தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

கைலாசநாதர் திருக்கோவில், திங்களூர்


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திங்களூர்
இறைவன் பெயர்கைலாசநாதர்
இறைவி பெயர்பெரியநாயகி
பதிகம்அப்பர் (6-25-3), சுந்தரர் (7-31-6)
எப்படிப் போவது திருவையாற்றில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் வரும் திருப்பழனம் (பாடல் பெற்ற தலம்) ஊரை அடுத்து சிறிது தூரம் சென்றால் இடதுபுறம் திங்களூர் செல்லும் சாலை பிரிகிறது. அதில் சென்று ஆலயத்தை அடையலாம். திருவையாற்றில் இருந்து சுமார் 4 கி.மி. தொலைவிலுள்ளது. திருவையாற்றில் இருந்து நகரப் பேருந்து வசதி உண்டு.
ஆலய முகவரி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில்
திங்களூர்
திருப்பழனம் அஞ்சல்
வழி திருவையாறு
திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 613204

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணிமுதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திங்களூர் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 25-வது பதிகத்தில் 3-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் திருவாரூர் தலத்திற்குரிய பதிகமாகும்.

தேரூரார் மாவூரார் திங்களூரார்	6-25-3 
திகழ்புன் சடைமுடிமேல் திங்கள் சூடிக்
கார் ஊரா நின்ற கழனிச் சாயல்
கண் ஆர்ந்த நெடுமாடம் கலந்து தோன்றும்
ஓர் ஊரா உலகு எலாம் ஒப்பக்கூடி
உமையாள் மணவாளா என்று வாழ்த்தி
ஆரூரா ஆரூரா என்கின்றார்கள்
அமரர்கள்தம் பெருமானே எங்கு உற்றாயே.

பொழிப்புரை :
தேரூர், மாவூர், திங்களூர் இவற்றில் உறைந்து திகழும் செஞ்சடை மீது பிறை சூடி, 
நீர் வளம் சான்ற வயல்களையும் கண்ணுக்கு மகிழ்ச்சி தரும் மாடங்களையும் உடைய 
ஒவ்வோர் ஊராக உலகிலுள்ளார் எல்லாம் உமையாள் கணவனே என்று வாழ்த்தி 
ஆரூரா ஆரூரா என்று அழைக்கின்றார்கள். அவர்களுக்குக் காட்சி வழங்காமல் நீ எங்கே உள்ளாய்?

சுந்தரரின் 7-வது திருமுறையில் 31-வது பதிகத்தில் 6-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் திருஇடையாறு தலத்திற்குரிய பதிகமாகும்

திங்களூர் திருவாதிரையான்பட்டினம் ஊர் 	7-31-6  
நங்களூர் நறையூர் நனி நாலிசை நாலூர்
தங்களூர் தமிழான் என்று பாவிக்க வல்ல
எங்களூர் எய்தம்மான் இடையாறு இடைமருதே.

பொழிப்புரை :
இறைவனை, தமிழில் விளங்குபவன்` என்று கருதும் நாங்கள் எங்களுக்குள் 
அளவளாவும் போது, எங்களை விட உயர்ந்த அடியவர்கட்கு உரிய ஊர் என்றும், 
எங்கள் ஊர் என்றும் சொல்லுமாறு யாவராலும் அடையப்படும் பெருமானாகிய 
இறைவனுக்கு உரியதாய் உள்ள ஊர்கள், திங்களூர், திருவாதிரையான் பட்டினம் 
என்னும் ஊர், நறையூர், மிகவும் பரவிய புகழினையுடைய நாலூர், இடையாறு, 
இடைமருது என்னும் இவைகளே.

தல வரலாறு: திருநாவுக்கரசர் திங்களூர் வரும் போது தமது பெயரில் பாடசாலை, கோசாலை, தர்மசாலை, தண்ணீர்ப்பந்தல், அன்னசாலை எனப்பலவும் கண்டு வியப்புறுகிறார். இவைகளை அமைத்தவர் அப்பூதி அடிகள் என்பதை அறிந்து அவர் வீட்டிற்குச் சென்றார். அப்பரை பெருமானுக்கு அமுது படைக்க அப்பூதி அடிகள் தனது மகனை குருத்து வாழை இலை பறித்து வர தோட்டத்திற்கு அனுப்புகிறார். மகன் வாழைத் தோட்டத்தில் பாம்பு கடித்து இறந்து விடுகிறான். மகன் இறந்தது தெரிந்தால் அப்பருக்கு அமுது படைப்பது தடைபெறும் என்று கருதிய அப்பூதி அடிகள் மகன் இறந்ததை மறைத்து அப்பரை உணவு உண்ண அழைக்கிறார். அப்பர் தம்முடன் மகனையும் உணவு அருந்த அழைக்க, அப்பூதி அடிகள் மகன் இறந்து விட்ட தகவலைச் சொல்கிறார். மகன் இறந்ததைக் கேட்ட அப்பர் பெருமான் "ஒன்று கொலாம்" என்று தொடங்கும் பதிகம் பாடி இறந்த மகன் உறக்கத்தில் இருந்து விழித்தவனைப் போல் எழச் செய்து உயிர்ப்பிக்கிறார். இந்த அற்புதம் நிகழ்ந்த தலம் திங்களூர் ஆகும்.

தலச்சிறப்பு: ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத்தன்று காலை உதயத்தில் 6 மணிக்கு சூரிய ஒளி லிங்கத்தின் மீது படுவதால் அன்று சூரிய பூஜையும், மறுதாள் பெளர்ணமி பிரதமையில் மாலை 6 மணிக்கு சந்திர ஒளி லிங்கத்தின் மீது படுவதால் அன்று சந்திர பூஜையும் நடைபெறும். இத்தலத்தில் சந்திர பகவானுக்கு தனி சந்நிதி உள்ளது. திங்களூரில் நாகம் தீண்டினால் பாம்பு கடிபட்டவருக்கு விஷம் ஏறாது என்பது தனிச் சிறப்பு. ஜாதகத்தில் சந்திர தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் அபிஷேகம், அர்ச்சனை, நெய் விளக்கு ஏற்றி சந்திர பகவானை வழிபட்டுப் பேறு பெறலாம். சந்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து கோயிலின் முன்புள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, பரிகாரம் செய்து கொள்வது இன்றும் நடைமுறையில் உள்ளது.

கோவில் அமைப்பு: கிழக்கு நோக்கி உள்ள ஆலயத்திற்கு தெற்கிலுள்ள வாயிலே பிரதான நுழைவாயிலாக உள்ளது. கருவறையில் இறைவன் கைலாசநாதர் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அம்பாள் பெரியநாயகி சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலுக்கு முன் சந்திர தீர்த்தம் உள்ளது. வெளிப் பிராகாரம் வலம் வரும்போது விஷம் தீர்த்த விநாயகர் சந்நிதி, சுப்பிரமணியர் சந்நிதி, கோஷ்டத்தில் அமர்ந்த நிலையில் தட்சிணாமூர்த்தி, கஜலெட்சுமி சந்நிதி மற்றும் சண்டிகேஸ்வரர் உடன் சண்டிகேஸ்வரி சந்நிதி, பைரவர் சந்நிதி ஆகியவை உள்ளன. இத்தலத்தின் ஷேத்திர பாலகரான சந்திரன் மேற்கு திசைநோக்கி இறைவனைப் பார்த்தபடி தனி சந்நிதியில் காட்சி தருகிறார்.

திருக்கோயில் உள்மண்டபத்தில் இடப்புறம் அப்பூதியடிகள், அவருடைய மனைவியார், மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு ஆகியோர் மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனிஉத்திரம், திருக்கார்த்திகை ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. குழந்தைகளுக்கு முதன் முதலாக அன்னம் ஊட்டுவதற்கு தமிழ்நாட்டில் மிகச் சிறந்த தலம் திங்களூர் கைலாசநாதர் கோயிலாகும்.

திங்களூர் கைலாசநாதர் ஆலயம் புகைப்படங்கள்

ஆலயத்தின் தெற்கு நுழைவாயில் பகுதி

ஆலயத்தின் உட்புறத் தோற்றம்

விஷம் தீர்த்த விநாயகர் சந்நிதி

கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி