தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

வன்மீகநாதர் திருக்கோவில், வெற்றியூர்


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்வெற்றியூர் (இன்றைய நாளில் பாகம்பிரியாள் கோவில் என்று வழக்கில் உள்ளது)
இறைவன் பெயர்வன்மீகநாதர், பழம்புற்று நாதர்
இறைவி பெயர்பாகம்பிரியாள், அபிபக்தநாயகி
பதிகம்சம்பந்தர் (2-39-6), அப்பர் (6-70-8), சுந்தரர் (7-12-3)
எப்படிப் போவது காளையார்கோவில் - திருவாடானை - தொண்டி சாலையில் திருவாடானையை அடுத்து சுமார் 4 அல்லது 5 கி.மி. சென்றவுடன் காடாகுடி விலக்குச் சாலை வரும். அங்கிருந்து திருவெற்றியூர் சாலை வலதுபுறம் பிரிகிறது. அச்சாலையில் சுமார் 6 கி.மி. தெற்கே சென்று வெற்றியூர் தலத்தை அடையலாம். திருவாடானையில் இருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன.
ஆலய முகவரி அருள்மிகு வன்மீகநாதர் திருக்கோவில்
வெற்றியூர்
வெற்றியூர் அஞ்சல்
திருவாடானை வட்டம்
இராமநாதபுரம் மாவட்டம்
PIN - 623407

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்

வெற்றியூர் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

வெற்றியூர் மூவர் தேவாரத்திலும் வைப்புத் தலமாக குறிப்பிடப்படள்ளள்ள சிறப்பினை உடைய தலமாகும்.

சம்பந்தரின் 2-ம் திருமுறையில் 39-வது பதிகத்தில் 6-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் ஷேத்திரக்கோவை என்று கூறப்படும்

மன வஞ்சர் மற்று ஓட முன் மாதர் ஆரும் மதிகூர் திருக்கூடலில் ஆலவாயும்	2-39-6 
இன வஞ்சொல் இலா இடைமாமருதும் இரும்பைப்பதி மாகாளம் வெற்றியூரும்
கனம் அஞ்சின மால் விடையான் விரும்பும் கருகாவூர் நல்லூர் பெரும்புலியூர்
தன் மென்சொலில் தஞ்சம் என்றே நினைமின் தவர் ஆம் மலம் ஆயினதான் அறுமே.

பொழிப்புரை :
வஞ்சமனத்தவர் போய் அகல மதிகூர் மாதர்கள் வாழும் ஆலவாய், 
இடைமருது, இரும்பைப்பதி மாகாளம், வெற்றியூர், கருகாவூர், நல்லூர், 
பெரும்புலியூர் முதலான தலங்கள் நமக்குப் புகலிடமாவன என நினைமின். 
அதுவே தவமாகும். மும்மலங்களும் அற்று ஒழியும்.

திருநாவக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 8-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்	6-70-8
உருத்திர கோடி மறைக்காட்டுள்ளும்
மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்
வீரட்டம் மாதானம் கேதாரத்தும்
வெஞ்சமாக்கூடல் மீயச்சூர் வைகா
வேதீச்சுரம் விவீச்சுரம் வெற்றியூரும்
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையும்
கயிலாயநாதனையே காணலாமே.

பொழிப்புரை :
உஞ்சேனை மாகாளம், ஊறல், ஓத்தூர், உருத்திரகோடி, மறைக்காடு, 
மேகங்கள் பொருந்திய பொதியமலை, தஞ்சை, வழுவூர்வீரட்டம், மாதானம், 
கேதாரம், வெஞ்சமாக்கூடல், மீயச்சூர், வைகாவூர், வேதீச்சரம், விவீச்சுரம், 
வெற்றியூர், கஞ்சனூர், கஞ்சாறு, பஞ்சாக்கை ஆகிய இடங்களில் கயிலாயநாதனைக் காணலாம் .

சுந்தரரின் 7-ம் திருமுறையில் 12-வது பதிகத்தில் 3-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

மூலனூர் முதலாய முக்கண்ணன் முதல்வன் ஊர்		7-12-3
நாலனூர் நரைஏறு உகந்து ஏறிய நம்பன்ஊர்
கோல நீற்றன் குற்றாலம் குரங்கணின் முட்டமும்
வேலனூர் வெற்றியூர் வெண்ணிக் கூற்றத்து வெண்ணியே.

பொழிப்புரை :
அழகிய திருநீற்றை அணிந்த, வெள்விடையை விரும்பி ஏறிய, முக்கண் முதல்வனது 
தலங்கள், மூலனூர், முதல்வனூர், நாலனூர், குற்றாலம், குரங்கணின்முட்டம், 
வேலனூர், வெற்றியூர், வெண்ணிக் கூற்றத்திலுள்ள வெண்ணி என்பவை .

தல வரலாறு: வாமன அவதாரம் எடுத்து மகாவிஷ்ணு மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டார். மகாபலி அந்த தானத்தைக் கொடுக்க, தன் முதல் ஓரடியால் மண்ணுலகத்தையும், ஈரடியால் விண்ணுலகத்தையும் அளந்த மகாவிஷ்ணு தனது மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து அவனை பாதாள லோகத்திற்கு அனுப்பினார். நீதி நெறி தவறாமல், தர்மத்தின் படி ஆட்சி செய்து வந்த மகாபலியை பாதாளத்திற்கு அனுப்பிய மகாவிஷ்ணுவைத் தொடர்ந்து வந்த தர்மதேவதை அவரின் பாதத்தில் புற்று நோய் ஏற்பட சாபம் தந்தாள். தர்மதேவதையால் சாபம் இடப்பெற்ற மகாவிஷ்ணு தனது சாபம் தீர பூவுலகில் சிவாலய தரிசனம் செய்து, திருவாடானை ஆதிரத்தினேஸ்வரரை வணங்கி, பின் ஜெயபுரம் என்கிற வெற்றியூர் தலத்தை அடைந்தார். அங்கு வாசுகி தீர்த்தத்தில் நீராடி இறைவன் பழம் புற்று நாதரை வழிபட்டு சாபவிமேசனம் அடைந்தார். பாதத்தில் ஏற்பட்டிருந்த புற்று நோயும் தீர்ந்தது. வடமொழியில் வன்மீகம் என்பதற்கு தமிழில் புற்று என்று பொருள். மகாவிஷ்ணுவின் பழம் புற்று நோயை நீக்கி அருளியதால் இறைவனும் பழம்புற்று நாதர் என்று எனப்பட்டார்.

தலச் சிறப்பு: இத்திருக்கோவில் ஒரு சிறந்த பிரார்த்தனைத் தலமாக உள்ளது. நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் ஏராளம். வேண்டுதல் திறைவேறிந மகிழ்ச்சியில் ஏராளம2ஆன காணிக்கைகள் செலுத்துகின்றனர். திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் திருக்கோவிலில் பிரார்த்தனை செய்ய உகந்த தாட்களாகும். பெண்களின் பிரச்னைகளுக்கான பிரதான பிரார்த்தனை தலம் இது. திருமணம், குழந்தை பாக்கியம், ஆரோக்கியம் என எதற்காகவும் இங்கு வேண்டிக்கொள்ளலாம். இங்கு வழிபடும் பக்தைகள். வியாழனன்று மாலையில் அம்பிகையை வணங்கி, அன்றிரவில் கோயிலிலேயே தங்கி மறுநாள் வாசுகி தீர்த்தத்தில் நீராடி திரும்புகின்றனர். பக்தைகள் தங்குவதற்காக கோயில் சார்பில் மண்டபமும் உள்ளது. திருமணதோஷம் உள்ளவர்கள் வில்வ மரத்தடியில் உள்ள புற்றடி விநாயகரை பாலபிஷேகம் செய்தும், அருகிலுள்ள நாகருக்கு மாங்கல்யம் அணிவித்தும் வணங்குகின்றனர். தீராத நோய்களையும் தீர்ப்பவளாக அம்பாள் பாகம்பிரியாள் விளங்குவதால் இறைவிக்கு மருத்துவச்சி அம்மன் என்ற பெயரும் உண்டு. புற்றுநோய் தீர அம்பிகையை வணங்கி நம்பிக்கையுடன் தீர்த்தம் வாங்கி குடித்துச் செல்லலாம். இத்தலத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் யாரையாவது பாம்பு தீண்டினால், அவரைத் தூக்கி வந்து, வாசுகி தீர்த்தத்தில் நீராடச் செய்து பாகம்பிரியாள் சன்னதியில் கிடத்துகின்றனர். அம்பிகையின் விபூதியையும் வேப்பிலையையும் விஷம் தீண்டப்பட்டவர் பெற்று உண்டால் குணமாகித் திரும்புவார் என்பது இங்குள்ளோர் நம்பிக்கை.

கோவில் அமைப்பு: கிழக்கு நோக்கியுள்ள இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. கோபுரம் கட்ட திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆலயத்திற்கு முன்னால் வாசுகி தீர்த்தம் உள்ளது. தீர்த்தப் படித்துறை கடந்து சென்றால் பெரிய பரந்த மண்டபம் உள்ளது. மண்டபம் நுழைந்து பலிபீடம், கொடிமரம், நந்தி கடந்து சென்றால் நேரே அர்த்த மண்டபம், மண்டபத்துடன் கூடிய கருவறையில் மூலவர் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். இறைவன் சந்நிதிக்கு முன்னால் வலதுபுறம் தெற்கு தோக்கி அம்பாள் பாகம்பிரியாள் சந்நிதி அமைந்துள்ளது. சுற்றுப் பிராகாரத்தில் தலவிருட்சம் வில்வ மரமும், மரத்தடியில் விநாயகர், நாகர், கன்னி மூலையில் விநாயகர், அதையடுத்து வள்ளி தெய்வானையுடன் முருகர், சண்டேஸ்வரர், பைரவர், நவக்கிரக சந்நிதிகள் ஆகியவற்றைக் காணலாம். இத்தல விநாயகர் நினைத்தது முடிக்கும் விநாயகர் என்ற பெயருடன் விளங்குகிறார். இவரிடம் பிரார்த்தனை செய்து கோள்ளும் பக்தர்களின் நம்பிக்கை வீண் போகாமல் நினைத்தது நடந்து இன்பம் கொடுப்பதால் இத்திருநாமம் ஏற்பட்டிருக்கிறது. இத்தலத்திலுள்ள கோஷ்ட தட்சிணாமூர்த்தி வித்தியாசமானவர். கல்லால மரத்தடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்வதைப் போன்று அமையாமல், தானே தவநிலையில் தனக்குத் தானே உபதேசம் செய்வது போன்று தட்சிணாமூர்த்தி திருவுருவின் கீழ் பிரகதீஸ்வரர் என்ற சிவபெருமானே உபதேசம் கேட்பதாக அமைந்துள்ளது ஓர் அரிய காட்சியாகும்.

வெற்றியூர் வன்மீகநாதர் திருக்கோவில் ஆலயம் புகைப்படங்கள்

வன்மீகநாதர் சந்நிதி

அம்பாள் பாகம்பிரியாள் சந்நிதி

வாசுகி தீர்த்தம்

நந்தி, மற்ற சிலா மூர்த்தங்கள்

சீடர்களுடன் தட்சிணாமூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் முருகர், நாகர்

நவக்கிரக சந்நிதி

பைரவர்