தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

ஆதித்தேஸ்வரர் திருக்கோவில், பேராவூர்


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்பேராவூர்
இறைவன் பெயர்ஆதித்தேஸ்வரர்
இறைவி பெயர்ஞானாம்பாள்
பதிகம்அப்பர் (6-70-2, 6-71-4)
எப்படிப் போவது ஆடுதுறை - கோமல் சாலையில் சுமார் 7 கி.மீ. சென்று வீரசோழன் ஆற்றங்கரை என்னுமிடத்தில் வலப்புறமாக பிரியும் சாலையில் சுமார் 1 கி.மீ. சென்றால் பேராவூரை அடையலாம். திருவாவடுதுறை மற்றும் குத்தலாத்தில் இருந்தும் இத்தலத்தை அடையலாம். திருவாவடுதுறையில் இருந்து தென்கிழக்கே சுமார் 5 கி.மீ. தொலைவிலும், குத்தலாத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலும் இத்தலம் உள்ளது. நச்சினார்க்குடி என்ற ஊரிலிருந்து 3 கி.மீ., சாத்தனூர் என்ற ஊரிலிருந்து சுமார் 3 கி.மீ.
ஆலய முகவரி அருள்மிகு ஆதித்தேஸ்வரர் திருக்கோவில்
பேராவூர்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 612203

ஒரு கால பூஜை மட்டும் (காலை 9 மணி முதல் 10 மணி வரை) நடைபெறுகிறது.

பேராவூர் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 2-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

ஆரூர் மூலட்டானம் ஆனைக்காவும்	
ஆக்கூரில் தான்தோன்றி மாடம் ஆவூர்
பேரூர் பிரமபுரம் பேராவூரும்
பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங்
கூரார் குறுக்கை வீரட்டானம் முங்
கோட்டூர் குடமூக்குக் கோழம்பமும்
காரார் கழுக்குன்றும் கானப்பேரும்
கயிலாய நாதனையே காணலாமே.

பொழிப்புரை :

ஆரூர் மூலட்டானம், ஆனைக்கா, ஆக்கூரில் உள்ள தான் தோன்றி மாடம், ஆவூர், பேரூர், பிரமபுரம், பேராவூர், பெருந்துறை, காம்பீலி, பிடவூர், எல்லோரும் விரும்பும் சிறப்பு மிக்க குறுக்கை வீரட்டம், கோட்டூர், குடமூக்கு, கோழம்பம், மேகங்கள் தங்கும் கழுக்குன்றம், கானப்பேரூர் இவற்றில் கயிலாய நாதனைக் காணலாம்.

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 4-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இத்திருத்தாண்டகம் "ஊர்" என்று முடியம் தலங்களை வகுத்து அருளிச் செய்தது.

பிறையூருஞ் சடைமுடி எம்பெருமான் ஆரூர்	
பெரும்பற்றப் புலியூரும் பேராவூரும்
நறையூரும் நல்லூரும் நல்லாற்றூரும்
நாலூரும் சேற்றூரும் நாரையூரும்
உறையூரும் ஓத்தூரும் ஊற்றத்தூரும்
அளப்பூர் ஓமாம்புலியூர் ஒற்றியூரும்
துறையூரும் துவையூரும் தோழூர் தானுந்
துடையூரும் தொழ இடர்கள் தொடராவன்றே.

பொழிப்புரை :

பிறை தவழும் சடைமுடிச் சிவபெருமானுடைய ஆரூர், பெரும்பற்றப்புலியூர், பேராவூர், நறையூர், நல்லூர், நல்லாற்றூர், நாலூர், சேற்றூர், நாரையூர், உறையூர், ஓத்தூர், ஊற்றத்தூர், அளப்பூர், ஓமாம்புலியூர், ஒற்றியூர், துறையூர், துவையூர், தோழூர், துடையூர் என்னுமிவற்றைத் தொழத் துன்பங்கள் தொடர மாட்டா.

தல வரலாறு: அம்பிகை ஓரு சாபத்தால் பசுவாக பூலோகத்தில் அலைந்து, திரிந்து, மகாவிஷ்னுவால் பாதுகாக்கப்பட்டு, திருவாவடுதுறையில் சாபம் நீங்கப் பெற்று, திருமணஞ்சேரியில் மீண்டும் சிவபெருமானை மணந்து கொண்ட புராண நிகழ்ச்சிகள் மயிலாடுதுறையை அடுத்துள்ள பல தலங்களுடன் தொடர்பு கொண்டுள்ளன. அவற்றில் பேராவூராகிய இத்தலமும் ஒன்று என்பது இத்தலத்தின் சிறப்பு. இத்தலத்தில் தான் சிவபெருமான் பெரியதோர் எருதின் வடிவம் கொண்டு பசு வடிவிலிருந்த அம்பிகையைப் பின்தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது.

இத்தலத்திற்கு அருகிலுள்ள சாத்தனூரில் தான் பசுக்களை மேய்த்துக் கொண்டு வந்த மூலன் என்ற இடையன் உயிர் பிரிய, பசுக்கள் அவன் உடலைச் சுற்றி நின்று அழுது கொண்டிருந்தது. கைலாயத்தில் திருநந்திதேவர் அருள் பெற்ற சிவயோகி ஒருவர் காவிரியாற்றின் கரைகளிலுள்ள திருப்பதிகளை தரிசித்துக் கொண்டு வரும் வேளையில் சாத்தனூரை அடைந்தார். பசுக்கள் கூட்டம் ஒன்று நின்று அழுவதைக் கண்ட சிவயோகியார், கூடு விட்டுக் கூடு பாயும் தனது சக்தியைப் பயன்படுத்தி இடையன் உடலில் புகுந்தார். திருமூலராக அவர் மாறி 3000 ஆண்டுகள் வாழ்ந்து ஆண்டிற்கு ஒன்றாக ஒரு பாடல் இயற்றினார். அதுவே திருமந்திரம் என்ற நூலாகும்.

இத்தலத்தில் இறைவன் ஆதித்தேஸ்வரர் என்று பெயருடன் எழுந்தருளியுள்ளார். அம்பிகையின் திருநாமம் ஞானாம்பிகை. ஆதித்ய சோழனால் கட்டப்பட்ட இக்கோவில் ஒரு கற்றளியாகும். மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். கோயிலின் பெயர் ஆதிச்தேச்சுரம் எனப்படும். கோவிலில் தற்போது திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டு பாதியில் நின்று உள்ளது. ஆலயத்திலுள்ள பரிவார மூர்த்தங்கள் யாவும் பாலாலயம் செய்யப்பட்டு, கோவிலுக்கு வெளியே ஒரு கூரைக் கொட்டகையில் வைக்கப்பட்டுள்ளன. மூலவர் ஆதித்தேஸ்வரர் மட்டும் கருவறையில் உள்ளார். விநாயகர் சந்நிதி, முருகர் சந்நிதி, கஜலட்சுமி சந்நிதி, சண்டிகேஸ்வரர் சந்நிதி ஆகியவை புதிதாக கட்டப்பட்டு உள்ளே மூர்த்தங்கள் இன்றி காட்சி அளிக்கின்றன. ஆலயத்தின் பின்புற மதிற்சுவர் மட்டுமே உள்ளது. மற்ற மூன்று பக்கமும் மதிற்சுவர் இல்லாமல் ஆலயம் காட்சி அளிக்கிறது. பூஜைகளும் நின்று விட்டன. திருப்பணி வேலைகள் யாவும் தடங்கலின்றி தடைபெற்று கும்பாபிஷேகம் நடை பெறும் நல்ல நாள் விரைவில் வர யாவரும் இறைவனை வணங்கி பிரார்த்திப்போம்.

இத்தலத்திலுள்ள ஆதித்தேஸ்வரர் கோவிலின் அருகே உள்ள குளத்தின் வடகரையில் ஶ்ரீகாமாட்சியம்மன் கோவில் உள்ளது. மாரியம்மன் கோவில் என்றும் இதைக் கூறுவார்கள். இக்கோவில் சுற்று வட்டாரத்தில் மிகவும் புகழ் பெற்ற கோவிலாக உள்ளது.

பேராவூர் ஆதித்தேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள் (10-9-2013 அன்று எடுக்கப்பட்டது)

ஆலயத்தின் முகப்புத் தோற்றம்

கூரைக் கொட்டகையில் மூர்த்தங்கள்

மூலவர் ஆதித்தேஸ்வரர்

மூலவர் விமானம் - கற்றளி கோவில்

விநாயகர் சந்நிதி

முருகர் சந்நிதி

கஜலட்சுமி சந்நிதி

சண்டிகேஸ்வரர் சந்நிதி, பின்புறம் மூலவர் விமானம்