தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

முனிவாசகசுவாமி திருக்கோவில், நெய்தல்வாயில்


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்நெய்தல்வாயில், (இன்றைய நாளில் நெய்தவாசல் என்று பெயர்)
இறைவன் பெயர்முனிவாசகசுவாமி
இறைவி பெயர்மதுரபாஷிணி
பதிகம்அப்பர் (6-71-7)
எப்படிப் போவது திருவெண்காட்டிலிருந்து தேர்முக்கு உள்ள இடத்தில் இடப்புறம் திரும்பி அச்சாலையில் 3 கி.மீ. சென்றால் நெய்த வாசலை அடையலாம்..
ஆலய முகவரி அருள்மிகு முனிவாசகசுவாமி திருக்கோவில்
நெய்தவாசல், நெய்தவாசல் அஞ்சல்
வழி பூம்புகார்
சீர்காழி வட்டம்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 609110

இவ்வாலயத்தில் தினந்தோறும் காலையில் ஒரு கால பூஜை மட்டும் நடைபெறுகிறது. மாலை நேரத்தில் விளக்கு மட்டும் ஏற்றப்படுகிறது. சிவாச்சாரியாருக்கு முன் கூட்டியே தகவல் தெரிவித்து தரிசனம் செய்யலாம்..
ஶ்ரீனிவாச சிவாச்சாரியார், கைபேசி: 9443940864

நெய்தல்வாயில் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 7-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இப்பதிகம் அப்பர் பெருமான் திருப்பூந்துருத்தியில் தங்கி இருந்த போது அருளிச் செய்ததாகும்.

கடு வாயர்தமை நீக்கிஎன்னை ஆட்கொள்
கண் நுதலோன் நண்ணும் இடம் அண்ணல்வாயில்
நெடுவாயில் நிறை வயல் சூழ் நெய்தல்வாயில்
நிகழ் முல்லைவாயிலொடு ஞாழல்வாயில்
மடு ஆர் தென்மதுரைநகர் ஆலவாயில்
மறிகடல் சூழ் புனவாயில் மாடம் நீடு
குடவாயில் குணவாயில் ஆன எல்லாம்
புகுவாரைக் கொடுவினைகள் கூடா அன்றே.

பொழிப்புரை :
கடுக்காயைத் தின்னும் வாயினராகிய சமணரை நீக்கி என்னை ஆட்கொண்ட கண்ணுதற் கடவுளாகிய 
சிவ பெருமான் விரும்பித் தங்கும் இடங்களாகிய அண்ணல்வாயில், நெடுவாயில், பயிர் நிறைந்த, வயல் 
சூழ்ந்த நெய்தல்வாயில், நிலவும் முல்லைவாயில், ஞாழல்வாயில், வைகை நீர் பொருந்திய அழகிய 
மதுரை நகரத்து ஆலவாயில், அலை எழுந்து மடங்கும் கடல் சூழ்ந்த புனவாயில், மாடங்கள் உயர்ந்து 
தோன்றும் குடவாயில், குண வாயில், ஆகிய இவற்றுள் எல்லாம் புகுந்து வணங்குவாரைக் 
கொடுவினைகள் ஏதும் ஒரு நாளும் பற்றாது. 

இப்பாடலில் "வாயில்" என்று முடியும் தலங்களை வகுத்து அப்பர் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. நாக்கின் 
சுவையறியும் உணர்வு ஆற்றலைக் கெடுக்கும் பொருட்டு சமணர்கள் கடுக்காயை அவ்வப்பொழுது 
வாயிலிட்டுத் தின்பதை பழக்கமாகக் கொண்டிருந்ததைக் குறிப்பிடும் வகையில் இப்பதிகப் பாடலை 
கடு வாயர்தமை என்று ஆரம்பித்து அப்பர் பாடியுள்ளார். சமண சமயத்தைச் சார்ந்திருந்த அவரை 
சூலை நோயைக் கொடுத்து ஆட்கொண்டு சைவத்திற்கு மாற்றியதைக் குறிப்பிடுகிறார்.

கோவில் அமைப்பு: ஆலயத்திற்கு இராஜ கோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. முகப்பு வாயில் கடந்து உள்ளே சென்றால் நேரே நந்தியெம்பெருமான் காணப்படுகிறார். அதை அடுத்து இறைவன் கருவறைக்குச் செல்லும் 2-வது நுழைவாயில் உள்ளது. நுழைவாயிலுக்கு மேலே சுதை வடிவில் இறைவன் ரிஷபத்தின் மீது அம்பிகையுடன் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். உள்ளே கருவறையில் இறைவன் ருத்திராட்சப் பந்தலின் கீழ் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். வெளிப் பிராகாரத்தில் கன்னி மூலையில் விநாயகர் தனி சந்நிதியில் உள்ளார். அதையடுத்து மேற்கு வெளிப் பிராகாரத்தில் சுப்பிரமணியர் சந்நிதி, பைரவர் சந்நிதி ஆகியவை உள்ளன. சனீஸ்வரருக்கும் தனி சந்நிதி இவ்வாலயத்தில் உள்ளது. வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது தெற்கிலிருந்தும் இறைவன் கருவறைக்குச் செல்ல ஒரு வாயில் உள்ளது.

நெய்தல்வாயில் முனிவாசகசுவாமி ஆலயம் புகைப்படங்கள்

முகப்பு வாயில்

முகப்பு வாயில் கடந்து ஆலயத்தின் தோற்றம்

ஆலயம் உட்புறத் தோற்றம்

அம்பாள் மதுரபாஷிணி

செல்வ விநாயகர் சந்நிதி

சுப்பிரமணியர் சந்நிதி