தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

அபயவரதேஸ்வரர் திருக்கோவில், திருவாதிரையான்பட்டிணம்


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவாதிரையான்பட்டிணம் (இன்றைய நாளில் அதிராம்பட்டிணம் என்று பெயர்)
இறைவன் பெயர்அபயவரதேஸ்வரர்
இறைவி பெயர்சுந்தரநாயகி
பதிகம்சுந்தரர் (7-31-6)
எப்படிப் போவது பட்டுக்கோட்டையில் இருந்து 14 கி.மி. தொலைவில் அதிராம்பட்டினம் உள்ளது. அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து நேர் எதிர்புறத்தில் செல்லும் சேது ரோடில் சிறிது தூரம் சென்றால் சாலையோரத்தில் வலதுபுறம் "அபய வரதேஸ்வர சுவாமி" என்ற வளைவு உள்ளது. அதன் வழியே சென்றால் கோவிலை அடையலாம்
ஆலய முகவரி அருள்மிகு அபயவரதேஸ்வரர் திருக்கோவில்
அதிராம்பட்டிணம்
அதிராம்பட்டிணம் அஞ்சல்
வழி பட்டுக்கோட்டை
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 614701

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்

திருவாதிரையான்பட்டிணம் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

சுந்தரரின் 7-ம் திருமுறையில் 31-வது பதிகத்தில் 6-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் திருஇடையாறு தலத்திற்கான சுந்தரர் பாடிய பதிகமாகும்.

திங்களூர் திருவாதிரையான்பட்டினம் ஊர்
நங்களூர் நறையூர் நனி நால் இசை நாலூர்
தங்களூர் தமிழான் என்று பாவிக்க வல்ல
எங்களூர் எய்தமான் இடையாறு இடைமருதே.

பொழிப்புரை :
எங்கள் ஊர் என்றும் சொல்லுமாறு யாவராலும் அடையப்படும் பெருமானாகிய 
இறைவனுக்கு உரியதாய் உள்ள ஊர்கள் திங்களூர், திருவாதிரையான்பட்டினம்
என்னும் ஊர், நறையூர், நாலூர், இடையாறு, இடைமருது என்னும் தலங்களே.

முன்னொரு காலத்தில், அசுரர்களால் துரத்தியடிக்கப்பட்ட தேவர்களும், முனிவர்களும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் புகுந்தனர். பிரதோஷ காலத்திலும், திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளிலும், சிவபெருமான் உலாவரும் லோகங்களில் திருவாதிரை நட்சத்திர மண்டலமும் ஒன்று. இந்த மண்டலத்தில் நுழையவே அசுரர்கள் பயப்படுவர். அதே நேரம் அங்கு சென்று சரணடைந்தவர்களை அவர் அபயம் தந்து காப்பாற்றுவார். இதனால் சிவனுக்கு அபயவரதீஸ்வரர் என்று பெயர். எனவே திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வது சிறந்த பலன் தரும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், இராகு-கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் வாழ்நாளில் அடிக்கடி வழிபட வேண்டிய சிறந்த தலம் இது. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு எந்த தோஷத்தினால் திருமணத்தில் தடை இருந்தாலும் இங்கு வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும்.

கோவில் அமைப்பு: தேவாரம் பாடப்பெற்ற காலத்தில் திருவாதிரையான்பட்டிணம் என்று பெயர் பெற்றிருந்த இத்தலம் பாண்டிய மன்னன் அதிவீரராம பாண்டியனால் பல திருப்பணிகளைக் கண்டதாகும். அதனால் அதிவீரராமன் பட்டினம் என்று பெயர் மாறி, இன்றைய நாளில் அதிராம்பட்டினம் என்று அழைக்கப்படுகிறது. நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு வரும் வைப்புத் தலக் கோவில்களில் திருவாதிரையான்பட்டினம் அபயவரதேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். கிழக்கு திசையில் இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுர வாயில் கடந்து உள்ளே சென்றவுடன் கொடிமரத்தையும், நந்தி மண்டபத்தையும் காணலாம். உள் வாயிலில் நுழைந்தால் நேரே மூலவர் அபயவரதேஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. மூலவர் கருவறை விமானத்தில் தட்சிணாமூர்த்தி தன் சீடர்களுடன் காணப்படும் சுதைச் சிற்பம் அழகாக அமைந்துள்ளது. கடற்கரையில் அமைந்துள்ள இத்தலத்தில் அம்பாள் சுந்தரநாயகி சந்நிதி கடலை நோக்கி அமைந்திருப்பது விசேஷம். உள் சுற்றுப் பிராகாரத்தில் நவக்கிரக சந்நிதியும் உள்ளது.

திருக்கடையூருக்கு அடுத்தபடியாக எமபயம் போக்கும் தலமாக இத்தலம் விளங்குகிறது. தீராத நோயால் அவதிப் படுபவர்கள், எமபயம் உள்ளவர்கள், ஆயுள் விருத்தி வேண்டுபவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். ஆயுஷ் ஹோமமும், மிருத்யுஞ்ஜய ஹோமமும் திருக்கடையூருக்கு அடுத்தபடியாக இங்கு அதிக அளவில் செய்யப்படுகிறது. இந்த நட்சத்திர பெண்களுக்கு எந்த தோஷத்தினால் திருமணத்தில் தடை இருந்தாலும் இங்கு வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும்.


திருவாதிரையான்பட்டினம் அபயவரதேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

ஆலயத்தின் இராஜகோபுரம் தோற்றம்

ஆலயத்தின் நுழைவாயில்

வெளிப் பிராகாரத்தில் கொடிமரம், நந்தி மண்டபம்

மூலவர் அபயவரதேஸ்வரர்

அம்பாள் சுந்தரநாயகி

மூலவர் கருவறை விமானத்தில் தட்சிணாமூர்த்தி

அம்பாள் கருவறை விமானம்

துர்க்கை

நவக்கிரக சந்நிதி