர் ஆலந்துறையப்பர்