தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், பிடவூர்


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்பிடவூர் (இன்றைய நாளில் திருப்பட்டூர் என்று அழைக்கப்படுகிறது)
இறைவன் பெயர்பிரம்மபுரீஸ்வரர்
இறைவி பெயர்பிரம்மநாயகி, பிரம்ம சம்பத்கவுரி
பதிகம்அப்பர் (6-7-6, 6-70-2), சுந்தரர் (7-96-6)
எப்படிப் போவது திருச்சி - சென்னை தேசீய நெடுஞ்சாலையில் சமயபுரம் தாண்டி மேலும் 4 கி.மீ. சென்றால் சிறுகனூர் என்று ஊர் வரும். அங்கிருந்து திருப்பட்டூர் செல்லும் சாலை இடதுபுறம் பிரிகிறது. அதில் சுமார் 4 கி.மீ. சென்றால் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தை அடையலாம்.
ஆலய முகவரி அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்
திருப்பட்டூர்
திருப்பட்டூர் அஞ்சல்
வழி சிறுகானூர்
திருச்சி மாவட்டம்
PIN - 621105

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7-30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

பிடவூர் (திருப்பட்டூர்) வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகங்கள்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 7-வது பதிகத்தில் 6-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் திருஅதிகை வீரட்டானம் தலத்திற்குரிய பதிகமாகும்.

தெய்வப் புனற்கெடில வீரட்டமும்
செழுந்தண் பிடவூரும் சென்று நின்று
பவ்வந் திரியும் பருப்பதமும்
பறியலூர் வீரட்டம் பாவநாசம்
மவ்வந் திரையு மணிமுத்தமும்
மறைக்காடும் வாய்மூர் வலஞ்சுழியும்
கவ்வை வரிவண்டு பண்ணே பாடும்
கழிப்பாலை தம்முடைய காப்புக்களே.

பொழிப்புரை :

கெடிலக் கரையிலுள்ள அதிகை வீரட்டம், செழிப்பை உடைய குளிர்ந்த பிடவூர், கடல் வெள்ளம் அணுகும் சீசைலம், பறியலூர் வீரட்டம், பாவநாசம், இன்னிசை முழங்கும் மணிமுத்தம், மறைக்காடு, வாய்மூர், வலஞ்சுழி, ஆரவாரத்தை உடைய வண்டுகள் பண்பாடும் கழிப்பாலை என்பன சிவபெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலங்களாம் .

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 2-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

ஆரூர் மூலட்டானம் ஆனைக்காவும்
ஆக்கூரில் தான்தோன்றிமாடம் ஆவூர்
பேரூர் பிரமபுரம் பேராவூரும்
பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங்
கூரார் குறுக்கைவீரட்டானமும்
கோட்டூர் குடமூக்குக் கோழம்பமும்
காரார் கழுக்குன்றும் கானப்பேரும்
கயிலாய நாதனையே காணலாமே.

பொழிப்புரை :

ஆரூர் மூலட்டானம், ஆனைக்கா, ஆக்கூரில் உள்ள தான்தோன்றிமாடம், ஆவூர், பேரூர், பிரமபுரம், பேராவூர், பெருந்துறை, காம்பீலி, பிடவூர், எல்லோரும் விரும்பும் சிறப்பு மிக்க குறுக்கை வீரட்டம், கோட்டூர், குடமூக்கு, கோழம்பம், மேகங்கள் தங்கும் கழுக்குன்றம், கானப்பேரூர் இவற்றில் கயிலாய நாதனைக் காணலாம் .

சுந்தரரின் 7-ம் திருமுறையில் 96-வது பதிகத்தில் 6-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் திருவாரூர் தலத்திற்குரிய பதிகமாகும்.

அம்மானே ஆகம சீலர்க்கு அருள்நல்கும்
பெம்மானே பேரருளாளன் பிடவூரன்
தம்மானே தண்டமிழ் நூற்புல வாணர்க்கோர்
அம்மானே பரவையுண்மண்டளி அம்மானே

பொழிப்புரை :

யாவர்க்கும் தலைவனே, ஆகம ஒழுக்கத்தை உடையவர்கட்கு உனது திருவருளைத் தருகின்ற பெரியோனே, பிடவூரில் உறையும் ரருளாளனுக்குத் தலைவனே, தண்ணிய தமிழால் இயன்ற நூல்களை வல்ல புலமை வாழ்க்கை உடையவர்க்கு, ஒப்பற்ற முதல்வனே, திருப்பரவையுண்மண்டளியில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனே, உன்னை மறவாது நினைக்கின்ற அடியார்களை அஞ்சேல் என்று சொல்லிக் காத்தருள்.

தல வரலாறு: இவ்வுலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்ற பிரம்மா, சிவனைப் போலவே தனக்கும் ஐந்து தலைகள் இருப்பதால், தன்னையும், சிவனையும் ஒன்றாகக் கருதி ஆணவம் கொண்டார். பிரம்மாவிற்குப் பாடம் புகட்ட விரும்பிய சிவன், பிஇரிம்மாவின் 5 தலைகளில் ஒன்றைக் கொய்து விட்டார். பிரம்மாவின் படைப்புத்தொழிலையும் சிவன் பறித்து விட்டார். நான்முகனான பிரம்மா, இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார். பூலோகத்தில் அங்கங்கே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து தன்னை வழிபடுமாறும், தகுந்த நேரமும், இடமும் வரும் போது சாப விமோசனம் தருவதாகவும் சிவபெருமான் பிரம்மாவிற்கு கூறினார். பிடவூர் என்கிற திருப்பட்டூர் தலத்தில் குடிகொண்டிருக்கும் தன்னை 12 லிங்க வடிவில் (துவாதசலிங்கம்) வணங்கி, சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்தார். மேலும், பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி, மீண்டும் படைப்புத்தொழிலை அருள்வதாகக் கூறினார். பிரம்மனும் நாடெங்கிலும் சுற்றித் திரிந்து அங்கங்கே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின்பு பிடவூராகிய இத்தலம் வந்து 12 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டார், பிரம்மனின் வழிபாட்டில் மகிழ்ந்து இத்தலத்தில் சாபவிமோசனம் அளித்து மீண்டும் பிரம்மாவிற்கு படைப்புத் தொழில் செய்யும் ஆற்றலையும் வழங்கினார். பிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது. சிவனை மகிழ்வித்த பிரம்மா வழிபடுகிறவர்களின் தீய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றும் வரத்தையும் சிவனிடம் இருந்து பெற்றார். அன்று முதல் இந்த பிரம்மா தன்னை வழிபடும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றி அருள் செய்கிறார்.

கோவில் அமைப்பு: இவ்வாலயம் சுமார் 5 ஏக்கர் நிரப்பலளவில் கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரத்துடனும், இரணடு பிராகாரங்களும் கொண்டு அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்து வேத மண்டபம், நாத மண்டபம் ஆகியவை கடந்ததும் வரும் அர்த்த மண்டபத்தை அடுத்து உள்ள கருவறையில் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக இங்கு அருள் பாலிக்கிறார். பிராகார வலம் வரும் போது, சிவன் சந்நிதி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சந்நிதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் என வரிசையாகத் தரிசிக்கலாம். பிரம்மன் வழிபட்ட சோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது. பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதி பிராகாரத்தின் தெற்குப் பகுதியில் உள்ளது. இதை உறுதிப் படுத்தும் வகையில் வடக்குப் பிராகாரத்தில் சண்டிகேசுவரர் சந்நிதி அருகே பாதாள லிங்கம் சந்நிதி உள்ளது. சித்தர்கள் வாழ்ந்த தலங்களில் மட்டுமே பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி இருக்கும் என்பது வழக்கத்தில் காணப்படும் ஒன்று.இத்தலத்திலுள்ள காலபைரவர் இப்பகுதி மக்களுக்கு நோய் தீர்க்கும் வைத்தியரைப் போல உதவுகிறார். கிராம மக்களுக்கு எவ்வித நோய் ஏற்பட்டாலும், காலபைவர் சந்நிதி விபூதி அதை குணப்படுத்தி விடுவதாக இப்பகுதி மக்கள் இன்றுர் உறுதியாக நம்கின்றனர்.

வியாக்ரபாதரும் இத்தலத்தில் இறைவன் வழிபட்டுள்ளார். அம்பாள் பிரம்மநாயகியின் சந்நிதி சுவாமி சந்நிதிக்கு இடதுபுறம் தனிக்கோவிலாக அமைந்துள்ளது. அம்பாள் கோவில் அடுத்துள்ள வடக்குப் பிராகாரத்தில் கைலாசநாதர் கோவில் கல்தேர் வடிவில் அமைந்துள்ளது. எதிரே ஒரே கல்லால் ஆன பெரிய நந்தி உள்ளது. இந்த கைலாசநாதர் கோவிலைச் சுற்றி பல சிவலிங்க சந்நிதிகள் உள்ளன.

இத்தலத்தில் பங்குனி மாதத்தில் 14, 15, 16 தேதிகளில் சூரியபூஜை நிகழ்கிறது. இவ்வாலயத்தில் மற்றொரு சிறப்பும் உள்ளது. கருவறைக்கும், ஆலயத்தின் முகப்பு வாயிலுக்கும் இடையே சுமார் 100 மீட்டர் இடைவெளி உள்ளது. இடையில் 7 நிலைப்படிகள் உள்ளன. இந்த 7 வாசல்களையும் கடந்து இறைவன் கருவறையில் எப்போதும் இயற்கை வெளிச்சம் காணப்படுவது மிக அரிதான காட்சியாகும். எந்த விளக்கொளியும் இல்லாமலலேயே சிவலிங்கத்தைப் பளிச்சென்று தரிசிக்கும் வாய்ப்பு இக்கோவிலில் மட்டுமே உண்டு என்பது தனிச்சிறப்பு.

இத்தலம் ஒரு சிவஸ்தலமாக இருந்தாலும், இங்குள்ள பிரம்மா சந்நிதி தான் மிகவும் புகழ் பெற்றது. இத்தலம் ஒரு குரு பரிகாரத் தலம். மூலவருக்கு வடபுறத்தில் தனிச் சன்னதியில் ஆறடி உயரத்தில் தியான நிலையில் தாமரை மீது பத்மாசனக் கோலத்தில் அமர்ந்த நிலையில், அட்சமாலை மற்றும் கமண்டலத்துடன் அருள்பாலிக்கிறார் பிரம்மா. இந்தியாவிலேயே மிகப் பெரிய பிரம்மா இவர்தான். குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது. மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். குருபெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும். ஏழாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தோருக்கான பரிகார தலமாகவும் இக்கோயில் உள்ளது. திருமணத்தடை, பிரிந்த தம்பதிகள் சேருதல், தொழில், வியாபார, பணி விருத்திக்காக பிரம்மனிடம் வேண்டலாம். மிக முக்கியமான பிரார்த்தனை புத்திரப்பேறு வேண்டுதல் தான். ஏனெனில், பிரம்மன் தானே படைத்தாக வேண்டும். அவ்வகையில் மிகச்சிறந்த புத்திரப்பேறுக்கான பிரார்த்தனை தலம் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்.

பிடவூர் (திருப்பட்டூர்) பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

ஆலயத்தின் 5 நிலை கோபுரம்

கோபுரத்தில் சிற்பம்

பிரம்மா பூஜித்த லிங்கங்கள் இருப்பிடம்

சுவாமி சந்நிதி முன் கொடிமரம், பலிபீடம், நந்தி

கைலாசநாதர் கோவில்

கைலாசநாதர் கோவில் நந்தி

கைலாசநாதர் கோவில் சிற்பங்கள்

கைலாசநாதர் கோவில், மற்ற சிவலிங்க சந்நிதிகள் இருக்குமிடம்

அம்பாள் சந்நிதி செல்லும் வழி