தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

பட்டீஸ்வரர் திருக்கோவில், ஆன்பட்டி (பேரூர்)


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்பேரூர் (ஆன்பட்டி என்றும் இத்தலம் தேவாரத்தில் குறிப்படப்பட்டுள்ளது)
இறைவன் பெயர்பட்டீஸ்வரர்
இறைவி பெயர்மரகதாம்பாள் என்னும் பச்சை நாயகி
பதிகம்அப்பர் (6-7-10, 6-51-8, 6-70-2, ), சுந்தரர் (7-47-4, 7-90-10)
எப்படிப் போவது கோயம்புத்தூர் நகரில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் சிறுவாணி செல்லும் வழியில் பேரூர் உள்ளது. கோயம்புத்தூரில் இருந்து அடிக்கடி நகரப் பேருந்து வசதிகள் உள்ளன.
ஆலய முகவரி அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோவில்
பேரூர்
பேரூர் அஞ்சல்
கோயம்புத்தூர்
கோயம்புத்தூர் மாவட்டம்
PIN - 6414040

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆன்பட்டி (பேரூர்) வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 7-வது பதிகத்தில் 10-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் திருவதிகை வீரட்டானத்திற்குரிய பதிகமாகும்.

சிந்தும் புனற்கெடில வீரட்டமும்		
திருவாஞ்சியமும் திருநள்ளாறும்
அந்தண் பொழில்புடைசூழ் அயோகந்தியும்
ஆக்கூரும் ஆவூரும் ஆன்பட்டியும்
எந்தம் பெருமாற் கிடமாவதாம்
இடைச்சுரமும் எந்தை தலைச்சங்காடும்
கந்தங் கமழுங் கரவீரமும்
கடம்பூர்க் கரக்கோயில் காப்புக்களே.

பொழிப்புரை :

அதிகை வீரட்டம், வாஞ்சியம், நள்ளாறு, தண்பொழில் சூழ் அயோகந்தி, ஆக்கூர், ஆவூர், ஆன்பட்டி, இடைச்சுரம், தலைச்சங்காடு, நறுமணம் கமழும் கரவீரம், சக்கரக் கோயிலை உடைய கடம்பூர் ஆகியன எங்கள் பெருமானுக்குத் திருத்தலங்களாம் .

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 51-வது பதிகத்தில் 8-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் திருவீழீமிழலை தலத்திற்குரிய பதிகமாகும்.

அஞ்சைக் களத்துள்ளார் ஐயாற்று உள்ளார்	
ஆரூரார் பேரூரார் அழுந்தூர் உள்ளார்
தஞ்சைத் தளிக்குளத்தார் தக்களூரார்
சாந்தை அயவந்தி தங்கினார் தாம்
நஞ்சைத் தமக்மு அமுதா வுண்ட நம்பர்
நாகேச்சரத்து உள்ளார் நாரையூரார்
வெஞ்சொற் சமண் சிறையில் என்னை மீட்டார்
வீழிமிழலையே மேவினாரே.

பொழிப்புரை :

பெருமானார் விடத்தைத் தமக்கு அமுதமாக உண்டு நம்மைப் பாதுகாத்தமையால் நம்மால் விரும்பப்படுபவராய்க் கொடிய சொற்களை உடைய சமணசமயச் சிறையிலிருந்து என்னை மீட்டவராய், அஞ்சைக்களம், ஐயாறு, ஆரூர், பேரூர், அழுந்தூர், தஞ்சைத் தளிக்குளம், தக்களூர், சாத்தமங்கையிலுள்ள திருக்கோயிலாகிய அயவந்தி, நாகேச்சரம், நாரையூர் இவற்றில் தங்கி, வீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார்.

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 2-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

ஆரூர் மூலட்டானம் ஆனைக்காவும்	
ஆக்கூரில் தான்தோன்றிமாடம் ஆவூர்
பேரூர் பிரமபுரம் பேராவூரும்
பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங்
கூரார் குறுக்கை வீரட்டானமும்
கோட்டூர் குடமூக்குக் கோழம்பமும்
காரார் கழுக்குன்றும் கானப்பேரும்
கயிலாய நாதனையே காணலாமே.

பொழிப்புரை :

ஆரூர் மூலட்டானம், ஆனைக்கா, ஆக்கூரில் உள்ள தான் தோன்றி மாடம், ஆவூர், பேரூர், பிரமபுரம், பேராவூர், பெருந்துறை, காம்பீலி, பிடவூர், எல்லோரும் விரும்பும் சிறப்பு மிக்க குறுக்கை வீரட்டம், கோட்டூர், குடமூக்கு, கோழம்பம், மேகங்கள் தங்கும் கழுக்குன்றம், கானப்பேரூர் இவற்றில் கயிலாய நாதனைக் காணலாம்.

சுந்தரரின் 7-ம் திருமுறையில் 47-வது பதிகத்தில் 4-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

ஆரூர் அத்தா ஐயாற்று அமுதே அளப்பூர் அம்மானே	
காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற் கருகாவூரானே
பேரூர் உறைவாய்பட்டிப் பெருமான் பிறவா நெறியானே
பாரூர் பலரும் பரவப் படுவாய் பாசூர் அம்மானே.

பொழிப்புரை :

ஆரூர், ஐயாறு, அளப்பூர், கருகாவூர், பேரூர், பட்டீச்சுரம், திருப்பாசூர் முதலிய தலங்களில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனே, அமுதம் போல்பவனே, பிறவாத நெறியை உடையவனே, நீயே இந்நிலவுலகில் நிறைந்துள்ள பலராலும் பரவப்படுபவன்.

சுந்தரரின் 7-ம் திருமுறையில் 90-வது பதிகத்தில் 10-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

பார் ஊரும் அரவு அல்குல் உமைநங்கை அவள்பங்கன்		
பைங்கண் ஏற்றன்
ஊர் ஊரன் தருமனார் தமர் செக்கில் இடும்போது
தடுத்து ஆட்கொள்வான்
ஆரூரன் தம்பிரான் ஆரூரன் மீகொங்கில்
அணி காஞ்சி வாய்ப்
பேரூரர் பெருமானைப் புலியூர்ச் சிற்றம்பலத்தே
பெற்றாம் அன்றே

பொழிப்புரை :

மனமே, நிலத்தில் ஊர்ந்து செல்கின்ற பாம்பினது படம்போலும் அல்குலையுடைய உமை என்னும் நங்கையது பாகத்தையுடையவனும், பசிய கண்களையுடைய இடபத்தை யுடையவனும், ஊர் தோறும் எழுந்தருளியிருப்பவனும் நம்மை, கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும் போது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனும், நம்பியாரூரனுக்குத் தலைவனும், திருவாரூரை உடையவனும், மேற்றிசையில் உள்ள கொங்கு நாட்டில் , அழகிய காஞ்சி நதியின் கரையில் விளங்கும் பேரூரில் உள்ளவரது கடவுளும் ஆகிய இறைவனை, பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் அடைந்து விட்டோமன்றே; இனி நாம் பெறவேண்டுவது யாது !

இன்றைய கோயம்புத்தூர் மாநகரம் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாகும். கோவன் என்பவர் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்ததால், இப்பகுதி "கோவன் புத்தூர்" என்ற பெயர் பெற்றது. பிறகு இப்பெயர் திரிந்து "கோயம்புத்தூர்" ஆயிற்று என்றும் அறியப்படுகிறது. கோயம்புத்தூர் நகரம் சிறப்பெய்துமுன் கோயம்புத்தூரிலிருந்து 7கி.மீ. தொலைவிலுள்ள பேரூர் என்னும் சிற்றூரே அன்று பெரிய ஊராகப் பெருமையுடன் விளங்கியது. பேரூரைச் சுற்றியிருந்த பகுதி பேரூர் நாடு எனப்பட்டது. இப்பேரூர் நாடு கொங்கு நாட்டின் உட்பிரிவுகளில் ஒன்றாகும். பேரூர் நாட்டின் தலைநகராகப் பேரூர் விளங்கிற்று. பேரூர் சிறப்புற்று விளங்கிய காலத்தில் பேரூர் நாட்டில் அடங்கியிருந்த ஒரு கிராமமாக இன்றைய கோயம்புத்தூர் விளங்கியது.

பேரூரிலுள்ள பட்டீஸ்வர சுவாமி கோவில் ஒரு தொன்மையான சிவ வழிபாட்டுத் தலம் ஆகும். இதனை "மேலச் சிதம்பரம்" என அழைப்பர். சைவ சமயாச்சாரியார்கள் நால்வரில் அப்பரும், சுந்தரரும் இக்கோவிலுக்கு வருகை தந்து இக்கோவிலைப்பற்றித் தேவாரத்தில் பாடியுள்ளனர். அருணகிரி நாதரின் திருப்புகழில் இக்கோவில் பற்றிய பாடல் உள்ளது. கச்சியப்ப முனிவர் தம் பேரூர்ப் புராணத்தில் இக்கோவிலைப் பற்றிப் பாடியுள்ளார். இப்புராணம் 2,220 பாடல்களைக் கொண்டது.

கோவிலின் கருவறையில் பட்டீஸ்வரர் லிங்க வடிவில் காட்சி தருகிறார். இக்கோவிலின் இறைவி மரகதாம்பாள் என்னும் பச்சை நாயகி அம்மன் ஆவார். அம்மன் சந்நிதி அருகில் துர்க்கை அம்மன் சந்நிதி உள்ளது. கனக சபையில் நடராசர் காட்சி தருகிறார். பட்டீஸ்வர சுவாமி கோவிலின் கலைச் சிறப்புமிக்க பகுதி இந்த கனக சபை ஆகும். இங்கு ஒரே கல்லினாலான தூண்களில் பல வியத்தகு சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இச்சபையில் காணப்படும் எட்டுத் தூண்களிலுள்ள புகழ்மிக்க சிற்பங்கள் பின்வருமாறு :

1. யானையுரி போர்த்த மூர்த்தி
2. அக்கினி வீரபத்திரர்
3. ஊர்த்துவ தாண்டவர்
4. நர்த்தன கணபதி
5. ஆறுமுகப் பெருமான்
6. ஆலங்காட்டுக் காளி
7. அகோர வீரபத்திரர்
8. பிச்சாடனர்.
மேற்கூறிய எட்டுச் சிற்பங்கள் ஒவ்வொன்றும் ஒரு கலைக்கருவூலம் ஆகும். இச்சிறபங்கள் காண்போர் யாவரையும் மெய்மறக்கச் செய்கின்றன. இவை பல புராணச் செய்திகளை சித்திரிக்கின்றன. நாயக்கர் காலச் சிற்பங்களின் உன்னத உளி வேலைப்பாட்டினால் உருவான இச்சிற்பங்கள் "உலோகத்தினால் வார்க்கப்பட்டனவா" என்று நாம் வியக்கும் அளவிற்குப் பளபளப்பினையும் நுண்ணிய வேலைப்பாட்டையும் கொண்டுள்ளன. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்திலுள்ள ஆயிரக்கால் மண்டபச் சிற்பங்களுடன் ஒப்பிடும்படியாக இச்சிற்பங்கள் உள்ளன. கனக சபையின் கூரைப் பகுதியில் காணப்படும் தலைகீழாக உள்ள சுழலும் தாமரைப்பூ, இதனருகிலுள்ள கிளிகள், ஒரே கல்லினாலான கல் வளையங்கள், கோலாட்டம் மற்றும் நடனச் சிற்பங்கள் ஆகியவை அக்காலச் சிற்பியின் கலைத் திறமையைக் காட்டுகின்றன. மேலும் துர்க்கை அம்மன் சந்நிதி முன்னுள்ள சிங்கத்தின் வாயினுள் சுழலும் கல் உருண்டை ஒன்று உள்ளது. இது ஒரு சிற்ப விநோதம் ஆகும்.

மரகதாம்பாள் என்னும் பச்சை நாயகி உடனுறை பட்டீஸ்வர சுவாமி அருள்பாலிக்கும் இத்தலம் ஒரு முக்தித் தலம் ஆகும். அதற்கு ஐந்து சான்றுகள் உள்ளன. அவையாவன: -

  1. முதலாவது பிறவாப்புளி, இது பூப்பூக்கும் காய் காய்க்கும் பழம் பழுக்கும் ஆனால் விதை மட்டும் முளைக்காது. இப்பிறவாப்புளி இராஜ கோபுரத்தின் எதிரில் உள்ளது.
  2. இரண்டாவது இறவாப்பனை, பெரிய கோவிலின் வடக்கே உள்ள காஞ்சிமா (நொய்யல்) ஆற்றின் தென் கரையிலுள்ள பிரம்மன் பூஜித்த வடகயிலாயம் என்னும் சிறு கோவிலின் வெளி முகப்பில் உள்ளது இந்த இறவாப்பனை, எத்தனை யுகங்களாகவோ இம்மரம் அங்கேயே உள்ளது. பேரூரில் ஆன்மாக்களுக்கு அழியாத நிலையான வாழ்வைத் தந்தருளுபவர் இறைவன். அழியாத்தன்மைக்கு சான்றாக இவ்விறவாப்பனை உள்ளது.
  3. மூன்றாவது இத்தலத்தின் சாணத்தில் புழுக்கள் உற்பத்தி ஆவதில்லை.
  4. நான்காவது நொய்யல் ஆற்றில் கரைக்கப்பட்ட எலும்புகள் வெண் கற்களாக மாறுகின்றன. எனவே இப்பகுதி மக்கள் தங்கள் இறந்த உறவினர்களின் அஸ்தியை இக்காஞ்சிமா நதியில் கொண்டு வந்து கரைக்கின்றனர்.
  5. ஐந்தாவது இத்தலத்தில் இறப்பவர்கள் வலது காது எப்போதும் மேலே இருக்கும்படி வைப்பர், ஏனென்றால் சிவபெருமான் ஓம் என்னும் ஐந்தெழுத்தை ஓதி தன்னடியில் சேர்த்துக் கொள்வார் என்பதால். எனவே இத்தலத்தில் பட்டீஸ்வரரை தரிசிப்பவர்களுக்கு மறு பிறவியில்லை. ஆதி சங்கரர் தன் தாய் முக்தி அடைய இத்தலத்தில் பிரார்த்தனை செய்துள்ளார்.

பேரூர் தலத்தைப் பற்றிய மேலும் பிற விபரங்கள் அறிய http://natarajar.blogspot.com/2009/12/blog-post_26.html என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.