தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

பாவநாசர் திருக்கோவில், பொதியல் (பொதியன்மலை)


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்பொதியல், (பொதியன்மலை) - இன்றைய நாளில் இத்தலம் பாபநாசம் என்று அறியப்படுகிறது
இறைவன் பெயர்பாவநாசர், பாபவிநாசகர்
இறைவி பெயர்உலகநாயகி, லோகநாயகி
பதிகம்சம்பந்தர், (1-50-10, 1-79-1), அப்பர் (6-70-8)
எப்படிப் போவது திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம் வழியாக 60 கி.மீ. தொலைவில் பாபநாசம் திருத்தலம் அமைந்துள்ளது. திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், தென்காசி முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு பாவநாசர் திருக்கோவில்
பாபநாசம்
வி.கே.புரம் அஞ்சல்
அம்பாசமுத்திரம் வட்டம்
திருநெல்வேலி மாவட்டம்
PIN - 627425

இத்திருக்கோவில் காலை 6-30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

பொதியல் (பொதியன்மலை) வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

சம்பந்தரின் 1-ம் திருமுறையில் 50-வது பதிகத்தில் 10-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இப்பதிகம் வலிவலம் தலத்திற்குரிய பதிகமாகும்.

பொதியிலானே பூவணத்தாய் பொன் திகழும் கயிலைப்	1-50-10
பதியிலானே பத்தர் சித்தம் பற்று விடாதவனே
விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கியர் என்று இவர்கள்
மதியிலாதார் என் செய்வாரோ வலிவலம் மேயவனே.

பொழிப்புரை :

திருவலிவலம் மேவிய இறைவனே, பொதியமலையைத் தனக்கு இடமாகக் கொண்டவனே, திருப்பூவணம் என்னும் தலத்தில் உறைபவனே, தன்பால் பக்தி செய்யும் அன்பர்களின் சித்தங்களில் எழுந்தருளி இருப்பவனே, கொடிய சமணர்களும் சாக்கியர்களும் உன்னை அடையும் புண்ணியம் இல்லாதவர்கள். அறிவற்ற அவர்கள் தங்கள் சமய நெறியில் என்ன பயனைக் காண்பார்களோ?.

சம்பந்தரின் 1-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 1-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இப்பதிகம் கழுமலம் (சீர்காழி) தலத்திற்குரிய பதிகமாகும்.

அயில் உறு படையினர் விடையினர் முடிமேல் அரவமும் மதியமும் விரவிய அழகர்	1-79-1
மயில் உறு சாயல வனமுலை ஒருபால் மகிழ்பவர் வானிடை முகில் புல்கும் மிடறர்
பயில்வுறு சரிதையர் எருது உகந்து ஏறிப் பாடியும் ஆடியும் பலிகொள்வர் வலி சேர்
கயிலையும் பொதியிலும் இடம் என உடையார் கழுமலம் நினைய நம் வினைகரிசறுமே.

பொழிப்புரை :

கூர்மை பொருந்திய சூலப்படையை உடைய வரும், விடை ஊர்தியினரும், முடிமேல் அரவு மதி ஆகியன விரவிய அழகுடையவரும், ஆண்மயில் போலும் கட்புலனாகிய மென்மையையும், அழகிய தனபாரங்களையும் உடைய உமையம்மையை ஒரு பாலாகக் கொண்டு மகிழ்பவரும், வானகத்தே பொருந்திய மேகம் போன்ற கரியமிடற்றினரும், எல்லோராலும் போற்றப்படும் புராண வரலாறுகளை உடையவரும், இடபத்தில் மகிழ்ந்தேறிப் பாடியும் ஆடியும் சென்று பலியேற்பவரும், வலிமை சேர்ந்த கயிலை, பொதியில் போன்ற அழகிய மலைகளைத் தம் இடங்களாக உடையவரும் ஆகிய சிவபெருமான் உறையும் கழுமலத்தை நினைய நம் வினைத்தீமை அறும்.

திருநாவுக்கரசரிம் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 8-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் அப்பர் திருப்புகலூரில் தங்கி இருந்த போது அருளிச் செய்ததாகும்.

உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்	6-70-8
உருத்திரகோடி மறைக்காட்டுள்ளும்
மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்
வீரட்டம் மாதானங் கேதாரத்தும்
வெஞ்சமாக்கூடல் மீயச்சூர் வைகா
வேதீச்சுரம் விவீச்சுரம் வெற்றியூரும்
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையுங்
கயிலாய நாதனையே காணலாமே.

பொழிப்புரை :

உஞ்சேனை மாகாளம், ஊறல், ஓத்தூர், உருத்திரகோடி, மறைக்காடு, மேகங்கள் பொருந்திய பொதியமலை, தஞ்சை, வழுவூர்வீரட்டம், மாதானம், கேதாரம், வெஞ்சமாக்கூடல், மீயச்சூர், வைகாவூர், வேதீச்சரம், விவீச்சுரம், வெற்றியூர், கஞ்சனூர், கஞ்சாறு, பஞ்சாக்கை ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம் .