தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில், திருவேகம்பத்து


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவேகம்பத்து
இறைவன் பெயர்ஏகாம்பரேஸ்வரர்
இறைவி பெயர்சிநேகவல்லி
பதிகம்அப்பர் (6-70-4)
எப்படிப் போவது காளையார்கோவில் - திருவாடானை சாலையில் திருவேகம்பத்து உள்ளது. சாலையோரத்தில் கோயில் உள்ளது. சிவகங்கை, தேவகோட்டை, திருவாடானை, காளையார்கோவில் முதலிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
ஆலய முகவரி அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில்
திருவேகம்பத்து
திருவேகம்பத்து அஞ்சல்
திருவாடானை வட்டம்
ராமநாதபுரம் மாவட்டம்
PIN - 623408

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்

திருவேகம்பத்து வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

அப்பரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 4-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் திருப்புகலூர் தலத்தில் தங்கியிருந்த போது அப்பர் பாடிய பதிகமாகும்.

எச்சிலிளமர் ஏமநல்லூர்
இலம்பையங்கோட்டூர் இறையான்சேரி
அச்சிறுபாக்கம் அளப்பூர் அம்பர்
ஆவடுதண்துறை அழுந்தூர் ஆறை
கைச்சினம் கற்குடி கச்சூர் ஆலக்
கோயில் கரவீரம் காட்டுப்பள்ளி
கச்சிப் பலதளியும் ஏகம்பத்தும்
கயிலாயநாதனையே காணலாமே.

பொழிப்புரை :
எச்சில் இளமர், ஏமநல்லூர், இலம்பையங்கோட்டூர், இறையான்சேரி, அச்சிறுபாக்கம், 
அளப்பூர், அம்பர், ஆவடுதுறை, அழுந்தூர், ஆறை, கைச்சினம், கற்குடி, கச்சூர் ஆலக்கோயில், 
கரவீரம், காட்டுப்பள்ளி, கச்சிப்பலதளி, ஏகம்பம் இவற்றில் கயிலாய நாதனைக் காணலாம் 

கோவில் அமைப்பு: நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு வரும் வைப்புத் தலக் கோவில்களில் திருவேகம்பத்து ஏகாம்பரேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். காஞ்சிபுரத்திலுள்ள ஏகாம்பரநாதர் ஆலயத்தை நினைவூட்டும் வகையில், பாண்டிய நாட்டில் உள்ள தலமே இந்த திருவேகம்பம் / திருவேகம்பத்து ஆகும். இதனாலேயே இவ்வூர் தட்சிண காஞ்சி என்று அழைக்கப்படுகிறது. மூன்று நிலை கிழக்கு நோக்கிய இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. இத்தலத்தில் காணப்படும் இரண்டு விநாயகர் சிற்பங்கள், நாகருடன் உள்ள முருகர், கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி ஆகியவை கலை நுணுக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. அம்பாள் சிநேகவல்லி தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். இத்தலத்திலுள்ள ஒரு விநாயகர் குபேர கணபதி என்று அழைக்கப்படுகிறார்.

இராவணன் வழிபட்டதாகச் சொல்லப்படும் இக்கோயிலில் முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன், இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன், முதலாம் சடைய வர்மன் விக்கிரம பாண்டியன், முதலாம் சடையவர்மன் வீரபாண்டியன் ஆகியோர் காலத்திய கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுக்களில் இறைவன் "ஏகம்பமுடைய நாயனார்", "திருவேகம்பமுடைய தம்பிரானார்" என்று குறிக்கப்பட்டுள்ளார்.

திருவேகம்பத்து ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

ஏகாம்பரேஸ்வரர் சந்நிதி தோற்றம்

3 நிலை இராஜகோபுரம்

அம்பாள் சிநேகவல்லி சந்நிதி தோற்றம்

விநாயகர்

முருகர் மற்றும் நாகர் சிலை

விநாயகர்

கருவறை விமானம்

கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி

வள்ளி தெய்வானையுடன் முருகர்

நவக்கிரக சந்நிதி

இரு மனைவியருடன் சூரியன்

பலிபீடம், நந்தி