தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

வாலீஸ்வரர் திருக்கோவில், மாட்டூர் (சேவூர்)


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்மாட்டூர் ( இன்றைய நாளில் சேவூர் என்று பெயர்)
இறைவன் பெயர்வாலீஸ்வரர், கபாலீஸ்வரர்
இறைவி பெயர்அறம்வளர்த்தநாயகி, தர்மசம்வர்த்தினி
பதிகம்சம்பந்தர் (2-39-7) சுந்தரர் (7-47-1)
எப்படிப் போவது அவிநாசி - கோபி - அந்தியூர் பேருந்து சாலையில் அவிநாசியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் சேவூர் உள்ளது. சேவூர் காவல் நிலையம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் அரை கி.மீ. நடந்து சென்று ஆலயத்தை அடையலாம். திருப்பூரிலிருந்து அவிநாசி வழியாக சேவூருக்குச் செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோவில்
சேவூர்
சேவூர் அஞ்சல்
அவிநாசி வட்டம்
திருப்பூர் மாவட்டம்
PIN - 609301

இவ்வாலயத் தினந்தோறும் காலையில் 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலையில் 5 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

மாட்டூர் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

சம்பந்தரின் 2-ம் திருமுறையில் 39-வது பதிகத்தில் 7-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

மாட்டூர் மடப் பாச்சிலாச்சிராமம் மயிண்டீச்சரம் வாதவூர் வாரணாசி		
காட்டூர் கடம்பூர் படம்பக்கம் கொட்டும் கடல் ஒற்றியூர் மற்று உறையூர் அவையும்
கோட்டூர் திருவாமாத்தூர் கோழம்பமும் கொடுங்கோவலூர் திருக் குணவாயில்.....

இப்பதிகப் பாடலின் முழுப்பகுதி கிடைத்திலது.

சுந்தரிரன் 7-ம் திருமுறையில் 47-வது பதிகத்தில் 1-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே கானப்பேரூராய்
கோட்டூர்க் கொழுந்தே அழுந்தூர் அரசே கொழுநல் கொல்லேறே
பாட்டூர் பலரும் பரவப்படுவாய் பனங்காட்டூரானே
மாட்டூர் அறவா மறவாது உன்னைப் பாடப் பணியாயே.

பொழிப்புரை :

காட்டூர், கடம்பூர், கானப்பேர், கோட்டூர், அழுந்தூர், கொழுநல், பாட்டூர், பனங்காடு, மாட்டூர் முதலிய தலங்களில் எழுந்தருளியிருக்கின்ற கடலும், மலையும், தளிரும், கொல்லுந் தன்மையுடைய சிங்க ஏறும் போல்பவனே, பாட்டினை மிகவுணர்ந்தவர் பலராலும், அப் பாட்டுக்களால் பரவப்படுபவனே, எருதை ஊர்கின்ற அறமுதல்வனே, அடியேன் உன்னை என்றும் மறவாது பாடுமாறு திருவருள்செய்யாய் .


location mao of sevur

சேவூர் இருப்பிடத்தைக்
காட்டும் வரைபடம்
May by google

கோவில் அமைப்பு: ஆலயம் ஒரு 5 நிலை கோபுரத்துடன் சுற்றிலும் மதிற்சுவருடன் அமைந்துள்ளது. இவ்வாலயம் முற்றிலும் கற்றளியால் ஆனது. ஆலயத்திற்கு வெளியே கோபுரத்திற்கு எதிரே கொங்கு நாட்டுத் தலங்ளுக்கே உரித்தான கருங்கல் விளக்குத்தூண் உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் விசாலமான இடத்தில் மூலவர் வாலீஸ்வரர், முருகர் மற்றும் அம்பாள் அறம்வளர்த்தநாயகி சந்நிதிகள் கிழக்கு நோக்கி உள்ளன. முருகர் சந்நிதி நடுவிலிருக்க இறைவன் மற்றும் இறைவி சந்நிதிகள் அதன் இருபுறமும் சோமஸ்கந்த அமைப்பில் இருப்பதைக் காணலாம். இறைவன் மற்றும் இறைவி இருவர் சந்நிதிகளுக்கும் தனிதனியே பலிபீடம் மற்றும் நந்தி இருக்கின்றன. முருகர் சந்நிதிக்கு எதிரே பலிபீடம் மற்றும் மயில் உள்ளது. மூன்று சந்நிதிகளுக்கும் சர்த்து முன் மண்டபம் அமைந்துள்ளது. முன் மண்டபத்தின் தெற்குப் பக்கம் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. நடராஜர் உருவம் தொன்மையும், அழகும் வாய்ந்தது. சனீஸ்ரனுக்கும் தனி சந்நிதி இவ்வாலயத்தில் உள்ளது. கொங்குதாட்டுத் தலங்கள் எல்லாவற்றிலும் சனி பகவானுக்கு தனி சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அம்பாள் அறம் வளர்த்த நாயகி கையில் தாமரை மலர் ஏந்தி தின்ற கோலத்தில் அருட்காட்சி தருகிறாள். இத்தலத்தில் அம்பாள் சந்நிதியில் மாங்கல்ய பூஜை ஆண்டு தோறும் மிக சிறந்த முறையில் கொண்டாடப்படுகிறது இத்தல இறைவனை இராமாயண காலத்து வாலி பிரதிஷ்டை செய்து பூஜை செய்ததாக தல வரலாறு குறிப்பிடுகிறது. இங்கு புலியொன்று பசுவின் மீதேறி விளையாடிய காட்சியைக்கண்ட வாலி அவ்விடத்தில் சிவபூஜை செய்ததால் இங்குள்ள சிவபெருமானுக்கு வாலீஸ்வரர் என்றும் தீர்த்தம் வாலி தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இதற்குச் சான்றாக கருங்கல் விளக்குத் தூணின் அடிப்பகுதியில் வாலி இறைவனை வழிபடுவது போன்ற சிற்பம் உள்ளதைப் பார்க்கலாம். இறைவனுக்கு கபாலீஸ்வரர் என்று பெயரும் உள்ளது. கல்வேட்டுக்களில் இக்கோவில் கபாலீச்சுரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சேவூரின் முந்தைய பெயர் செம்பியன் கிழானடி நல்லூர். புராணங்களில் ரிஷபகிரி, ரிஷபபுரி என்றும், தமிழில் மாட்டூர் என்றும் அழைக்கப்பட்ட இன்றைய சேவூர் கோவிலின் தலவிருட்சமாக வன்னிமரம் விளங்குகிறது. இத்தலத்தில் உள்ள வன்னிமரத்தின் பட்டையும் இலையையும் வீட்டில் வைத்தல் செல்வம் பெருகும் என்பது ஐதிகம்.

இத்தலத்தைப் பற்றிய வரலாற்று விபரங்கள் மேலும் அறிய http://valeeswarartemple.blogspot.com என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.

சேவூர் வரலாற்றுச் சிறப்புடையது. இங்கு நடைபெற்ற போர்களைப் பற்றிய விபரங்கள் அறிய சேவூர் போர்கள் என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.

மாட்டூர் வாலீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

ஆலயத்தின் வெளித் தோற்றம்

ஆலய கோபுரம் மற்றும் கல் விளக்குத்தூண்

ஆலயத்தின் உள்புறத் தோற்றம்

மூன்று சந்நிதிகளுக்கும் தனித்தனியே
பலிபீடம், நந்தி

மூலவர் வாலீஸ்வரர்

மூன்று சந்நிதிகளின் கருவறை விமானம்

வள்ளி தெய்வானையுடன் முருகர்

நடராஜர், சிவகாமி

மூன்று சந்நிதிகளையும் சேர்த்து முன் மண்டபம்