தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

சோமேஸ்வரர் திருக்கோவில், பழையாறை


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்பழையாறை
இறைவன் பெயர்சோமேஸ்வரர், சோமநாதசுவாமி
இறைவி பெயர்சோமகமலாம்பிகை.
பதிகம்சம்பந்தர் (2-39-5), திருநாவுக்கரசர் (6-13-1)
எப்படிப் போவது கும்பகோணத்திற்கு அருகிலுள்ள பட்டீஸ்வரம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து ஆவூர் செல்லும் வழியில் திருமலைராயன் ஆற்றுப் பாலம் கடந்து பின் முடிகொண்டான் ஆற்றுப் பாலத்திற்கு சற்று முன்னாலுள்ள தேனாம்படுகை என்ற இடத்தில் இடதுபறம் திரும்பி சுமார் 2 கி.மி. சென்றால் பழையாறை சோமேஸ்வரர் கோவில் வந்து அடையலாம்
ஆலய முகவரி அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோவில்
பழையாறை
பட்டீஸ்வரம் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612703

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை திறந்திருக்கும். அருகில் மெய்காப்பாளர் வீடு இருப்பதால் எந்நேரமும் தரிசிக்கலாம்..

பழையாறை வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

சம்பந்தரின் 2-ம் திருமுறையில் 39-வது பதிகத்தில் 5-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. பதிகத்தில் இத்தலம் "ஆறை" என்று குறிப்படப்பட்டுள்ளது.

ஆறை வடமாகறல் அம்பர் ஐயாறு		2-39-5
அணி ஆர் பெருவேளுர் விளமர் தெங்கூர்
சேறை துலை புகலூர் அகலாது
இவை காதலித்தான் அவன் சேர்பதியே

பொழிப்புரை :

சிவபிரான் காதலித்து உறையும் பதிகள் பழையாறை, மாகறல், அம்பர், ஐயாறு, பெருவேளுர், விளமர், தெங்கூர், திருச்சேறை, புகலூர் முதலான தலங்களாகும். அவற்றைச் சென்று தொழுவீர்களாக .

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 13-வது பதிகத்தில் 1-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. பதிகத்தில் இத்தலம் "பழையாறு" என்று குறிப்படப்பட்டுள்ளது.

கொடிமாட நீள்தெருவு கூடல் கோட்டூர்	6-13-1
கொடுங்கோளூர் தண்வளவி கண்டியூரும்
நடமாடு நன்மருகல் வைகி நாளும்
நலமாகும் ஒற்றியூர் ஒற்றியாகப்
படுமாலை வண்டறையும் பழனம் பாசூர்
பழையாறும் பாற்குளமும் கைவிட்டு இந்நாள்
பொடியேறு மேனியராய்ப் பூதஞ் சூழப்
புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே.

பொழிப்புரை :

கொடிகள் கட்டப்பட்ட மாட வீடுகளைக் கொண்ட நீண்ட தெருக்களை உடைய கூடல், கோட்டூர், கொடுங்கோளூர், வளவி, கண்டியூர், கூத்து நிகழ்த்தும் சிறந்த மருகல் இவற்றில் நாளும் தங்கி அழகிய ஒற்றியூர் ஒற்றிவைக்கப்பட்டது என்னும் பொருளைத் தருதலில் அதனை நீங்கிச் சூரியன் மறையும் மாலையிலே வண்டுகள் ஒலிக்கும் பழனம், பாசூர், பழையாறு, பாற்குளம் என்னும் இவற்றை நீங்கி இன்று திருநீறு அணிந்த மேனியராய்ப் பூதங்கள் தம்மைச் சூழ்ந்துவர எங்களுடைய ஊர் புறம்பயம் என்று கூறி எம்பெருமானார் சென்று விட்டார் .

தேவாரம் பாடப் பெற்ற காலத்தில் பழையாறை நான்கு சிறு பிரிவுகளாக இருந்தது. வடதளி, மேற்றளி, கீழ்த்தளி மற்றும் தென்தளி ஆகிய பிரிவுகளாக இருந்த இந்தப் பழையாறையில் நான்கு சிவன் கோவில்களும் இருந்தன. வடதளியிலுள்ள தர்மபுரீஸ்வரர் திருக்கோவில் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம். மேற்றளியிலுள்ள கைலாசநாதர் திருக்கோவில் (ஆறை மேற்றளி), கீழ்த்தளியிலுள்ள சோமேஸ்வரர் திருக்கோவில் (பழையாறை), தென்தளியிலுள்ள பரசுநாதசுவாமி திருக்கோவில் (முழையூர்) ஆகிய மூன்றும் தேவார வைப்புத் தலங்களாகும்.

முடிகொண்டான் என்ற ஆற்றின் கரையில் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள பழையாறை முற்காலத்தில் பலவகையிலும் சிறப்புற்று விளங்கிய பதிகளுள் ஒன்றாகும். சோழ நாட்டு அரசுரிமையேற்கும் மன்னர்கள் முடிசூடிக் கொள்வதற்குரிய சிறந்த நகரங்களுள் பழையாறும் ஒன்றென்று சேக்கிழார் கூறுதலால் அதன் சிறப்பு நன்கு விளங்கும். சோழ குலத்தின் அரசமகளிர் வாழும் ஊராகவும் பழையாறை விளங்கியது. இராஜராஜ சோழனின் தமக்கை குந்தவை பிறந்து, வளர்ந்தது இத்தலத்தில் உள்ள சோழ மாளிகையில் தான்.

கோவில் அமைப்பு: சோழர் காலத்து சிற்பப் பணிக்கு எடுத்துக் காட்டாக இக்கோவில் வாயில் சுவரும், சுவரில் உள்ள சிற்ப வடிவங்களும் அமைந்துள்ளன. முற்றுப் பெறாத முதல் கோபுரத்தின் வழியாக கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் நேரே பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் அம்பாள் லோகாம்பிகை சந்நிதி தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது. இங்குள்ள படிக்கட்டுகளில் பிரகலாத சரித்திரச் சிற்பங்கள் செதுக்கபட்டிருகின்றன. இரண்டாவது கோபுரம் 3 நிலைகளை உடையது. இதன் வழியே உள்ளே சென்றால் நான் காண்பது முன் மண்டபம். பக்கவாட்டிலுள்ள படிக்கட்டுகள் மூலம் எறிச் சென்று முன் மண்டபம் தாண்டி அர்த்த மண்டபம், அதன்பின கருவறையில் மூலவர் சோமேஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது.

அருகில் அர்த்த மண்டபத்தில் உள்ள வீரதுர்க்கை சந்நிதியும் பார்க்க வேண்டிய ஒன்றாகும். ஒரே கல்லில் செய்யப்பட்ட இந்த வீரதுர்க்கையை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இராகு காலத்தில் விளக்கேற்றி வழிபட்டால் குடும்பத்தில் சகல செயகரியங்களும், செயபாக்கியமும் கிடைக்கும் எனபது ஐதீகம். இந்த வீரதுர்க்கை சந்நிதிக்கு அருகில் கடன் தீர்க்கும் கைலாசநாதர் லிங்கம் உள்ளது. இந்த கைலாசநாதரை 11 மாதம் அல்லது 11 வாரம் அல்லது 11 திங்கள், சனிக்கிழமைகளில் விளக்கேற்றி வழிபட்டால் கடன் சுமை, மனச்சுமை தீரும் என்பது ஐதீகம். மூலவர் கருவறைச் சுற்றில் நால்வர் சந்நிதி, வள்ளி தெய்வானையுடனுள்ள முருகர் சந்நிதி மற்றும் நவக்கிரக சந்நிதிகளும் உள்ளன. கோவிலுக்கு வெளியே சோம தீர்த்தம் உள்ளது.

பழையாறை சோமநாதசுவாமி ஆலயம் புகைப்படங்கள்

முற்றுப் பெறாத முதல் கோபுரம்

நந்தி மண்டபம் மற்றும் பலிபீடம்
பின்புறம் முற்றுப் பெறாத முதல் கோபுரம்

3 நிலை இரண்டாம் கோபுரம்

அம்பாள் சந்நிதி தனிக் கோவில்

சிவன் சந்நிதி விமானம்

இறைவன் சந்நிதி முன் மண்டபம்

சோமகமலாம்பிகை கோவில் - முன் தோற்றம்

பிரகலாத சரித்திரச் சிற்பங்கள்

வள்ளி தெய்வானையுடன் முருகர்