தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

திந்திரிணீஸ்வரர் திருக்கோவில், திண்டீச்சரம்


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திண்டீச்சரம் (இன்றையநாளில் திண்டிவனம் என்ற ஊராகும்)
இறைவன் பெயர்திந்திரிணீஸ்வரர்
இறைவி பெயர்மரகதவல்லி, மரகதாம்பாள்.
பதிகம்அப்பர் (6-7-8), (6-70-9)
எப்படிப் போவது சென்னை - திருச்சி தேசீய நெடுஞ்சாலையில் செல்லும் எல்லா பேருந்துகளும் திண்டிவனம் வழியாகச் செல்கின்றன. ஊரின் மேம்பாலத்தைக் கடந்து ஊருக்குள் சென்றால் ஈஸ்வரன் கோவில் தெருவில் ஆலயம் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு திந்திரிணீஸ்வரர் திருக்கோவில்
ஈஸ்வரன் கோவில் தெரு
திண்டிவனம்
விழுப்புரம் மாவட்டம்
PIN - 604001

இவ்வாலயம் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திண்டீச்சரம் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 7-வது பதிகத்தில் 8-வது பாடலிலும், 6-ம் திருமுறை 70-வது பதிகம் 9-வது பாடலிலும் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

தெள்ளும் புனல் கெடில வீரட்டமும்		(6-7-8)
திண்டீச்சரமும் திருப்புகலூர்		 
எள்ளும் படையான் இடைத்தானமும்
ஏயீச்சுரமும் நல் ஏமம் கூடல்
கொள்ளும் இலயத்தார் கோடிகாவும்
குரங்கணின் முட்டமும் குறும்பலாவும்
கள் அருந்தத் தெள்ளியார் உள்கி ஏத்தும்
காரோணம் தம்முடைய காப்புக்களே.

பொழிப்புரை :	www.thevaaram.org	
பூதப்படையை உடையவரும், கூத்தினை நிகழ்த்துபவரும், ஆகிய பெருமானார் 
உகந்தருளியிருக்கும் திருத்தலங்கள் அதிகை வீரட்டம், திண்டீச்சரம், புகலூர், 
இடைத்தானம், ஏயீச்சுரம், ஏமம், கூடல், கோடிகா, குரங்கணில் முட்டம், குறும்பலா, 
திருவடி ஞானம் பெறச் சத்திநி பாதம் பெற்றவர் தியானித்துத் துதிக்கும் 
நாகை குடந்தைக் காரோணங்கள் என்பனவாகும் .
----------------------------------------------
திண்டீச்சரம் சேய்ஞலூர் செம்பொன்பள்ளி	(6-70-9)
தேவூர் சிரபுரம் சிற்றேமம் சேறை		
கொண்டீச்சரம் கூந்தலூர் கூழையூர் கூடல்
குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு
அண்டர் தொழும் அதிகைவீரட்டானம்
ஐயாறு அசோகந்தி ஆமாத்தூரும்
கண்டியூர்வீரட்டம் கருகாவூரும்
கயிலாயநாதனையே காணலாமே.

பொழிப்புரை :
திண்டீச்சரம், சேய்ஞலூர், செம்பொன்பள்ளி, தேவூர், சிரபுரம், சிற்றேமம், சேறை, 
கொண்டீச்சரம், கூந்தலூர், கூழையூர், கூடல், குருகாவூர் வெள்ளடை, குமரி, கொங்கு, 
தேவர்கள் தொழும் அதிகை வீரட்டம், ஐயாறு, அசோகந்தி, ஆமாத்தூர், கண்டியூர் வீரட்டம், 
கருகாவூர் ஆகிய இடங்களில் கயிலாயநாதனைக் காணலாம் .

முற்காலத்தில் இத்தலம் இருக்கும் பகுதி முழுவதும் புளியங்காடாக இருந்தது. வடமொழியில் "திந்த்ரிணீ" என்றால் தமிழில் புளி என்று பொருள். திந்த்ரிணீ காட்டில் இத்தல இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால் அவர் திந்திரிணீஸ்வரர் என்று பெயர் பெற்றார். இவ்வாலயம் கிழக்கு நோக்கிய ஓர் உயர்ந்த இராஜகோபுரத்துடன் காடப்படுகிறது. கோபுர வாயில் கடந்து உள்ளே சென்றால் விசாலமான வெளி முற்றம் உள்ளது. இந்த வெளி முற்றத்தில் பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. இதைக் கடந்து நேரே உள் சென்றால் மூலவர் சந்நிதி அமைந்துள்ளது. அம்பாள் மரகதாம்பாள் சந்நிதி வெளிப் பிராகாரம் சுற்றி வரும் போது தனி சந்நிதியாக உள்ளது. மேலும் வெளிப் பிராகாரத்தில் நவக்கிரக சந்நிதி, திருமூலநாதர் சந்நிதி, பைரவர் சந்நிதி ஆகியவையும் அமைந்துள்ளன. பைரவர் சிற்பம் மிக அழகாக இருக்கிறது.

கோயில் கீழ்ப்பகுதி கருங்கல்லாலும் மேற்பகுதி செங்கல்லாலும் கட்டப்பட்ட கட்டுமானமுடையது. இத்தல இறைவனை வால்மீகி, வியாசர், டிண்டி, முண்டி, கில்லி, கில்லாலி ஆகிய முனிவர்கள் பூஜித்துள்ளனர்.

திண்டீச்சரம் திந்திரிணீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

ஆலயத்தின் இராஜகோபுரம்

கோபுரம் கடந்து உள்ளே நோற்றம்

கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம்

நவக்கிரக சந்நிதி

அம்பாள் மரகதாம்பிகை சந்நிதி

திருமூலநாதர் சந்நிதி