தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில், மந்தாரம்


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்மந்தாரம் (இந்நாளில் ஆத்தூர் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்சொர்ணபுரீஸ்வரர், மந்தாரவனேஸ்வரர்
இறைவி பெயர்அவயாம்பிகை, அஞ்சனாட்சி, அங்கயற்கண்ணி
பதிகம்அப்பர் (6-70-6)
எப்படிப் போவது வைத்தீஸ்வரன்கோயில் - திருப்பனந்தாள் சாலையில் மணல்மேடு வந்து, அங்கிருந்து பந்தநல்லூர் சாலையில் திரும்பிச் சென்று கேசிங்கன் என்ற ஊரைத் தாண்டி வலதுபுறம் பிரியும் சாலையில்- விசாரித்துச் சென்று ஆத்தூரை (ஆற்றூரை) அடையலாம். வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து வடமேற்கில் சுமார் 16 கி.மீ. தொலைவிலும், பந்தநல்லூரிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலும் ஆத்தூர் உள்ளது..
ஆலய முகவரி அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில்
ஆத்தூர்
வழி மணல்மேடு
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 609204

இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

மந்தாரம் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 6-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் அப்பர் திருப்புகலூரில் தங்கி இருந்த பொது அருளிச் செய்ததாகும்

மண்ணிப் படிக்கரை வாழ்கொளிபுத்தூர்
வக்கரை மந்தாரம் வாரணாசி
வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி
விளமர் விராடபுரம் வேட்களத்தும்
பெண்ணை யருட்டுறைதண் பெண்ணாகடம்
பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூருங்
கண்ணை களர்காறை கழிப்பாலையுங்
கயிலாய நாதனையே காணலாமே.

பொழிப்புரை :

மண்ணிப்படிக்கரை, வாழ்கொளிபுத்தூர், வக்கரை, மந்தாரம்,
வாரணாசி, வெண்ணி, விளத்தொட்டி, வேள்விக்குடி, விளமர், 
விராடபுரம், வேட்களம், பெண்ணையாற்றங்கரையிலுள்ள அருட்டுறை, 
பெண்ணாகடம், பிரம்பில், பெரும்புலியூர், பெருவேளூர், கண்ணை, 
களர், காறை, கழிப்பாலை, முதலிய இடங்களில் கயிலாயநாதனைக் காணலாம் .

திருநாவுக்கரசர் அருளிய ஷேத்திரக்கோவை திருத்தாண்டகத்தில் மந்தாரம் என்று குறிப்பிடப்பட்டுள்ள இத்தலம் இன்றைய நாளில் ஆத்தூர் என்று மக்கள் வழக்கில் கூறப்படுகிறது. முருகப் பெருமானால் உண்டாக்கப்பட்ட சுப்பிரமணிய நதி எனப்படும் மண்ணியாறு நதியின் கரையில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு நந்திபுரம், நடனபுரம், மந்தாரவனம் என்ற பெயர்களும் அந்நாளில் இருந்துள்ளன.

கிழக்கு நோக்கிய இவ்வாலயம் இரண்டு பிராகாரங்களுடன் அமைந்துள்ளது. கோவிலுக்கு வெளியே இவ்வாலயத்தின் சிறப்பு மிக்க மண்டூக தீர்த்தம் உள்ளது. மூலவர் சொர்ணபுரீஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்புலிங்க உருவில் எழுந்தருளியுள்ளார். இங்கு அஞ்சனாட்சி, அங்கயற்கண்ணி என்று இரண்டு அம்பாள் சந்நிதிகள் உள்ளன. இத்தலத்திலுள்ள அஷ்டபுஜ துர்க்கை சந்நிதியும், சொர்ணபைரவர் சந்நிதியும் தரிசிக்க வேண்டியவையாகும். ஆலயத்தின் தல விருட்சம் மந்தார மரம். தீர்த்தம் மண்டூக தீர்த்தம். இத்தலம் ஒரு காலத்தில் மந்தார வனமாக இருந்தது. மந்தார வனத்தில் எழுந்தருளியுள்ளதால் இத்தல இறைவனுக்கு மந்தாரவனேஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு.

மண்டூக தீர்த்தம்: இத்தலத்திலுள்ள குளத்தில் ஒரு தவளை வெகு நாட்களாக வசித்து வந்தது. ஒரு சமயம் பெருமழை பெய்ய தவளை கரை ஓரத்தில் ஒதுங்கியது. பசியால் இரை தேடி வந்த பாம்பு ஒன்று இத்தவளையை விழுங்கியது. நெடுநாளாக இக்கோவில் குள தீர்த்தத்தில் வாசம் செய்து வந்ததற்கு இது தான் பலனா என்று தவளை நினைத்து வருந்தியது. அம்பிகை அங்கு எழுந்தருளி தவளைக்கு பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசிக்க, தவளை பாம்பின் பிடியிலிருந்து விடுபட்டது. தீர்த்தமும் மண்டூக தீர்த்தம் என்று பெயர் பெற்றது. மண்டூகம் என்றால் தவளை. இந்த தீர்த்தத்தில் நீராடி, இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்தால் மண்டூக தோஷம், காலசர்ப்ப தோஷம், ராகு தோஷம், ஜாதகத்தில் ராகு 1, 2, 5, 7, 8 மற்றும் 11-ம் இடங்களில் இருக்கும் தோஷம் ஆகியவை நீங்கும்.

நந்தி வழிபட்டது: இத்தலத்தில் ஒரு முனிவர் புத்திர பாக்கியம் வேண்டி சிவபெருமானை வெகு நாட்களாக வழிபாடு செய்து வந்தார். சிவன் அருளால் நந்தியெம்பெருமான் அந்த முனிவருக்கு மகனாக அவதரித்தார். முனிவர் தன் மகனுக்கு நந்தி என்று பெயர் சூட்டினார். நந்தி சிவபெருமானை பூஜை செய்து வர, இறைவன் நந்திக்கு ஞானம், அறிவு ஆற்றல் ஆகிய வரங்களை அளித்து ஞானத்தை உபதேசித்தார். இந்த நந்தியை வழிபாடு செய்தால் அறிவு, ஞானம், புத்திர பாக்கியம், பதவி உயர்வு பெறலாம். இந்த புராண வரலாற்றை நினைவு படுத்துவது போல, நந்தி சிவபெருமானை வழிபடும் சிற்பம் இவ்வாலயத்தில் உள்ளது.

இக்கோவிலுள்ள அஷ்டபுஜ துர்க்கை கையில் பூவும், கிளியும் ஏந்தி வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறாள். இந்த துர்க்கையை வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் அபிஷேக அர்ச்சனை செய்தால் மனதில் நினைத்த காரியங்கள், திருமணம் ஆகாத ஆண், பெண் இருவருக்கும் விரைவில் திருமணம் கைகூடும்.

மந்தாரம் ஆலயம் புகைப்படங்கள்