தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

விஷமங்களேஸ்வரர் திருக்கோவில், துடையூர்


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்துடையூர் (இன்றைய நாளில் தொடையூர் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்விஷமங்களேஸ்வரர், கடம்பவனேஸ்வரர்
இறைவி பெயர்மங்களநாயகி, வீரமங்களேஸ்வரி
பதிகம்அப்பர் (6-71-4)
எப்படிப் போவது திருச்சிராப்பள்ளியில் இருந்து முசிறி செல்லும் சாலை வழியில் திருவாசிக்கு முன்பாகவே துடையூர் உள்ளது. திருச்சியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவு. திருச்சியில் இருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன. துடையூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வாய்க்கால் பாலத்தைத் தாண்டி இடப்புறமாகத் திரும்பிச் சென்றால் ஆலயத்தை அடையலாம்.
ஆலய முகவரி அருள்மிகு விஷமங்களேஸ்வரர் திருக்கோவில்
துடையூர்
துடையூர் அஞ்சல்
மணச்சநல்லூர் வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
PIN - 621213

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணிமுதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

துடையூர் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 4-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்த பதிகப் பாடலில் "ஊர்" என்று வருவனவற்றை அப்பர் வகுத்து அருளிச் செய்துள்ளார்.

பிறையூருஞ் சடைமுடி எம்பெருமான் ஆரூர்	
பெரும்பற்றப் புலியூரும் பேராவூரும்
நறையூரும் நல்லூரும் நல்லாற்றூரும்
நாலூரும் சேற்றூரும் நாரையூரும்
உறையூரும் ஓத்தூரும் ஊற்றத்தூரும்
அளப்பூர் ஓமாம்புலியூர் ஒற்றியூரும்
துறையூரும் துவையூரும் தோழூர் தானுந்
துடையூரும் தொழ இடர்கள் தொடராவன்றே.

பொழிப்புரை :

பிறை தவழும் சடைமுடிச் சிவபெருமானுடைய ஆரூர், பெரும்பற்றப்புலியூர், பேராவூர், நறையூர், நல்லூர், நல்லாற்றூர், நாலூர், சேற்றூர், நாரையூர், உறையூர், ஓத்தூர், ஊற்றத்தூர், அளப்பூர், ஓமாம்புலியூர், ஒற்றியூர், துறையூர், துவையூர், தோழூர், துடையூர் என்னுமிவற்றைத் தொழத் துன்பங்கள் தொடர மாட்டா.

Thudaiyur route map

நிருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து
துடையூர் செல்லும் வழி வரைபடம்

காவிரி வடகரைத் தலங்களில் ஒன்றான திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) அருகில் அய்யனாற்றின் தென்கரையில் துடையூர் என்ற இந்த வைப்புத் தலம் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இவருக்கு விஷமங்களேஸ்வரர் என்றும், கடம்பவனேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பாள் வீரமங்களேஸ்வரி என்ற பெயருடன் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். உள் பிராகாரத்தில் விநாயகர், முருகர், சரஸ்வதி, வீணையுடன் நின்ற கோலத்தில் அருளும் வீணாதர தட்சிணாமூர்த்தி, கல்யாணசுந்தரர் ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை தன் கழுத்தில் நிறுத்தி உயிர்களைக் காப்பாற்றிய சிவபெருமான் கொடுமையான விஷத்தையே மங்களமாக மாற்றியதால் விஷமங்களேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தேவியின் பெயரும் மங்களநாயகி. இவர்களை வழிபட அனைத்து மங்களங்களும் கிட்டும் என்பது உறுதி. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் இத்தலத்தில் பஞ்சபாண்டவர்களில் ஒருவனான சகாதேவன் விஷமங்களேஸ்வரரை வழிபட்டு, ஜோதிடக் கலையில் தலை சிறந்த நிபுணனாகத் திகழ்ந்தான். துரியோதனின் மனைவி பானுமதி இத்தலத்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றதாகக் கூறப்படுகிறது. அசல நிசுமித்ர மகரிஷி, இன்றும் தினந்தோறும் இத்தல இறைவனை வழிபட்டு வருவதாக ஐதீகம் உண்டு.

கருவறை வாயிலின் இருபுறத்திலும் சுமார் எட்டு அடி உயரத்தில் துவாரபாலகர்கள் கம்பீரமான தோற்றத்துடன் காட்சி தருகின்றனர். கிழக்கு நோக்கிய கருவறையில் விஷமங்களேஸ்வரர் லிங்க உருவில் அருள்பாலிக்க, மகாமண்டபத்தில் தெற்கு நோக்கி மங்களநாயகியின் சந்நதி அமைந்துள்ளது. ஆலயத்திற்குள் நுழையும் போதே இடப்புறம் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக அமர்ந்த நிலையில், நான்கு கரங்களுடன், பின் வலக்கரத்தில் பிரயோகச் சக்கரத்துடன் திருமால் காட்சி தருகிறார். பொதுவாக சிவாலயங்களில் கருவறையை நோக்கி இருபுறங்களில் சூரிய- சந்திரர்கள் காட்சி தருவர். இங்கு சூரியன் இருக்க வேண்டிய இடத்தில் மகாவிஷ்ணு சூரிய நாராயணராக தேவியரோடு காட்சி தருவது அரிய அமைப்பாகும். சூரியபகவான் திருமால் அம்சமாக, சூரிய நாராயணர் என்றே போற்றப்படுகிறார்.

கருவறையை வலம் வரும்போது தெற்கு கோஷ்டத்தில் வீணையை ஏந்தி, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம். பின் னிரு கரங்களில் மான், மழு ஏந்தி, முன்னிரு கரங்களால் வீணையை மிட்டி அந்த நாதத்தில் மெய் மறந்த நிலையில் காட்சி தரும் தட்சிணாமூர்த்தியை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம். இவர் "திகசண்டளா வீணா தட்சிணாமூர்த்தி" எனப்படுகிறார். லால்குடி சப்தரிஷீஸ்வரர் ஆலயத்திலும் இதேபோன்ற வீணா தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம். கருவறையின் பின்புற கோஷ்டத்தில் சிவபெருமானின் 64 திரு மேனிகளில் ஒன்றான உமா ஆலிங்கன மூர்த்தியை தரிசிக்கலாம். சிவபெருமான், வலது கையால் சின் முத்திரை காட்டியும் இடதுகையால் பார்வதி தேவியை அணைத்தபடியும் அபூர்வமாக காட்சியளிக்கிறார்.

ஈசன் தனது இடது பாதத்தின் சுண்டுவிரலை தேவியின் வலது பாதத்தின் மீது வைத்திருப்பது போன்று நுணுக்கமாக வடிக்கப்பட்டுள்ளது, இச்சிலை. இந்த உமா ஆலிங்கன மூர்த்தியை வழிபட மணப்பேறு, மகப்பேறு கிட்டும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். தொடர்ந்து மேற்கே, தனிச் சந்நதியில் லட்சுமி நாராயணர், கருவறையின் வட கோஷ்டத்தில் பிரம்மா, சரஸ்வதி, துர்க்கை சந்நதிகள் உள்ளன. அனைத்துச் சிற்பங்களும் கலைநயம் ததும்ப காட்சியளிக்கின்றன. ஆலயத்திற்கு வெளியே நாக தோஷங்களை நீக்கும் பாம்புப் புற்று காணப்படுகிறது. நல்ல வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள், ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்தன்றும் பாம்புப் புற்றுக்கு உரித்தான விஷ்ணு நட்சத்திர தேவதையையும் காளிங்கன், -சங்கமவள்ளி என்ற நாகதேவதையையும் வழிபட கல்விக்குரிய நிரந்தர பணி கிடைக்கும்.

மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், ஊதுவத்தி ஆகிய பூஜைப் பொருட்களால் வழிபடுகிறார்கள். ஜாதகத்தில் செவ்வாய் தோஷமுள்ளவர்கள் இத்தல இறைவியான மங்களாம்பிகையை செவ்வாய் தோறும் செவ்வரளி மலர் மாலைகள் சூட்டி வழிபட, தோஷங்கள் நீங்குகின்றன. பக்தர்கள் குழந்தைகளுக்கு அரைஞாண் கயிறு அணிவிக்கும் சடங்கை இங்குதான் நடத்துகின்றனர். ஆலயத்தின் கிழக்கே எழுந்தருளியுள்ள வாத முனீஸ்வரர், நரம்பு மற்றும் வாத சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும் அற்புத சக்தி வாய்ந்தவராக வழிபடப்படுகிறார். அவ்வாறு நோயுற்றவர்கள் கோயில் முகப்பிற்கு எதிரேயுள்ள இவரை வழிபட்ட பின்னரே ஆலயத்திற்குள் செல்கின்றனர். செவ்வாய், சனி அமாவாசை, பௌர்ணமி நாட்களில் வாத முனிக்கு தைல அபிஷேகம் நடக்கிறது. பிரசாதமான அபிஷேகத் தைலம் தினமும் கோயிலில் பக்தர்களுக்கு கிடைக்கும்.

இத்தலம் ஒரு விஷக்கடி நிவர்த்தி தலகாக கருதப்படுகிறது. இவ்வூரில் விஷஜந்துக்கள் யாரையும் தீண்டுவதில்லை என்று கூறப்படுகிறது.இத்தலத்தில் எழுந்தருளியுள்ள விஷமங்களேஸ்வரரை ஒரு தாம்பாளத்தில் 12 தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால் விஷக்கடி துன்பங்கள் மற்றும் விஷக்கடியை விட கொடியதாய் கருதப்படும் பகைமை, குரோதம், விரோதம், பொறாமை, பேராசை, வன்முறை போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நிவர்த்தி பெறக்கூடும். மேலும் இங்குள்ள வீணாதர தட்சிணாமூர்த்தியை வழிபட தல்ல கல்வியறிவு பெற்றிடலாம்.

கோவிலைப் பற்றிய தகவல்கள் மூலம் அமானுஷ்யம்