தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

சிவலோகநாதர் திருக்கோவில், மாகுடி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்மாகுடி ( இன்றைய நாளில் மாமாகுடி என்று பெயர்)
இறைவன் பெயர்சிவலோகநாதர்
இறைவி பெயர்சிவகாமசுந்தரி
பதிகம்அப்பர் (6-71-3)
எப்படிப் போவது மயிலாடுதுறை - செம்பொனார்கோவில் - ஆக்கூர் - திருக்கடையூர் சாலையில் ஆக்கூர் முக்கூட்டரோடு என்ற இடத்தை அடைந்து, அங்கிருந்து சின்னங்குடி பாதையில் சென்று கிடங்கல் என்ற கிராமத்தில் இடதுபுறம் செல்லும் சாலையில் சென்றால் சுமார் 2 கி.மீ. தொலைவிலுள்ள மாமாகுடி கோவிலை அடையலாம். ஆக்கூர் முக்கூட்டு சாலையில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் சற்று தொலைவு சென்றால் பூந்தாழை என்ற ஊர் வரும். அதைத் தாண்டியவுடன் வலதுபுறம் மாமாகுடி செல்லும் பாதை பிரிகிறது, அவ்வழியே சுமார் ஒண்ணரை கி.மீ.சென்றும் இத்தலத்தை அடையலாம். ஆக்கூர் முக்கூட்டு சாலை நிறுத்தத்தில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோவில்
மாமாகுடி
மாமாகுடி அஞ்சல்
வழி ஆக்கூர்
தரங்கம்பாடி வட்டம்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 609301

காலையில் ஒரு கால பூஜை மட்டும் நடைபெறுகிறது. ஆலய அர்ச்சகர் இருக்கும் வீட்டை கோவில் அருகில் கேட்டுத் தெரிந்து கொண்டு அவரை அழைத்து வந்து ஆலயத்தை திறந்து காட்டச் சொல்லலாம்.

மாகுடி வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 3-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

நற்கொடி மேல் விடையுயர்த்த நம்பன் செம்பங்குடி
நல்லக்குடி நளி நாட்டியத்தான்குடி
கற்குடி தென்களக்குடி செங்காட்டங்குடி
கருந்திட்டைக்குடி கடையக்குடி காணுங்கால்
விற்குடி வேள்விக்குடி நல் வேட்டக்குடி
வேதிகுடி மாணிகுடி விடைவாய்க்குடி
புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி
புதுக்குடியும் போற்ற இடர் போகுமன்றே.

பொழிப்புரை :
நல்ல இடபக் கொடியை மேலே உயரத்தூக்கியவனும், நம்புதற்குரியவனுமாகிய 
சிவபெருமானுடைய செம்பங்குடி, நல்லக்குடி, பெருமைமிக்க நாட்டியத்தான்குடி, 
கற்குடி, இனிய களக்குடி, செங்காட்டங்குடி, கருந்திட்டைக்குடி, கடையக்குடி 
ஆகியவற்றோடு ஆராயுங்கால் குடியில் முடியும் ஊர்களாகிய விற்குடி, வேள்விக் குடி, 
நன்மமைமிகு வேட்டக்குடி, வேதிகுடி, மாணிகுடி, விடைவாய்க்குடி, புற்குடி, மாகுடி, 
தேவன்குடி, நீலக்குடி, புதுக்குடி என்பனவற்றையும் புகழ்ந்து கூறத் துன்பம் நீங்கும் .

தேவர்கள் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்த நிகழ்வு, திருக்கடையூரில் நிகழ்ந்ததாகப் புராணங்கள் சொல்கின்றன. தேவர்களும் அசுரர் களும் பாற்கடலைக் கடைந்தபோது, புனிதத்துவம் நிறைந்த பொருட்கள் பல தோன்றின என்கிறது புராணம். தேவர்கள் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்த நிகழ்வு, திருக்கடையூரில் நிகழ்ந்ததாகப் புராணங்கள் சொல்கின்றன. தேவர்களும் அசுரர் களும் பாற்கடலைக் கடைந்தபோது, புனிதத்துவம் நிறைந்த பொருட்கள் பல தோன்றின என்கிறது புராணம். காமதேனு, தன்வந்திரி பகவான், லட்சுமிதேவி போன்றோரும் பாற்கடலில் இருந்து தோன்றினார்கள்.

லட்சுமிதேவி அவதரித்த இந்தத் தலத்தை ஆதி காலத்தில் "திருமால்மாகுடி" என்றும் "லட்சுமிபுரம்" என்றும் அழைத்து வந்தார்கள். "மா" என்றால் லட்சுமி,. "குடி" என்றால் பிறந்த ஊர். செல்வ வளத்துக்கு அதிபதியான லட்சுமிதேவி அவதரித்த தலம் இது என்பதால், மாகுடி என வழங்கப்பட்டு, இப்போது மாமாகுடி என்றாயிற்று. புராதனமான ஆலயம், புண்ணியம் நல்கும் திருத்தலம், செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமி அவதரித்த தலம் என்ற சிறப்புடையது மாமாகுடி என்று இன்றைய நாளில் அறியப்படும் மாகுடி என்ற தேவார வைப்புத் தலம். Text from hinduspiritualarticles.blogspot.in

சோழர் கால கட்டுமானத்தைக் கொண்டிருந்த இக்கோவிலில் 2010-ம் ஆண்டு மே மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. புராதனமான கோவில் என்பதற்கான சுவடுகள் சிறிது கூட தெரியாமல் பதியதாக கட்டிய கோவில் போன்று இன்று தோற்றமளிக்கிறது. திருப்பணிகள் செய்ய ஆரம்பிப்பதற்கு முன் கோவில் இருந்த நிலையைக் காட்டும் புகைப்படம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.


மாகுடி ஆலயத்தின் பழைய தோற்றம்

கோவில் அமைப்பு: நான்கு புறமும் சுற்றுச் சுவருடனும், கிழக்கில் ஒரு வாயிலுடனும் ஆலயம் இன்று காணப்படுகிறது. ஆலயத்திற்கு இராஜகோபுரமில்லை. வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் நேரே நாம் காண்பது பலீபீடம். அதையடுத்து நந்தியெம்பெருமான் தனி மண்டபத்தில் உள்ளார். வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது தென்மேற்கில் தல விநாயகரும், மேற்குச் சுற்றில் முருகப்பெருமானும், வடமேற்குப் பகுதியில் மகாலட்சுமியும் உள்ளனர். இந்த மாகாலட்சுமி சந்நிதியும், கருவறை வடக்கு கோஷ்டத்திலுள்ள துர்க்கையும் 2010-ன் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற போது நிர்மாணக்கப்பட்டவையாகும். பலிபீடம், நந்தி மண்டபம் கடந்து அடுத்துள்ள வாயில் வழியே இறைவன் குடியிருக்கும் கருவறை நோக்கிச் செல்லலாம். கருவறையில் இறைவன் சிவலோகநாதர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை மகாமண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் சிவகாமசுந்தரி சந்நிதி அமைந்துள்ளது. தெற்கு வெளிப் பிராகாரத்தில் இருந்து அம்பாள் சந்நிதி செல்ல ஒரு வாயில் உள்ளது. கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார். பிராகார வலத்தின்போது சிவலோகநாதர், சிவகாமசுந்தரி, நடராஜர் ஆகியோரின் விமானங்களை தரிசிக்கலாம்.

மாகுடி சிவலோகநாதர் ஆலயம் புகைப்படங்கள்

ஆலயத்தின் முகப்பு வாயில்

ஆலயத்தின் உட்புறத் தோற்றம்

பலிபீடம், நந்தி மண்டபம்

தெற்குப் பிராகாரத் தோற்றம்

விநாயகர் சந்நிதி

வள்ளி தெய்வானையுடன் முருகர் சந்நிதி

ஆலயத்தின் விமானங்கள் தோற்றம்

மூலவர் சிவலோகநாதர் சந்நிதி

அம்பாள் சிவகாமசுந்தரி சந்நிதி