தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

திருமூலட்டானேஸ்வரர் திருக்கோவில், தெள்ளாறு


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்தெள்ளாறு
இறைவன் பெயர்திருமூலட்டானேஸ்வரர்
இறைவி பெயர்அகிலாண்டேஸ்வரி
பதிகம்அப்பர் (6-71-10), சுந்தரர் (7-92-9)
எப்படிப் போவது வந்தவாசி - திண்டிவனம் பாதையில் 8 கி.மி. தொலைவில் தெள்ளாறு உள்ளது. தெள்ளாறு பேருந்து நிறுத்தத்திற்கு அருகே கோவில் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு திருமூலட்டானேஸ்வரர் திருக்கோவில்
ஈஸ்வரன் கோவில் தெரு
தெள்ளாறு
தெள்ளாறு அஞ்சல்
வந்தவாசி வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம்
PIN - 604406

காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை ஒரு கால பூஜை மட்டும் நடைபெறுகிறது.

தெள்ளாறு வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 10-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் அப்பர் திருப்பூந்துருத்தியில் தங்கியிருந்த போது பாடிய பதிகமாகும்.

நள்ளாறும் பழையாறும் கோட்டாற்றோடு    (6-71-10)
நலம் திகழும் நாலாறும் திருவையாறும்
தெள்ளாறும் வளைகுளமும் தளிக்குளமும் நல்
இடைக்குளமும் திருக்குளத்தோடு அஞ்சைக்களம்
விள்ளாத நெடுங்களம் வேட்களம் நெல்லிக்கா
கோலக்கா ஆனைக்கா வியன்கோடிகா
கள் ஆர்ந்த கொன்றையான் நின்ற ஆறும்
குளம் களம் கா என அனைத்தும் கூறுவோமே.

பொழிப்புரை : 
நள்ளாறு, பழையாறு, கோட்டாறு, நலம் திகழும் நாலாறு, திருவையாறு, தெள்ளாறு, 
வளைகுளம், தளிக்குளம், நல்ல இடைக்குளம், திருக்குளம், அஞ்சைக்களம், 
குறையாத சிறப்புடைய நெடுங்களம், வேட்களம், நெல்லிக்கா, கோலக்கா, 
ஆனைக்கா, பரந்து திகழும் கோடிகா என்றெல்லாம் தேன் நிறைந்த கொன்றைப் பூ மாலை 
அணிந்த சிவபெருமான் விளங்கும் ஆறு, குளம், களம், கா ஆகிய எல்லாவற்றையும் கூறுவோம் .

சுந்தரரின் 7-ம் திருமுறையில் 92-வது பதிகத்தில் 9-வது பாடலிலும் இத்தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் திருப்புக்கொளியூர் (அவினாசி) தலத்திற்குரிய பதிகமாகும்.

நள்ளாறு தெள்ளாறு அறரத்துறைவாய் எங்கள் நம்பனே   (7-92-9)
வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய்
புள் ஏறு சோலைப் புக்கொளியூரில் குளத்து இடை
உள் ஆடப்புக்க மாணி என்னைக் கிறி செய்ததே
பொழிப்புரை :
திருநள்ளாறு, தெள்ளாறு, திரு அரத்துறைகளில் உள்ள நம்பனே, 
வெள்ளாடையை விரும்பாது, புலித்தோல் ஆடையை விரும்புபவனே, 
பறவைகள் தங்கும் சோலைகளையுடைய திருப்புக்கொளியூரில் உள்ள 
குளத்தில் உள்ளே முழுகப் புகுந்த அந்தணச் சிறுவன் செய்த மாயம் யாது?

கோவில் அமைப்பு: கிழக்கு நோக்கிய இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயில் மேல்புறம் ரிஷபாரூடர், முருகர், விநாயகர், அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகியோரின் சுதைச் சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. மூலவர் கருவறையில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அம்பாள் அகிலாண்டேஸ்வரி தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். உள் சுற்றுப் பிராகாரத்தில் பைரவர் காட்சி தருகிறார். சனீஸ்வர பகவானுக்கு தனி சந்நிதி உள்ளது.

நமிழக வரலாற்றில் தெள்ளாறு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஊராகும். தமிழக வரலாற்றை மாற்றிய இரு முக்கியமான போர்கள் தெள்ளாறை மையமாக வைத்து நடந்துள்ளன. வரலாற்றில் எத்தனையோ போர்கள் நடந்திருந்திருந்தாலும், சில போர்களால் தமிழகத்தின் வரலாறே மாறியுள்ளது, அப்படியான போரில் குறிப்பிட்டு நாம் பார்க்க வேண்டியது "தெள்ளாற்றுப் போர்". இந்த இடத்தில் நடந்த இரு பெரும் போர்களால் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

முதல் போர்: பல்லவர்கள் காஞ்சியை தலைநகராக கொண்டு கி.பி. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 850 வரை சுமார் அறுநூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் வலிமையுடன் ஆட்சி புரிந்தவர்கள். இவர்களை அழிக்க எத்தனையோ போர்கள் நடந்திருந்தாலும், குறிப்பாக சோழரும், பாண்டியரும் ஒன்றாக இணைந்து பல்லவ பேரரசின் சாம்ராஜ்யத்தை அழிக்க நினைத்தது இந்த தெள்ளாறு தலத்தில் தான், பாண்டியர்கள், சோழர்கள் அங்கும் இங்குமாய் சிற்றசர்களாகவே இருந்த காலத்தில் பல்லவ நாட்டை ஆட்சி செய்த வந்த பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 825 to 850). ,இங்கு நடந்த போரில் சோழர் மற்றும் பாண்டிய கூட்டுப் படையை மூன்றாம் நந்திவர்மன் எதிர் கொண்டு அதில் வெற்றியும் கண்டான், அதுமட்டுமல்லாது அவர்களை கடம்பூர், வெறியலூர், வெள்ளாறு, பழையாறு ஆகிய இடங்களில் எதிர்கொண்டு பாண்டிய நாட்டு எல்லை வரை ஓட ஓட விரட்டினான், சோழர்கள் பல்லவர்களுக்கு கப்பம் கட்ட உடன்பட்டனர். அது முதல் நந்திவர்மன் "தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்" என போற்றப்பட்டான். இந்த போர் குறித்து ஏராளமான கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன, அவன் மீது பாடப்பெற்ற "நந்திக் கலம்பகத்தில்" இந்த தெள்ளாற்று வெற்றியினை பலவாறு புகழந்துரைக்கிறார்கள் . இந்த போரின் வெற்றிக்குப் பிறகு பல்லவர்கள் பெரிதும் வலிமை பெற்றனர், இறுதிக்காலம் வரை பகைவர்கள் நந்திவர்மனை கண்டு அஞ்சியே இருந்தனர். பல்லவர்கள் தங்கள் வலிமையை நிலைநிறுத்திய போராக இது விளங்கியது.

இரண்டாவது போர்: அடுத்தாக வடக்கே கங்கை வரையும், தெற்கே கடல் கடந்து கடாரம் வரை ஆட்சி புரிந்த சோழப் பேரரசு - விஜயலாயன் தொடங்கி,ராஜ ராஜன் சோழன், ராஜேந்திர சோழன் என்று புகழின் உச்சிக்கே சென்ற சோழர்கள் பேரரசு தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போனது இந்த தெள்ளாற்றில் நடந்த போரினால் தான். சோழர்கள் வீழ்ந்த இடம் இந்த "தெள்ளாறு" தான் . சோழப் பேரரசு மூன்றாம் ராஜ ராஜனின் ஆட்சியின் போது அழிவின் விளிம்பில் இருந்தது, தெற்கே பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியன் சற்றே வலிமை பெற்று, சோழர்களின் மீது போர் தொடுத்தான், பாண்டியனுக்கு அஞ்சிய சோழன் காஞ்சிபுரத்தை நோக்கி ஓடினான், அவனை காடவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் இந்த தெள்ளாற்றில் இடைமறித்து போர் புரிந்தான், அதில் மூன்றாம் ராஜ ராஜன் தோல்வியுற்றான்,அது சோழர்களுக்கு பெரும் பின்னடைவாய் இருந்தது. மூன்றாம் ராசா ராசனுக்கு பின், மூன்றாம் ராஜேந்திரன் சிறிது காலம் ஆட்சி புரிந்தான், பின்னர் சோழப் பேரரசு தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போனது !.

நந்திக் கலம்பகம்: நந்திக் கலம்பகம் தமிழில் உருவான கலம்பக இலக்கியங்களில் ஒன்று. இது காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன் குறித்துப் பாடப்பட்டது. இதுவே கலம்பக நூல்களில் காலத்தால் முற்பட்டு விளங்குவதாகும். மூன்றாம் நந்திவர்மனின் காலம் கி.பி.825 - 850 என்பதால் நந்திக் கலம்பகத்தின் காலம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு ஆகும். காஞ்சி, மாமல்லபுரம், மயிலை ஆகிய நகரங்கள் பற்றி இந்நூலில் சிறப்பாகப் போற்றப்பட்டுள்ளது. சிறந்த சொற்சுவை பொருட்சுவையோடு கற்பனை வளமும் நிறைந்த இந்நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை.

நந்திவர்மனிடம் இருந்து அரசைக் கவரும் நோக்கில் அவனது தம்பியால் ஒழுங்குசெய்யப்பட்டு அறம் பாடுதல் என்னும் முறையில் இப்பாடல்கள் பாடப்பட்டன. அறம் வைத்துப்பாடிய நூலின் பாடலைத் தற்செயலாகக் கேட்ட நந்தி வர்மன் அப்பாடலின் சிறப்பில் மனம் பறிகொடுத்து பாடல் முழுவதையும் பாட விரும்பினான். நூல் முழுவதையும் கேட்டால் மன்னன் உடல் எரிந்து இறப்பான் என்பதை அறிந்தும் தமிழின் மீதுள்ள தனியாத காதலால் உயிரையும் பொருட்படுத்தாது, எரியும் பந்தலின் கீழிருந்து கேட்டு உயிர் இறந்தான் என்று கூறப்படுகிறது

ஆதாரம்: ("வந்தவாசிப் போர் - 250" என்ற புத்தகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற செய்தி ):

தெள்ளாறு திருமூலட்டானேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

ஆலயத்தின் முகப்பு வாயில்

மூலவர் திருமூலட்டானேஸ்வரர்

திருமூலட்டானேஸ்வரர் சந்நிதி வாயில்

அம்பாள் அகிலாண்டேஸ்வரி சந்நிதி

அம்பாள் அகிலாண்டேஸ்வரி

பைரவர்

சனீஸ்வர பகவான் சந்நிதி