தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

தர்மபுரீஸ்வரர் திருக்கோவில், தளிச்சாத்தங்குடி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்தளிச்சாத்தங்குடி (இன்றைய நாளில் வடகண்டம் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்தர்மபுரீஸ்வரர்
இறைவி பெயர்சுவர்ணாம்பாள்
பதிகம்அப்பர் (6-25-10)
எப்படிப் போவது திருவாரூர் - கும்பகோணம் சாலை வழியில் திருவாரூரில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் வடகண்டம் என்ற ஊரில் உள்ளது. கோவில் சாலை ஓரத்திலேயே உள்ளதால் எளிதில் கண்டு கொள்ளலாம்.
ஆலய முகவரி அருள்மிகு தர்மபுரீஸ்வரர் திருக்கோவில்
வடகண்டம்
திருக்கண்ணமங்கை அஞ்சல்
குடவாசல் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 610104

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தளிச்சாத்தங்குடி வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 25-வது பதிகத்தில் 10-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

நல்லூரே நன்றாக நட்ட மிட்டு		
நரையேற்றைப் பழையாறே பாய ஏறிப்
பல்லூரும் பலிதிரிந்து சேற்றூர் மீதே
பலர்காணத் தலையாலங் காட்டினூடே
இல்லார்ந்த பெருவேளூர்த் தளியே பேணி
இராப்பட்டீச்சரம் கடந்து மணற்கால் புக்கு
எல்லாருந் தளிச்சாத்தங்குடியிற் காண
இறைப்பொழுதில் திருவாரூர் புக்கார் தாமே.

பொழிப்புரை :

நல்லூரில் நன்றாகக் கூத்து நிகழ்த்திப் பழையாறையை நோக்கி வெண்ணிறக் காளையை இவர்ந்து, பல ஊர்களிலும் பிச்சைக்காகத் திரிந்து, சேற்றூரில் பலர் காண நின்று, தலையாலங்காட்டினூடே மறைந்து நின்று, பெருவேளூர்க் கோயிலிலே விரும்பித் தங்கி, பட்டீச்சரத்தில் இராப்பொழுதைக் கழித்து மணற்காலில் நுழைந்து தளிச்சாத்தங்குடி வழியாக எல்லாரும் காணச் சென்று ஒரு நொடிப் பொழுதில் திருவாரூரில் எம் பெருமான் புகுந்தார் .

இந்த ஆலயத்திற்கு இராஜகோபுரமில்லை. சுற்றிலும் மதிற்சுவருடன் கிழக்கில் ஒரு முகப்பு வாயிலும் கொண்டு ஆலயம் அமைந்துள்ளது. முகப்பு வாயில் மேற்புறத்தில் சிவன் பார்வதி சுதைச் சிற்பம் உள்ளது. முகப்பு வாயில் கடந்து உள்ளே சென்றால் ஒரு பிராகாரத்துடன் ஆலயம் அமைந்திருக்கிறது. நேரே பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. ஆலயத்திற்கு தெற்குப் பக்கத்திலும் ஒரு வாயில் உள்ளது. பிராகாரம் சுற்றி வரும் போது மேற்குச் சுற்றில் விநாயகர் சந்நிதியும் வள்ளி தெய்வானை சமேத முருகர் சந்நிதியும் உள்ளன. பலிபீடம், நந்தி மண்டபம் கடந்து உள் வாயில் வழியே புகுந்து இறைவன் கருவறையை அடையலாம். இறைவன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இறைவி சுவர்ணாம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

பாடல் பெற்ற சிவஸ்தலமான திருக்கரவீரம் கோவில் இங்கிருந்து சற்றுத் தொலைவில் உள்ளது. அவ்வாலயத்தின் குருக்கள் தான் தளிச்சாத்தங்குடி கோவிலையும் ணேர்த்து கவனித்துக் கோள்கிறார். ஆகையால் முன்கூட்டியே திருக்கரவீரம் குருக்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த வைப்புத்தலக் கோவிலை தரிசிக்கலாம். தளிசாத்தங்குடி ஆலயத்தின் மெய்க்காப்பாளர் வீடு ஆலயத்திற்கு அருகில் உள்ளது. அவர் வீட்டை விசாரித்து அவர் மூலமும் கோவிலை திறந்து காட்டச் சொல்லலாம்.


தளிச்சாத்தங்குடி தர்மபுரீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

ஆலயத்தின் வெளிப்புறத் தோற்றம்

ஆலயத்தின் முகப்பு வாயில்

ஆலயத்தின் உட்புறத் தோற்றம்

ஆலய பிராகாரம்

விநாயகர் சந்நிதி

முருகர் சந்நிதி

இறைவன் கருவறை விமானம்

இறைவி கருவறை விமானம்

மூலவர் தர்மபுரீஸ்வரர்