தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

பாவநாசர் திருக்கோவில், பாபநாசம் (பொதியல், பொதியன்மலை)


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்பாபநாசம் (பொதியல், பொதியன்மலை என்ற வைப்புத்தல பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு)
இறைவன் பெயர்பாவநாசர், பாபவிநாசகர்
இறைவி பெயர்உலகநாயகி, லோகநாயகி
பதிகம்அப்பர் (6-7-6)
எப்படிப் போவது திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம் வழியாக 60 கி.மீ. தொலைவில் பாபநாசம் திருத்தலம் அமைந்துள்ளது. திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், தென்காசி முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு பாவநாசர் திருக்கோவில்
பாபநாசம்
வி.கே.புரம் அஞ்சல்
அம்பாசமுத்திரம் வட்டம்
திருநெல்வேலி மாவட்டம்
PIN - 627425

இத்திருக்கோவில் காலை 6-30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
Papanasam route map
அம்பாசமுத்திரம் மற்றும் பாபாநாசம் சிவன் கோவில் இருப்பிடத்தைக் காட்டும் வரைபடம்
Map by: Google

பாபநாசம் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரிம் 6-ம் திருமுறையில் 7-வது பதிகத்தில் 6-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் திருவதிகை வீரட்டம் தலத்திற்குரிய பதிகமாகும்.

தெய்வப் புனற்கெடில வீரட்டமும்	6-7-6
செழுந்தண் பிடவூரும் சென்று நின்று
பவ்வந் திரியும் பருப்பதமும்
பறியலூர் வீரட்டம் பாவநாசம்
மவ்வந் திரையும் மணிமுத்தமும்
மறைக்காடும் வாய்மூர் வலஞ்சுழியும்
கவ்வை வரிவண்டு பண்ணே பாடும்
கழிப்பாலை தம்முடைய காப்புக்களே.

பொழிப்புரை :

கெடிலக் கரையிலுள்ள அதிகை வீரட்டம், செழிப்பை உடைய குளிர்ந்த பிடவூர், கடல் வெள்ளம் அணுகும் சீசைலம், பறியலூர் வீரட்டம், பாவநாசம், இன்னிசை முழங்கும் மணிமுத்தம், மறைக்காடு, வாய்மூர், வலஞ்சுழி, ஆரவாரத்தை உடைய வண்டுகள் பண்பாடும் கழிப்பாலை என்பன சிவபெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலங்களாம்.

தல வரலாறு: சிவபெருமானுடைய திருக்கல்யாணத்தைத் தரிசிக்க கயிலாசம் சென்ற தேவர்கள், முனிவர்கள் ஆகியோர் கூட்டத்தைத் தாங்கமாட்டாது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது.அதைச் சமன் செய்யுமாறு திருவுளங்கொண்டு அகத்திய முனிவரை அழைத்து தென் திசைக்கு ஏகும்படிச் சிவபெருமான் கட்டளையித்தார், அதன்படி தென் திசையிலுள்ள பொதிய மலைக்கு எழுந்தருளீய அகத்தியருக்கு கையிலையிலிருந்த தம்முடைய திருக்கல்யாணக் கோலத்தைக் காட்சி கொடுத்தருளினார் தமிழ் முனிவரான அகத்தியருக்கு அம்மையும்-அப்பனும் திருக்காட்சி கொடுத்த இடம் பாபநாசம் என்னும் இத்தலத்தில் தான் என்பது இதின் சிறப்பாகும், பாபநாசத்திற்கு மேற்கே ஒரு மைல் தூரத்தில் உள்ள நீர்வீழ்ச்சியும் இதனால் 'கல்யாண தீர்த்தம்' என்று பெயர் பெற்றது. இங்கு அகத்திய முனிவருக்கு தனிக்கோயில் உள்ளது. அகத்தியர் கோயில் உள்ள இடம் பழைய பாவநாசம் என்றழைக்கப்படுகிறது. மலையுச்சியில் உற்பத்தியாகும் தாமிரபரணி சமபூமியில் இறங்குமிடமே பழைய பாவநாசமாகும். ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் கோயிலில் நடைபெறும் திருக்கல்யாணத்தின் போது அகத்திய முனிவர் அவரது கோயிலில் இருந்து அழைத்து வரப்படுவார். அவர் வந்து சேர்ந்தபிறகு தான் அம்மையப்பர் திருக்கல்யாணம் நடைபெறும்.

அகத்திய முனிவரின் முதல் சீடர் உரோமச முனிவர் பிறவிப் பெரும் பயன் அடைவதைப் பற்றி அகத்தியரிடம் கேட்க, அவர் பாபநாசம் தொடங்கி தாமிரபரணி ஆறு செல்லும் பாதையில் மலர்கள் ஒதுங்கும் இடங்களில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபடுமாறு கூறினார். அவ்வாறு பூக்கள் சேர்ந்த இடங்களில் உள்ள சிவஸ்தலங்கள் நவ கைலாயத் தலங்கள் என்றும் திருநெல்வேலியைச் சுற்றி உள்ள நவக்கிரக தலங்கள் என்றும் பெயர் பெற்றன. அவற்றுள் பாபாநாசம் சூரியனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது.

கோவில் அமைப்பு: ஆலயம் 7 நிலை கொண்ட இராஜகோபுரத்துடனும், இரண்டு பிராகாரங்களும் கொண்டு விளங்குகிறது. சுவாமி பாபவிநாசர் சுயம்பு லிங்க மூர்த்தியாக கிழக்கு நோக்கியும், அம்பாள் லோகநாயகியும் கிழக்கு நோக்கியும் காட்சி அளிக்கின்றனர். தல விருட்சம் களாச்செடி இறைவன் சந்நிதிக்குப் பின்புறம் முதற் பிராகாரத்தில் ஒரு கொடி போன்று பரந்து வளர்ந்திருக்கிறது. உள் பிராகாரத்தில் நடராஜர். அகத்திய முனிவர், சுரதேவர், 63 நாயன்மார்கள், கல்யாண சுந்தரர், உலகம்மை, முக்களா லிங்கம் போன்ற சந்நிதிகள் உள்ளன. இறைவன் கருவறையைச் சுற்றிலும் அருமையான வேலைப்பாடுடன் கூடிய காளி, ஊர்த்துவ தாண்டவர், பிட்சாடனர், நிருத்த கணபதி, திரிபுரசம்ஹாரம், மகாவிஷ்ணு, ஏகபாதமூர்த்தி முதலிய சிற்பங்கள் காணப்படுகின்றன.

திருப்புகழ் தலம்: இத்தல முருகப் பெருமான் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றவர். நிருப்புகழில் இரு பாடல்கள் உள்ளன. இங்கு முருகர் ஒரு திருமுகம், நான்கு கரங்களுடன் வள்ளி தெய்வானையுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

இத்தலத்திற்கு அருகிலுள்ள விக்ரமசிங்கபுரத்தில் "நமசிவாயக் கவிராயர்" என்பவர் (ஸ்ரீமத் சிவஞான சுவாமிகளின் சிறிய தந்தையார்) வாழ்ந்து வந்தார். இவர் அம்பாள் உலகநாயகி மீது அளவிலா பக்தி கொண்டு வாழ்ந்து வந்தார். இவர் தினந்தோறும் அர்த்தசாமத்தில் பாவநாசத் திருக்கோயிலுக்குச் சென்று அம்பிகையைத் தொழுதுவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது பரவசத்தில் பக்திப் பாடல்களைப் பாடிகொண்டே வருவார். ஒரு நாளிரவு இவர் பாடியவாறே வீடு திரும்பும்போது அம்பாள் இவர் பாடல்களைக் கேட்டவாறே இவருக்குத் தெரியாமல் பின்தொடர்ந்தார். கவிராயர் தரித்திருந்த தாம்பூலத்தின் எச்சில் அவர் பாடி வரும்போது தெரித்து அம்பிகையின் மீது பட்டது. அக்கோலத்துடனேயே அம்பிகையும் கோயிலுக்கு எழுந்தருளினாள். மறுநாள் காலை அர்ச்சகர் அம்பாள் ஆடையில் படிந்திருந்த எச்சில் திவலைகளைக் கண்டு மனம் வருந்தி, மன்னனிடம் முறையிட, அரசனும் பிராயச்சித்தம் செய்யப் பணித்து, இப்பாதகச் செயலைச் செய்தவரைத் தண்டிப்பதாகக் கூறினான். அன்றிரவு மன்னன் கனவில் அம்பிகை தோன்றி, நடந்ததைக் கூறினாள். விழித்த மன்னன் மறுநாள் காலை கவிராயரை அழைத்து வரச்செய்து, அவருடைய பக்தியை அளவிட எண்ணி, அம்பாளின் கரத்தில் பூச்செண்டு ஒன்றை வைத்துப் பொன் கம்பிகளால் சுற்றிக்கட்டி, அப்பூச்செண்டு வருமாறு பாடக் கவிராயரைப் பணித்தான். அவரும் கலித்துறையில் அந்தாதி யொன்றை அமைத்துப் பாடினார். அம்பிகையின் கரத்தில் கட்டப்பட்டிருந்த பொன் கம்பிகள் கவிக்கொருச் சுற்றாக அறுந்து கவிராயரின் பெருமையை வெளிப்படுத்தியது.

தலத்தின் சிறப்புகள்:

பாபநாசம், (பொதியல், பொதியன்மலை) பாவநாசர் ஆலயம் புகைப்படங்கள்

ஆலயத்தின் இராஜகோபுரம்

ஆலயத்தின் இராஜகோபுரம் உள்ளிருந்து தோற்றம்

கோபுர வாயில் கடந்து ஆலய தோற்றம்

நந்தியெம் பெருமான்

நந்தியெம் பெருமான் மற்றொரு தோற்றம்

ஆலயத்தின் உள் தோற்றம்