தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

ஆதிகயிலாயநாதர் திருக்கோவில், பெருந்துறை


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்பெருந்துறை (வடக்கூர், வடக்களூர்)
இறைவன் பெயர்ஆதிகயிலாசநாதர்
இறைவி பெயர்சிவகாமியம்மை
பதிகம்அப்பர் (6-70-2, 6-71-11)
எப்படிப் போவது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி என்ற ஊரிலிருந்து மீமீசல் செல்லும் சாலை வழியில், அறந்தாங்கியில் இருந்து 14 கி.மீ. தொலைவில் ஆவுடையார்கோவில் உள்ளது. அதன் அருகே உள்ள வடக்கூர் என்று பகுதியில் இக்கோவில் உள்ளது. இன்றைய நாளில் வடக்கூர் என்று அறியப்படும் இப்பகுதி தான் தேவாரம் பாடப் பெற்ற நாட்களில் பெருந்துறை என்று வழங்கப்பெற்றது.. வடக்கூரிலுள்ள ஆதிகயிலாசநாதர் கோவில் தான் தேவார வைப்புத் தலம். மாணிக்கவாசகர் ஆவுடையார்கோவிலைக் கட்டிய பிறகு, இக்கோவில் இருக்கும் இடம் திருப்பெருந்துறை என்று பெயர் பெற்று, வடக்கூர் திருப்பெருந்துறை ஊரின் ஒரு பகுதியாக மாறி விட்டது.
ஆலய முகவரி அருள்மிகு ஆதிகயிலாசநாதர் திருக்கோவில்
வடக்கூர்
ஆவுடையார்கோவில் அஞ்சல்
புதுக்கோட்டை மாவட்டம்
PIN - 614618

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

பெருந்துறை வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 2-வது பாடலிலும், 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 11-வது பாடலிலும், இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

ஆரூர் மூலட்டானம் ஆனைக்காவும்		(6-70-2)	
ஆக்கூரில் தான்தோன்றிமாடம் ஆவூர்
பேரூர் பிரமபுரம் பேராவூரும்
பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங்
கூரார் குறுக்கை வீரட்டானமும்
கோட்டூர் குடமூக்குக் கோழம்பமும்
காரார் கழுக்குன்றும் கானப்பேரும்
கயிலாய நாதனையே காணலாமே.

பொழிப்புரை :

ஆரூர் மூலட்டானம், ஆனைக்கா, ஆக்கூரில் உள்ள தான் தோன்றி மாடம், ஆவூர், பேரூர், பிரமபுரம், பேராவூர், பெருந்துறை, காம்பீலி, பிடவூர், எல்லோரும் விரும்பும் சிறப்பு மிக்க குறுக்கை வீரட்டம், கோட்டூர், குடமூக்கு, கோழம்பம், மேகங்கள் தங்கும் கழுக்குன்றம், கானப்பேரூர் இவற்றில் கயிலாய நாதனைக் காணலாம்.

கயிலாய மலையெடுத்தான் கரங்களோடு	(6-71-11)
சிரங்களுரம் நெரியக்கால் விரலாற் செற்றோன்
பயில்வாய பராய்த்துறை தென் பாலைத்துறை
பண்டெழுவர் தவத்துறை வெண்டுறை பைம்பொழில்
குயிலாலந்துறை சோற்றுத்துறை பூந்துறை
பெருந்துறையும் குரங்காடுதுறையி னோடு
மயிலாடுதுறை கடம்பந்துறை ஆவடுதுறை
மற்றும் துறை அனைத்தும் வணங்குவோமே.

இத்திருத்தாண்டகம் "துறை" என வருவனவற்றை வகுத்து அருளிச்செய்தது

பொழிப்புரை :

கயிலாய மலையை எடுத்த இராவணனுடைய கரங்களும் சிரங்களும் வலிமை சிதையும் வண்ணம் தன் கால் விரலால் அழிவுண்டாக்கிய சிவபெருமான் பயின்றுறையும் பராய்த்துறை, தென்பாலைத்துறை, எழுமுனிவர் பண்டுதவம் செய்த தவத்துறை, வெண்டுறை, பசிய சோலையிடத்துக் குயில்கள் வாழும் ஆலந்துறை, சோற்றுத்துறை, பூந்துறை, பெருந்துறை, குரங்காடுதுறை, மயிலாடுதுறை, கடம்பந்துறை, ஆவடுதுறை ஆகியவற்றையும் துறை என்னும் பெயர் தாங்கும் மற்றைத் திருத்தலங்களையும் வணங்குவோம் .

கோவில் அமைப்பு: ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. 3 நிலை இராஜகோபுரம் 1990-ம் ஆண்டு ஜூன் மாதம் திருக்குட நீராட்டு விழா நடைபெற்ற போது அமைக்கப்பட்டது. கோபுர வாயில் கடந்து உள்ளே நுழைந்தால் நேரே முன் மண்டபம் உள்ளது. அதைக் கடந்து சென்றால் அர்த்த மண்டபம் தாண்டி கருவறையில் ஆதிகயிலாயநாதர் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கருவறைச் சுற்றில் விநாயகர். சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோரின் சந்நிதிகள் முற்றிலும் புதிதாக 1990-ன் ஆண்டு கும்பாபிஷேகத்தின் போது திருப்பணி செய்யப்பட்டது. மகாவிஷணு ஶ்ரீதேவி, பூதேவியுடன் வெளிப் பிராகாரத்தில் மரத்தடியில் எழுந்தருளியுள்ளார். அம்பாள் சிவகாமியம்மையின் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது.

மாணிக்கவாசகருக்கு முதல் உபதேசக்காட்சி ஆதிகயிலாசநாதர் கோவில் உள்ள இங்கு தான் நடந்தது. இக்கோயில் மாணிக்கவாசகருக்கு முன்பிருந்தே உள்ளது என்பது இத்தலத்தின் சிறப்பாகும். தற்போது ஆதிகயிலாயநாதர் கோயில் உள்ள இந்த இடத்தை, வடக்கூர் (வடக்களூர்) என்றும், ஆவுடையார் கோயில் உள்ள இடத்தை தெற்கூர் என்றும் சொல்கின்றனர். பராசரர், புலஸ்தியர், அகத்தியர் முதலிய மகரிஷிகள் இங்கு இறைவனை வழிபட்டுள்ளதாகச் சொல்கின்றனர்.

ஆதிகைலாயநாதர் கோவிலில் இருந்து சற்று தொலைவிலுள்ள ஆத்மநாதசுவாமி கோவில் இருக்குமிடம் தான் இன்று திருப்பெருந்துறை என்று அழைக்கப்படுகிறது. ஆத்மநாதசுவாமி திருக்கோவில் மாணிக்கவாசகரால் கட்டப்பெற்ற பெருமையுடையது.

பெருந்துறை ஆதிகயிலாசநாதர் ஆலயம் புகைப்படங்கள்

3 நிலை இராஜகோபுரம்

முன் மண்டபம்

மரத்தடியில் ஶ்ரீதேவி, பூதேவி சமேத மகாவிஷ்ணு

மூலவர் கருவறை விமானம்

ஆலயத்தின் உட்புறத் தோற்றம்

இறைவி கருவறை விமானம்

மூலவர் ஆதிகைலாசநாதர்

தூணில் அஷ்டபுஜ காளி சிற்பம்

வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர்