தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

வீரட்டேஸ்வரர் திருக்கோவில், வழுவூர்


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்வழுவூர்
இறைவன் பெயர்வீரட்டேஸ்வரர், கீர்த்திவாசர், கஜசம்ஹாரர்
இறைவி பெயர்பாலகுராம்பிகை, இளங்கிளைநாயகி
பதிகம்அப்பர் (6-70-8, 6-71-2)
எப்படிப் போவது மயிலாடுதுறை - திருவாரூர் பேருந்துச் சாலையில் மங்காநல்லூர் என்ற ஊர் வருவதற்கு சற்று முன்பாக வலதுபுறம் கைகாட்டி உள்ள இடத்தில் பிரியும் சாலையில் 2 கி.மீ. சென்றால் ஊரையடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும்..
ஆலய முகவரி அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோவில்
வழுவூர்
வழுவூர் அஞ்சல்
வழி மயிலாடுதுறை
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 609401

இவ்வாலயம் காலை 6-30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

வழுவூர் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 8-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்	(6-70-8)
உருத்திரகோடி மறைக்காட்டுள்ளும்
மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்
வீரட்டம் மாதானம் கேதாரத்தும்
வெஞ்சமாக்கூடல் மீயச்சூர் வைகாவூர்
வேதீச்சுரம் விவீச்சுரம் வெற்றியூரும்
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையும்
கயிலாயநாதனையே காணலாமே.

பொழிப்புரை :
உஞ்சேனை மாகாளம், ஊறல், ஓத்தூர், உருத்திரகோடி, மறைக்காடு, 
மேகங்கள் பொருந்திய பொதியமலை, தஞ்சை, வழுவூர் வீரட்டம், மாதானம், 
கேதாரம், வெஞ்சமாக்கூடல், மீயச்சூர், வைகாவூர், வேதீச்சரம், விவீச்சுரம், வெற்றியூர், 
கஞ்சனூர், கஞ்சாறு, பஞ்சாக்கை ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம்..

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 2-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

காவிரியின் கரைக் கண்டிவீரட்டானம்	(6-71-2)
கடவூர்வீரட்டானம் காமரு சீர் அதிகை
மேவிய வீரட்டானம் வழுவை வீரட்டம்
வியன்பறியல் வீரட்டம் விடையூர்திக்கு இடமாம்
கோவல்நகர் வீரட்டம் குறுக்கை வீரட்டம்
கோத்திட்டைக் குடிவீரட்டானம் இவை கூறி
நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுகச் சென்றால்
நமன்தமரும் சிவன்தமர் என்று அகல்வர் நன்கே.

பொழிப்புரை :
காவிரியின் கரையிலுள்ள கண்டியூர் வீரட்டானம், கடவூர் வீரட்டானம், 
விரும்பத்தக்க புகழினை உடைய அதிகை வீரட்டானம், வழுவூர் வீரட்டானம், 
பரப்பு மிக்க பறியலூர் வீரட்டானம், இடபத்தை ஊர்தியாக உடைய சிவபெருமானுக்குரிய 
இடமாகிய கோவலூர் வீரட்டானம், குறுக்கை வீரட்டானம், தலைமையும் 
மேன்மையுமுடைய விற்குடி வீரட்டானம் என்னும் வீரட்டானங்கள் எட்டினையும் 
முறைப்பட முன்னர் ஒருமுறை மொழிந்து பின்னர் அம்முறையே நாவில் 
பழகிப் பலகாலும் போற்றுவார்க்கு அருகில் இயமதூதர்கள் ஒருகால் செல்ல 
நேரிடின் இவர் சிவபெருமானுக்கு அடியர் என்று உடனே உணர்ந்து 
அவரைவிட்டு வெகு தொலைவு அகல நீங்குவர் .

கோவில் அமைப்பு: கிழக்கு நோக்கிய 5 அடுக்கு இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுரம் கடந்து உள்ளே சென்றால் தேரே நந்தி மண்டபமும், பலிபீடமும், அதையடுத்து ஆலயத்தின் சிறப்பு தீர்த்தமான பஞ்சபிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது. அதறகப்பலா 2-வது வாயிர் உள்ளது. இதைக் படந்து ஞென்றவுடன் தேரே கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். இறைவன் கருவறையில் சுயம்பு லிங்க உருவில் கீர்த்திவாசர் என்ற பெயருடன் எழுந்தருளியுள்ளார்.

தலச் சிறப்பு: பிரளய காலத்தில் உலகெல்லாம் அழிந்தும் இவ்வூர் அழியாது பிரளயத்தினின்றும் வழுவின காரணத்தால் வழுவூர் என்று பெயர் பெற்றது. சிவபெருமானின் வீரம் குறித்த பெருமைகளைக் குறிப்பிடும் எட்டு கோயில்கள் அட்டவீரட்டானக் கோயில்கள் எனப்படுகின்றன. அவை 1) திருக்கண்டியூர் - பிரம்மன் சிரத்தைச் சிவன் கொய்தது, 2) திருக்கோவலூர் - அந்தகாசுரனைச் சங்கரித்தது, 3) திருவதிகை - திரிபுரம் எரித்தது, 4) திருப்பறியலூர் - தக்கன் சிரம் கொய்தது, 5) வழுவூர் - யானையை உரித்தது, 6) திருவிற்குடி - சலந்தாசுரனைச் சங்கரித்தது, 7) திருக்குறுக்கை - காமனை எரித்தது, 8) திருக்கடவூர் - எமனை உதைத்தது. இந்த எட்டு தலங்களில் வழுவூர் ஒரு தேவார வைப்புத் தலம், மற்ற 7 தலங்களும் பாடல் பெற்ற தலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தலத்துக்குரிய கஜசம்ஹார மூர்த்தியும், அவர் எழுந்தருளியுள்ள ஞான சபையும் சிறப்பானவை. இங்குள்ள மூர்த்தி போல் வேறு எந்த கோயில்களிலும் கஜசம்கார மூர்த்தியைக் காண முடியாது. திருவடியை யானையின் தலைமேல் ஊன்றி அதன் தோலைக் கிழித்துப் போர்த்தும் நிலையில் பெரிய திருவுருவத்தோடு கஜசம்காரமூர்த்தி விளங்குகிறார். அருகில் குழந்தையான முருகனை தன் இடுப்பில் வைத்துள்ள உமையவள் அச்சத்தோடு திரும்பும் நிலையில் நிற்கிறார். கையிலுள்ள முருகனோ தன் தந்தையை ஆட்காட்டி விரலால் சுட்டிக்காட்டுகிறார். சிதம்பரத்தில் சிதம்பர ரகசிய பிரதிஷ்டை உள்ளது போல் இங்கும் கஜசம்ஹார மூர்த்திக்கு பின்னால் யந்திர பிரதிஷ்டை உள்ளது. அம்பாள் இளங்கிளை நாயகி எனப்படுகிறாள். சுவாமியின் உள்ளங்காலை பக்தர்கள் இத்தலத்தில் மட்டுமே இந்த மூர்த்தியிடம் மட்டுமே தரிசனம் செய்யலாம்.

  1. தாருகாவனத்து முனிவர்கள் இறைவனுக்கு எதிராகச் செய்த ஆபிசார வேள்வியில் தோன்றிய யானையை, இறைவன்பால் ஏவிவிட, பெருமான் அந்த யானையை அழித்துத் தோலைப் போர்த்திக் கொண்டருளிய வீரச் செயல் நிகழ்ந்த தலம்.
  2. அமாவாசை தோறும் இறைவன் சந்நிதிக்கு எதிரிலுள்ள பஞ்சபிரம்ம தீர்த்தத்தில் சுவாமி தீர்த்தம் கொடுத்தருளுகிறார். அந்நாளில் இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் புத்திரதோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் உண்டாகும். இந்த வழிபாடு இன்றளவும் நடைபெற்று வருகிறது.
  3. தாருகாவனத்தில் வசித்து வந்த 48000 முனிவர்களின் கர்வத்தையும், செருக்கையும் அழிக்க நினைத்து சிவபெருமான் பிட்சானதராகவும், மகாவிஷ்ணு மோகினியாகவும் அவதாரம் எடுத்து முனிவர்களின் கர்வத்தை அடக்கி அவர்களுக்கு பாடம் புகற்றினார். அதன்பின் பெருமானும், மோகினியும் கூடி (சாஸ்தா) ஐயனாரைப் பெற்றெடுத்து மறைந்தார். சாஸ்தா பிறந்தது இத்தலத்தில் தான்.
  4. திருமணத்தடை நீங்க வழிபட வேண்டிய தலங்களில் வழுவூர் தலமும் ஒன்றாகும்
  5. சுவாமியின் உள்ளங்கால் தரிசனம் இத்தலத்தில் கஜசம்ஹாரமூர்த்தியிடம் மட்டுமே பெற முடியும்.
  6. இத்தலத்தின் சிறப்பு மூர்த்தியான கஜசம்கார மூர்த்திக்கு பின்புறம் தெய்வீக யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அந்த யந்திரத்தை வழிபட்டால் பில்லி, சூன்யம், ஏவல், மாந்திரீகம் ஆகியவை விலகி நன்மை பயக்கும்.
  7. இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் கிருத்திவாசரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.

வழுவூர் வீரட்டேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

ஆலயத்தின் 5 நிலை இராஜகோபுரம்

நந்தி மண்டபம், பலிமீடம்

பஞ்சமுக தீர்த்தம்

2-வது நுழைவாயில் கடந்து உள்ளே கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம்

சஹஸ்ரலிங்கம்

நால்வர் சந்நிதி

63 மூவர்

தேவ கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி

பிராகாரத்தில் சப்தமாதர் சந்நிதி

வள்ளி தெய்வானையுடன் முருகர்

ஆலயம் உட்புறத் தோற்றம்

அம்பாள் சந்நிதிக்குச் செல்லும் வாயில்

அம்பாள் பாலகுஜாம்பிகை சந்நிதி

கீர்த்திவாசர் சந்நிதி

நவக்கிரகம் சந்நிதி

கஜசம்ஹாரமூர்த்தி - உற்சவர்