தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

அகத்தீஸ்வரர் திருக்கோவில், மணற்கால்


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்மணற்கால் (மணக்கால்)
இறைவன் பெயர்அகத்தீஸ்வரர்
இறைவி பெயர்செளந்தரநாயகி
பதிகம்அப்பர் (6-25-10)
எப்படிப் போவது திருவாரூர் - குடவாசல் - கும்பகோணம் சாலையிலுள்ள மணக்கால் என்ற ஊரில் உள்ளது. மணக்காலில் விசாரித்துச் செல்ல வேண்டும். இந்த ஊரைத் தாண்டி மணக்கால் அய்யம்பேட்டையில் பெருவேளூர் என்ற தேவாரப் பாடல் பெற்ற தலம் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்
மணக்கால்
மணக்கால் அய்யம்பேட்டை அஞ்சல்
திருவாரூர் மாவட்டம்
PIN - 610104

ஒரு கால பூஜை மட்டும் நடைபெறுகிறது. கோவில் அருகில் விசாரித்து ஆலயத்தை திறந்து காட்டச் சொல்லலாம்.

மணற்கால் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 25-வது பதிகத்தில் 10-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் திருவாரூர் தலத்திற்குரிய பதிகமாகும்.

நல்லூரே நன்றாக நட்டம் இட்டு
நரை ஏற்றைப் பழையாறே பாய ஏறிப்
பல்லூரும் பலிதிரிந்து சேற்றூர் மீதே
பலர் காணத் தலையாலங்காட்டின் ஊடே
இல் ஆர்ந்த பெருவேளூர்த் தளியே பேணி
இராப்பட்டீச்சரம் கடந்து மணற்கால் புக்கு
எல்லாரும் தளிச்சாத்தங்குடியில் காண
இறைப் பொழுதில் திருவாரூர் புக்கார் தாமே.

பொழிப்புரை :
நல்லூரில் நன்றாகக் நடனமாடி, பழையாறையை நோக்கி வெண்ணிறக் காளையை 
இவர்ந்து, பல ஊர்களிலும் பிச்சைக்காகத் திரிந்து, சேற்றூரில் பலர் காண நின்று, 
தலையாலங் காட்டினூடே மறைந்து நின்று, பெருவேளூர்க் கோயிலிலே விரும்பித் தங்கி, 
இராபட்டீச்சரத்தில் இராப்பொழுதைக் கழித்து மணற்காலில் நுழைந்து தளிச்சாத்தங்குடி வழியாக 
எல்லாரும் காணச் சென்று ஒரு நொடிப் பொழுதில் திருவாரூரில் எம் பெருமான் புகுந்தார் .

ஆலயத்திற்கு இராஜகோபுரமில்லை. மேற்குப் பார்த்த ஒரு முகப்பு வாயிலுடன் ஆலயம் காணப்படுகிறது. முகப்பு வாயில் கடந்து உள்ளே சென்றால் முன் மண்டபத்தில் நந்தியைக் காணலாம். வெளிப் பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. பிராகாரம் சுற்றி வந்து முன் மண்டபம் வழியாக மூலவர் கருவறைக்குச் செல்லலாம். கருவறை வெளிப்புறச் சுவர் மாடங்களில் கோஷ்ட மூர்த்தங்கள் ஏதுமில்லை. உள் சுற்றுப் பிராகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர் ஆகியோர் உள்ளனர். சனி பகவான் தனி சந்நிதியில் காட்சி தருகிறார். இந்த உள் சுற்றுப் பிராகாரத்தில் உற்சவ மூர்த்தங்கள் வைக்கப்பட்டுள்ளன.

கருவறையில் மூலவர் அகத்தீஸ்வரர் மேற்கு நோக்கி உயர்ந்த பாணத்துடன் அருட்காட்சி தருகிறார். அம்பாள் செளந்தரநாயகி தெற்கு நோக்கு கோவில் கொண்டுள்ளாள்.

மணற்கால் அகத்தீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

ஆலயத்தின் முகப்பு வாயில்

ஆலயத்தின் உட்புறத் தோற்றம்

மூலவர் விமானம்

காக வாகனத்துடன் சனி பகவான்

வள்ளி தெய்வானையுடன் முருகர்

நடராஜர், சிவகாமி - உற்சவ மூர்த்தம்

விநாயகர்

மூலவர் அகத்தீஸ்வரர்

அம்பாள் செளந்தரநாயகி