தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

நாகேஸ்வரர் திருக்கோவில், வளைகுளம் (வளர்புரம்)


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்வளைகுளம் (இன்றைய நாளில் வளர்புரம் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்நாகேஸ்வரர்
இறைவி பெயர்சொர்ணவல்லி
பதிகம்அப்பர் (6-50-8, 6-59-2, 6-71-10),
எப்படிப் போவது 1. அரக்கோணம் - திருத்தணி சாலையில் தணிகைப்போளூர் என்ற பேருந்து நிறுத்தம் வரும். அங்கு வலப்பக்கம் வரும் ரயில் பாதையைக் கடந்து அதை ஒட்டி உள்ள இடதுபுறம் சாலையில் 6 கி.மீ. பயணித்து இத்தலத்தை அடையலாம். அரக்கோணத்திலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவிலுள்ளது. அரக்கோணத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது. ஆனால் பேருந்து வசதி அடிக்கடி இல்லை.
2. திருத்தணியில் இருந்து மினி பஸ் வசதி உள்ளது. இதில் பயனித்தால் கோவில் அருகிலேயே இறங்கிக் கொள்ளலாம்.
ஆலய முகவரி அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோவில்
வளர்புரம்
வளர்புரம் அஞ்சல்
வழி அரக்கோணம்
வேலூர் மாவட்டம்
PIN - 631003

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்

வளைகுளம் (வளர்புரம்) வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

அப்பரின் 6-ம் திருமுறையில் 50-வது பதிகத்தில் 8-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் திருவீழிமிழலை தலத்திற்குரிய பதிகமாகும்.

வானவர்கோன் தோள் இறுத்த மைந்தன் தன்னை	
வளைகுளமும் மறைக்காடும் மன்னினானை
ஊனவனை உயிரவனை ஒரு நாள் பார்த்தன்
உயர்தவத்தின் நிலை அறியல் உற்றுச் சென்ற
கானவனைக் கயிலாயம் மேவினானைக்
கங்கைசேர் சடையானைக் கலந்தார்க்கு என்றும்
தேனவனைத் திருவீழிமிழலையானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.

பொழிப்புரை :

இந்திரனுடைய தோள்களை நீக்கிய வலிமை உடையவனாய், வளைகுளம், மறைக்காடு என்ற தலங்களில் உறைபவனாய், உடலாகவும் உயிராகவும் இருப்பவனாய், ஒரு காலத்தில் அருச்சுனனுடைய தவத்தின் உறுதி நிலையை அறியச் சென்ற வேடுவனாய், கயிலாயத்தை விரும்பி உறைபவனாய், கங்கை தங்கிய சடையினனாய்த் தன்னைச் சேர்ந்தவர்களுக்குத் தேன் போல இனியவனாய் உள்ள திருவீழிமிழலையானைச் சேராதார் தீ நெறிக் கண் செல்பவராவர்.

திருநாவக்கரசரின் 6-ம் திருமுறையில் 59-வது பதிகத்தில் 2-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் திருவெண்ணியூர் தலத்திற்குரிய பதிகமாகும்.

நெருப்பனைய மேனிமேல் வெண்ணீற் றாரும்	
நெற்றிமே லொற்றைக்கண் நிறைவித் தாரும்
பொருப்பரையன் மடப்பாவை யிடப்பா லாரும்
பூந்துருத்தி நகர்மேய புராண னாரும்
மருப்பனைய வெண்மதியக் கண்ணி யாரும்
வளைகுளமும் மறைக்காடும் மன்னினாரும்
விருப்புடைய அடியவர் தம் உள்ளத்தாரும்
வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்தனாரே.

பொழிப்புரை :

செம்மேனியில் வெண்ணீறு பூசியவரும், நெற்றிக் கண்ணரும், பார்வதி பாகரும், பூந்துருத்தியில் உறையும் பழையவரும், யானைக் கொம்பு போன்ற பிறையை முடிமாலையாகச் சூடியவரும், வளைகுளம், மறைக்காடு இவற்றில் தங்கியவரும், தம்மை விரும்பும் அடியாருடைய உள்ளத்தில் உறைபவரும், வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தர் ஆவார். .

திருநாவக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 10-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இத்தலம் ஷேத்திரக்கோவை திருத்தாண்டகம் என்று போற்றப்படுகிறது. இப்பாடல் "ஆறு, குளம், களம், கா" என வருவனவற்றை வகுத்து அருளிச் செய்தது.

நள்ளாறும் பழையாறும் கோட்டாற்றோடு	
நலந்திகழும் நாலாறும் திருவையாறும்
தெள்ளாறும் வளைகுளமும் தளிக்குளமும் நல்
இடைக்குளமும் திருக்குளத்தோடு அஞ்சைக்களம்
விள்ளாத நெடுங்களம் வேட்களம் நெல்லிக்கா
கோலக்கா ஆனைக்கா வியன்கோடிகா
கள் ஆர்ந்த கொன்றையான் நின்ற ஆறும்
குளம் களம் கா என அனைத்தும் கூறுவோமே.

பொழிப்புரை :

நள்ளாறு, பழையாறு, கோட்டாறு, நன்மை நிலவும் நாலாறு, திருஐயாறு, தெள்ளாறு, வளைகுளம், தளிக்குளம், நல்ல இடைக்குளம், திருக்குளம், அஞ்சைக்களம், குறையாத சிறப்புடைய நெடுங்களம், வேட்களம், நெல்லிக்கா, கோலக்கா, ஆனைக்கா, பரந்து திகழும் கோடிகா என்றெல்லாம் தேன் நிறைந்த கொன்றைப் பூ மாலை அணிந்த சிவபெருமான் விளங்கும் ஆறு, குளம், களம், கா ஆகிய எல்லாவற்றையும் கூறுவோம்.

கோவில் அமைப்பு: நந்தியாற்றின் தென்கரையில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இத்தலத்தில் மூலவர் நாகேஸ்வரர் சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அம்பாள் சொர்ணவல்லி என்ற நாமத்துடன் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். ஆதிசேஷன் இத்தலத்தில் இறைவனை பூஜித்து அருள் பெற்றதால் இறைவனுக்கு நாகேஸ்வரர் என்று பெயர்.

ஆலயத்திற்கு முன்புறம் இத்தலத்தின் தீர்த்தமான சங்கு தீர்த்தம் என்ற புனிதமான வளைகுளம் உள்ளது. முற்காலத்தில் இக்குளம் சங்கு வடிவிலேயே அமைந்திருந்தது என்றும், பிற்காலத்தில் படிகள் அமைத்துப் பணி செய்தபோது அந்த அமைப்பு மாறிவிட்டது என்றும் சொல்லப்படுகிறது

பாண்டிய மன்னர்களில் ஒருவரான சுந்தர பாண்டியன் இக்கோயிலுக்கு நிவந்தங்கள் அளித்துள்ளதைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. ஆலயத்திலுள்ள கல்வெட்டில் "வளைகுளத்து நாகேஸ்வரமுடையார்" என்று தலத்தின் பெயரும், இறைவனின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. 11-ம் திருமுறையில் ஐயடிகள் காடவர்கோன் நாயனார் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார்.

இல்லும் பொருளும் இருந்த மனையளவே
சொல்லும் அயலார் துடிப்பளவே - நல்ல
கிளைகுளத்து நீரளவே; கிற்றியே நெஞ்சே
வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து.

பொழிப்புரை :

உடலை விட்டு உயிர் போன பின் மனைவியும், சொல்வமும் வீட்டோடு தான். புகழ்ந்து பேசியவர்கள் உயிர் உள்ள வரைதான். உறவினர்கள் குளத்தில் நீராடி கரையேறுவும் வரைதான். இந்த உணமைகளை உணர்ந்து நெஞ்சே நல்ல கதி அடையவேண்டுமானால் வளைகுளத்தில் குடி கொண்டுள்ள ஈசனைப் போற்றி வாழ்த்து.